அதிர்ச்சியளிக்கும் தூக்குமேடை சரித்திரம்
மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் போகக் கூடாத இடம் என சிறைச்சாலையை கருதுகிறார்கள். ஆயினும் தெரிந்தோ,தெரியாமலோ தாம் செய்யும் தவறுகளுக்காக சிலர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. அதைவிடக் கொடுமையானது சிறையில் வழங்கப்படும் மரண தண்டனை.
ஆம்! சிறைத்தண்டனையை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் எமக்கு இருந்தாலும் சிறைச்சாலை எப்படியிருக்கும்? அங்கு கைதிகள் எவ்வாறு நடத்தப்படுவார்கள்? தூக்குமேடை எவ்வாறு இருக்கும்? மரண தண்டனை எவ்வாறு வழங்கப்படும்? போன்றவற்றை அறிந்துகொள்வதற்கும் பார்ப்பதற்கும் ஆவல் உண்டு.
கண்டியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டதன் மூலம் அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது.
போகம்பறை சிறைச்சாலை இவ்வாண்டு ஜனவரி மாதம் மூடப்பட்டதுடன் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பழம்பெரும் சிறைச்சாலைகளில் போகம்பறையும் ஒன்று. இங்கு பிரித்தானிய காலனித்துவ ஆட்சி நிலவியபோது அதற்கு எதிராக செயற்பட்டோரை தண்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டனர். இந்த நோக்கத்தை பின்புலமாகக் கொண்டு 1876 ஆம் ஆண்டு போகம்பறை சிறைச்சாலை உருவாக்கம் பெற்றது.
கண்டி நகரில் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய வெளிச்சுவரோடு காட்சியளிக்கிறது போகம்பறை சிறைச்சாலை.
இந்த சிறைச்சாலையை நிர்மாணிப்பதற்கு 3 இலட்சத்து 65 ஆயிரத்து 365 ரூபா 65 சதம் (365365.65) செலவாகியுள்ளதாக குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.
அங்கு கைதிகள் செய்த குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஏற்ப சிறைக் கூடங்கள் பாகுபடுத்தி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சாதாரண குற்றம் புரிந்தோருக்கு தனியாகவும் பாரிய குற்றச் செயல்களோடு தொடர்புடையவர்கள் வேறு பிரிவிலும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய குற்றவாளிகள் மற்றுமொரு பிரிவிலும் மரண தண்டனைக் கைதிகளுக்கு வேறாகவும் சிறைகள் உண்டு.
அதேபோன்று வைத்தியசாலை, வணக்கஸ்தலங்கள், சமையல் அறை, சிறு கைத்தொழில்களுக்கான பிரிவுகள், தியான பீடம் என்பனவும் இருக்கின்றன.
நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்படும் நபர்கள் தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று அழைத்து வருவார்கள்.
போகம்பறையை பொறுத்தவரையில் நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்படும் கைதிகளை தற்காலிக சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கிறார்கள்.
அவர்களுடைய தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டு பதிவு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி இலக்கங்கள் வழங்கப்படும்.
அதன்பின்னர் அதிகாரிகளின் பூரண பாதுகாப்புக்கு மத்தியில் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
போகம்பறையில் மொத்தமாக 328 சிறைக் கூடங்கள் உண்டு. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த 328 சிறைக் கூடங்களுக்கும் பிரதான கதவுக்கும் வைத்தியசாலையின் பிரதான கதவுக்கும் ஒரேயொரு திறப்புதான் இருக்கிறது.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் அல்லது சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட கைதிகள் தனியான சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
அந்த சிறைக்கூடங்களுக்கு மேலும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அவற்றைச் சூழ மதில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் வாயில் பாதுகாப்பு நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
போகம்பறை சிறைச்சாலை மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுவதற்குக் காரணம் அங்குள்ள தூக்கு மேடையாகும். இலங்கையில் வெலிக்கடை, போகம்பறை ஆகிய இரு சிறைகளில் மாத்திரமே தூக்குமேடைகள் உண்டு.
குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதியுச்ச தண்டனை, தூக்குத் தண்டனையாகும்.
போகம்பறையில் 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21,22 ஆகிய திகதிகளில் கொலைக் குற்றவாளிகள் இருவர் தூக்கிலிடப்பட்டதே மரண தண்டனை வழங்கப்பட்ட இறுதி சந்தர்ப்பமாகும்.
இங்கு 524 சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையில் மரண தண்டனை வழங்கப்படுவதற்கென தனியான விதிமுறைகள் உண்டு. அங்கு பணியாற்றிவரும் இ.எம்.பி. ஏக்கநாயக்க என்ற அதிகாரி அது குறித்த விளக்கத்தை எமக்குத் தந்தார்.
"நீதிமன்றத்தால் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பு சொல்லப்படும்போதே அதன் வலியையும் தாக்கத்தையும் உணர்ந்துவிடுவார்கள்.
மரண தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் சிறப்பான சிறைக் கூடத்துக்குள் அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்களுக்கான தூக்குத் தண்டனை திகதி அறிவிக்கப்படும் வரை அங்குதான் காலம் கழிக்க வேண்டும்.
தண்டனைக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் அந்த திகதிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாக வேறு பிரிவுக்கு மாற்றப்படுவார்கள்.
