தமிழ் மக்களின் பிரச்சினை தனித்து தமிழ் மக்களின் பிரச்சினை என்று மட்டும் அடையாளப்படுத்த முடியாது-அ.அஸ்மின்
தமிழ் மக்களுக்கு மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வைக் கோரி மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மன்னார் பொதுவிளையாட்டு அரங்கு மைதானத்தில் நேற்று (21.03.14) காலை 10 மணி முதல் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் தனது கருத்துரையின்போது..
தமிழ் மக்களின் பிரச்சினை தனித்து தமிழ் மக்களின் பிரச்சினை என்று மட்டும் அடையாளப்படுத்த முடியாது. அது இந்த நாட்டில் ஒடுக்கப்படுகின்ற எல்லா மக்களினதும் பிரச்சினையாகவே இன்று மாறிவிட்டிருக்கின்றது. சிறுபான்மை சமூகங்கள் ஒடுக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது ஆளும் தரப்பிற்கு விசுவாசமில்லாத அனைத்து மக்களும் ஒடுக்கப்படுகின்றார்கள், வன்முறைகொண்டு அடக்கப்படுகின்றார்கள்.
இந்த இடத்தில்தான் சிறுபான்மை மக்களின் போராட்டம் ஐக்கியமாக முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக முன்வைக்க நாடுகின்றேன். தமிழ் மக்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழ் மக்கள், ஒடுக்கப்படுகின்ற சிங்கள மக்கள் என எல்லோரையும் இணைத்து இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும். அப்போது எல்லா சமூகங்களும் சமமாக வாழ்கின்ற ஒரு நல்ல நிலை உருவாகும்.
இன்று இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்ற காணாமல் போனோரின் உறவுகளின் வலிகளை நாங்களும் உணருகின்றோம். இது மனித அவலங்களை ஏற்படுத்தும் மோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புற்ற குற்றச்செயல்களாகும். காணாமல் போனவர்கள் விடயத்தில் தீர்க்கமான பதில் தரப்படவேண்டும். அதையும் தாண்டி சிறுபான்மை சமூகங்களுக்கு நிரந்தரத் தீர்வு தேவைப்படுகின்றது.
இந்த நாட்டின் பெரும்பான்மை சமூக அரசாங்கங்கள் படிப்படியாக சிறுபான்மை சமூகங்களுக்குத் தீர்வு தரவேண்டிய நிலைக்கு பல்வேறு அழுத்தங்களின் ஊடாக நகர்ந்து வருகின்றார்கள் என்று எனக்குத் தோன்றுகின்றது. ஆரம்பத்தில் சிறுபான்மையினர்க்கு பிரச்சினைகள் இல்லை என்றும் இந்த தேசத்தில் தீவிரவாத பயங்கரவாத பிரச்சினை இருக்கின்றது என்ற அரசாங்கங்கள் சிறுபான்மையினர்க்கு பிரச்சினை இருக்கின்றது இனப்பிரச்சினை இருக்கின்றது; என்று ஏற்றுக்கொண்டார்கள். யுத்தம் எல்லா சமூகங்களுக்கும் அழிவுகளை ஏற்படுத்தியது. மனித அவலங்களை ஏற்படுத்தியது விளைவாக மனிதம் அழிக்கப்பட்டது, மனிதம் இழக்கப்பட்டது. ஈற்றில் இது “மனிதாபிமான பிரச்சினை” என அடையாளம் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தம் காரணமாக குறித்த பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேவை என்ற அமைப்பில் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு” நியமிக்கப்பட்டது. எல்லோரும் அந்த ஆணைக்குழுவிற்கு எமது சாட்சியங்களை வழங்கினோம், அவர்களும் பரிந்துரைகளை முன்வைத்தார்கள். ஆனால் அந்தப் பரிந்துரைகள் அமுலாக்கப்படவில்லை, இன்று “சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. உள்நாட்டுப் பொறிமுறையை சீராக அமுலாக்கத் தவறியதன் காரணமாக சர்வதேச விசாரணை என்ற விடயம் இப்போது முனைப்புப் பெறுகின்றது. இதனை இந்த நாட்டின் அரசாங்கம் அறியாமல் இருக்கின்றது என்று கூற முடியாது மாறாக உணமையை மறைத்து, நியாயத்தை மறைத்து இந்த தேசத்தில் தொடர்ந்தும் அமைதியின்மையினை நிலைநிறுத்தி, மக்களை மோதவிட்டு அதனூடாக அரசியல் நடாத்தவே இந்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. உண்மைகள் எப்போது செத்துவிடுவதில்லை, இந்த நாட்டில் அமைதியை எதிர்பார்க்கும் அதனை இதயசுத்தியோடு தேடுகின்ற எல்லோரும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக நாமும் எமது போராட்டமும் வெற்றிபெறும். எனவே எமது மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து இந்த நாட்டில் அமைதி வேண்டும் இந்த நாட்டின் நலன் காக்கப்படவேண்டும், மனிதம் காக்கப்படவேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியை நோக்கி நாம் ஒற்றுமையோடு நகர்ந்தால் நிச்சயம் வெற்றியடைவோம் என்று இவிடத்தில் கூறி அல்லலுறும் எல்லோர்க்கும் அமைதி கிடைக்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்தார்
தமிழ் மக்களின் பிரச்சினை தனித்து தமிழ் மக்களின் பிரச்சினை என்று மட்டும் அடையாளப்படுத்த முடியாது-அ.அஸ்மின்
Reviewed by NEWMANNAR
on
March 22, 2014
Rating:

No comments:
Post a Comment