வன்னியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பதிலீடாக யாழிலிருந்து ஆசிரியர்கள் இடமாற்றம்.
வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து ஆசிரியர் பயிற்சி மற்றும் நிபந்தனை அடிப்படையில் இடமாற்றம்பெறும் ஆசிரியர்களின் வெற்றிடங்களுக்கு பதிலீடாக யாழ்.மாவட்டத்திலிருந்து ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப் பெருநிலப்பரப்பு பாடசாலைகளிலிருந்து 600 பேர் வரையில் ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கும் 200 ஆசிரியர்கள் வரையில் நிபந்தனை அடிப்படையிலும் விடுவிக்கப்படவுள்ளனர். மே மாதம் முதல் வாரத்தில் இவர்கள் விடுவிக்கப்படவிருப்பதால் 800 இற்குக் குறையாத எண்ணிக்கை அளவில் வன்னிப் பெருநிலப்பரப்புப் பாடசாலைகளுக்குப் பதிலீட்டு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படவேண்டும். இல்லாவிடில் வன்னிப் பெரு நிலப்பரப்புப் பாடசாலைகள் ஆசிரியர் ஆளணி இல்லாத நிலையில் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பதிலீடாக யாழ்.மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் சேவை மற்றும் கஷ்டப் பிரதேச சேவையைப் புரியாமல் உள்ளூரில் கடமையில் இருப்பவர்களிலிருந்தும் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வெளியேறுவோர் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் தேசிய டிப்ளோமா பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியோரிலிருந்தும் ஆசிரியர் ஆளணி திரட்டப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்து மே மாதம் வெளியேறவுள்ளவர்களுக்கு மத்தியில் நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகளால் இரு தினங்கள் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சை மூலம் தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நெகிழ்ச்சிப் போக்கு மற்றும் விதிவிலக்குகள் பக்கச்சார்புகள் இன்றி இந்த வருடம் மிகக் கண்டிப்பான முறையில் இடமாற்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படலாமெனக் கூறப்படுகின்றது.
வன்னியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பதிலீடாக யாழிலிருந்து ஆசிரியர்கள் இடமாற்றம்.
Reviewed by NEWMANNAR
on
March 21, 2014
Rating:

No comments:
Post a Comment