மன்னார் வளைகுடாவில் கடற்குதிரைகள் அருகிவருகின்றன; 25 வருடங்களில் முழுமையாக அழியும் அபாயம்
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடற்குதிரைகள் அரிதாகி வருவதால் உயிரியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் 21 தீவுகளும் அதை சுற்றியுள்ள கடல் உயிரின பெருக்கத்திற்கு ஆதாரமான பவளப் பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் அரிதான கடல் வாழ் உயிரினங்கள் ஏராளமாக இங்கு காணப்படுகின்றன.
உலகில் 33 வகையான கடற்குதிரைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மட்டும் ஐந்து வகையான கடற்குதிரைகள் காணப்படுகின்றன.
ஹிப்போகெம்பஸ் (Hippocampus) என்னும் அறிவியல் பெயர் கொண்ட குதிரை மீன், குறிப்பாக அதன் தலைப்பகுதியில் குதிரைத் தலை போன்ற தோற்றத்தால் கடற்குதிரை என்று அழைக்கப்படுகிறது. கடற்குதிரைகள் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றியவைகள் ஆகும். ஆனால் அவற்றின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே.
உலகிலுள்ள அனைத்து விலங்கினங்களிலும் இனப்பெருக்கத்திற்காக தன் குஞ்சுகளைப் பெற்றிடும் ஒரே ஆண் இனம் கடற்குதிரை மட்டுமே. பெண் கடற்குதிரையிடமிருந்து முட்டைகளை பெற்றப்பின், தானே கருவுறச் செய்கிறது. இதிலிருந்து 150 முதல் 600 குஞ்சுகள் வரை வெளிவரும்.
கடற்குதிரைகள் மிகச் சிறந்த அலங்கார மீன்களாக வளர்க்கப்படுகின்றன. அலங்கார மீன் வணிகத்தில் ஆண்டுக்கு 25 மில்லியன் கடற்குதிரைகள் விற்க்கப்படுகின்றன. மேலும் கடற்குதிரைகள் மருத்துவப் பயன்கள் பலவற்றையும் பெற்றுள்ளன. ஆண்மையின்மை, ஆஸ்துமா, தைரோய்ட், இதயநோய் உள்ளிட்ட மருத்துவக் குணம் கடற்குதிரைக்கு உண்டு என்பதால் அதிகம் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
அரியவகை கடல்வாழ் உயிரினமான கடற்குதிரைகளை வேட்டையாட அரசு தடை விதித்துள்ளது. ஆயினும் தொடர்ந்து கடற்குதிரைகள் வேட்டையாடப்படுவது உயிரியல் ஆர்வலர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்குதிரைகளை பார்ப்பதே அரிதாக இருக்கும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடற்குதிரைகளின் எண்ணிக்கை அரிதாக வருவதால் அவற்றை பண்ணைகள் அமைத்து பெருக்க முடியுமா என்று மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வளைகுடாவில் கடற்குதிரைகள் அருகிவருகின்றன; 25 வருடங்களில் முழுமையாக அழியும் அபாயம்
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment