கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் மட்டும் வெளியீடு. தமிழ் அதிபர்கள் பாதிப்பு.
கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில்
மட்டும் வெளியிடப்படுவதால் தமிழ் அதிபர்கள் , ஆசிரியர்கள் சிங்களச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களை உரிய வேளையில் அறிந்துகொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .
மத்திய கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் மட்டும் வெளியிடப்படாமல் சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் உரிய முறையில் தமிழ்மொழி பெயர்ப்புடன் சமகாலத்தில் தமிழ் , சிங்களம் என இரண்டும் அரச கருமமொழிகளிலும் அறிவிக்கப்படவேண்டும் என தேசிய மொழிக் கொள்கையின் பிரகாரம் வலியுறுத்தப்பட்டுள்ளது .
தமிழ் மொழியை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஏற்பாடுகளை கையாளுவது தமிழ் மொழி அமுலாக்கலை நடைமுறைப்படுத்துவது மற்றும் விதிகளை கண்காணிப்பதற்கு தேசிய மொழி அமுலாக்கல் அமைச்சும் உள்ள நிலையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் கடிதங்கள் சிங்கள மொழியில் மட்டும் அனுப்பி வைக்கப்படுவதால் தமிழ் அதிபர்கள் , ஆசிரியர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்ற விடயங்களை தெரிந்து கொள்வதற்கு மொழி பெயர்ப்பாளர்களைத் தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . அதுமட்டுமல்ல சுற்றறிக்கையில் , கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் திருத்தமான தகவலை தெரிந்துகொள்ள முடியாமலுமுள்ளது .
சிங்களத்தில் வரும் சுற்றறிக்கையில் மற்றும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் செயற்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியாமல் தமிழ் பிரதேசங்களில் செயற்படும் வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகங்களிலும் செயற்பாடுகள் தாமதம் அடைகின்றன .
கல்வி அமைச்சின் இணையத்தளத்திலும் முக்கியமான தகவல்கள் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் தனிச் சிங்கள மொழியில் மட்டும் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .
அதிபர் , ஆசிரியர் பதவி நிலை தொடர்பான உயர்வுகள் , சம்பள அதிகரிப்புக்கள் , பாடசாலை அபிவிருத்தி வேலைகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியன தனிச் சிங்கள மொழி சுற்றறிக்கை கடிதங்களில் அறிவிக்கப்படுவதால் தடங்கல்கள் தாமதங்களுக்கு உள்ளாகி நடைமுறைக்கு வராமல் போகின்ற நிலைகளும் ஏற்படுகின்றன . அத்துடன் இணையத்தளத்திலும் சிங்கள மொழியில் மட்டும் வெளியிடப்படுவதால் தமிழர்கள் உரிய முறையில் தகவல்களை கூட அறிய முடியாத நிலை ஏற்பட்டுவிடுவதாக விசனம் தெரிவித்துள்ளனர் .
தமிழ் மொழியில் சுற்றறிக்கைகளை , கடிதங்களை உரிய முறையில் வெளியிடாமல் இருப்பது தொடர்பாக அதிபர் , ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையிலும் தொழிற்சங்க ரீதியிலும் முறையீடு செய்யும் போதும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரும் போதும் " மொழிபெயர்ப்பாளர்கள் வசதி இன்மையால் தமிழ் மொழியில் உரிய வேளையில் வெளியிடமுடியவில்லை " என சாதாரணமாக பதில் கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது .
கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் மட்டும் வெளியீடு. தமிழ் அதிபர்கள் பாதிப்பு.
Reviewed by NEWMANNAR
on
March 02, 2014
Rating:

No comments:
Post a Comment