அங்கு ஆறு அறைகள் உண்டு. முதல் நாளிலிருந்து ஆறு நாள் வரை அந்த ஆறு அறைகளுக்கும் நியமப்படி கைதிகள் மாற்றப்படுவார்கள். அந்த அறைகளில் இருக்கும் நாட்களில் கைதிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படாத வண்ணம் பொருத்தமான உணவுகள் வழங்கப்படும்.
ஆறு நாட்களும் ஆறு அறைகளில் வைக்கப்பட்ட பின்னர் ஏழாவது நாள் தூக்குத் தண்டனைக்குரிய நாளாகும். இலங்கை சிறைச்சாலை மரபின் படி காலை 8.05 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது வழமையாக இருந்தது.
தண்டனைக்குரிய நாளன்று காலையில் வைத்திய அதிகாரியொருவர் கைதியின் உடல் நலப் பரிசோதனையை மேற்கொள்வார். அவரது அறிக்கை கிடைத்த பிறகு தூக்குத் தண்டனைக்கான செயற்பாடுகள் இடம்பெறும்.
வைத்திய அதிகாரி, மரண விசாரணை அதிகாரி, சிறைச்சாலை அத்தியட்சர் ஆகியோர் முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் கைதி தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படுவார்.
ஒரே நேரத்தில் மூவரை தூக்கிலிடும் வகையில் தூக்கு மேடை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். தூக்கு மேடையில் கைதிக்கு தனியானதொரு உடை வழங்கப்படும். இரு கைகளையும் அந்த சட்டைக்குள்ளேயே வைக்கும் வண்ணம் அந்த உடை தயார்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த உடையை கைதி அணிந்த பின்னர் தலை மூடப்படும். தலையை மூடுவதற்கு தனியானதொரு கவசம் இருக்கிறது.
அதன் பின்னர் கைதி தூக்கிலிடப்படுவார் என அந்த அதிகாரி விளக்கமளித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மாதம் ஒருதடவை பார்வையிடலாம். உணவுப் பொருட்கள் எதனையும் வழங்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
கைதிகள் விரும்பினால் தண்டனை வழங்கப்படுவதற்கு முதல் நாள் சிறைச்சாலை நியதிகளின் பிரகாரம் சில வசதிகள், உணவுவகைகளை கேட்டுப் பெறலாம்.
மதகுரு ஒருவரோடு உரையாடும் வாய்ப்பு, அப்பம் 3, வெற்றிலை, புகைப்பதற்கு சந்தர்ப்பம் ஆகியவை வழங்கப்படும். கைதி வேறு உணவு வகைகளை விரும்பும் பட்சத்தில் வைத்தியரின் ஆலோசனையின் பிரகாரம் வழங்கப்படும்.
மரண தண்டனை வழங்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கைதியின் நெருங்கிய உறவினர் சிறைச்சாலைக்கு வருகை தந்து பார்வையிடலாம்.
கைதி தூக்கிலிடப்பட்ட பின்னர் வைத்தியரினால் மரணம் ஊர்ஜிதப்படுத்தப்படும். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் தூக்கு மேடைக்கான பிரதான வழியில் அதிகாரிகள் செல்வதில்லை. இடது பக்கமாகவுள்ள சிறிய வழியினூடாக வெளியில் வருவதை வழமையாகக் கொண்டிருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்டனையின் பின்னர் உறவினர்கள் விரும்பினால் சடலத்தை அதிகாரிகளின் ஒப்புதலுடன் எடுத்துச் செல்லலாம். அவ்வாறில்லை எனின் அரச செலவில் அடக்கம் செய்யப்படும்.
உறவினர்கள் சடலத்தை பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் எக்காரணம் கொண்டும் அதனை தோளில் சுமந்து செல்லக் கூடாது என்பது நியதி. சடலத்தை இடுப்புக்குக் கீழாகவே எடுத்துச் செல்ல வேண்டும்.
அதேபோன்று அடக்கம் செய்யப்பட்ட புதைகுழிக்கு மேலாக மண் குவிக்கப்படுவதோ கல்லறை அமைக்கப்படுவதோ தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் கூறிய தகவல்களின் பிரகாரம் போகம்பறை சிறை மூடப்படும்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட 128 பேர் இருந்துள்ளனர். அவர்கள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இருட்டறை
போகம்பறையில் உள்ள கைதிகள் சிறைச்சாலைக்குள் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் அவர்களை இருட்டறையில் (Punishment Cells) அடைத்து வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் அவ்வாறானவர்களுக்கு கசையடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருட்டறைக்கு கதவினூடாக பார்க்கக் கூடியளவுக்கு உள்ள சிறிய துவாரம் ஒன்று மாத்திரமே உண்டு. அவ்வாறு ஆறு இருட்டறைகள் போகம்பறையில் உண்டு. அங்கு கைதியொருவரை அடைத்து வைத்திருக்கும் நாட்களில் உப்பு கலந்த சோறு மாத்திரமே உணவாக வழங்கப்படும். காலைக் கடனுக்காக ஐந்து நிமிடம் வழங்கப்படுவதாகவும் கைதி கோரிக்கை விடுத்தால் இருட்டறைக்குள் சிறுநீர் கழிப்பதற்கு குவளையம் ஒன்று வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிர்ச்சியளிக்கும் தூக்குமேடை சரித்திரம்
Reviewed by NEWMANNAR
on
March 30, 2014
Rating:

No comments:
Post a Comment