தமது பிள்ளைகளை காப்பாற்றச் சென்று உயிரிழந்த பிரித்தானிய பெண் மருத்துவர்கள்-மனதை உருக்கும் தாய்ப்பாசம்
விடுமுறையைக் கழிக்க சென்ற வேளை கடலலையால் அடித்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியில் பிரித்தானிய பெண் மருத்துவர்கள் இருவர் பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிய சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.
பாரதி ரவிக்குமார் (39 வயது) மற்றும் உமா ராமலிங்கம் (42 வயது) ஆகிய பெண் மருத்துவர்களே ஸ்பெயினின் தெனெரிப் கடற்கரைக்கு தமது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்கச் சென்ற வேளை இவ்வாறு பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர்.
மேற்படி பெண் மருத்துவர்களில் உமா ராமலிங்கம் இந்திய சென்னை நகரை பிறப்பிடமாக கொண்டவராவார். பாரதி ரவிக்குமார் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
சம்பவ தினம் தெனெரிப் கடற்கரையிலுள்ள பிளேயா பரேயிஸோ பகுதியில் உமா மற்றும் பாரதி ஆகியோர் தமது குடும்பத்தினருடன் நீச்சல் அடிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது உமாவின் மகனான ஹரியும் (10 வயது) பாரதியின் மகளான 14 வயது சிறுமியும் கடலலையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமது பிள்ளைகளை காப்பாற்றும் முகமாக உமாவும் பாரதியும் கடலில் இறங்கிய போது, பாரிய அலையொன்று அவர்களை அடித்துச் சென்றுள்ளது.
உமாவின் பின்னால் நீந்திச் சென்ற அவரது கணவர் பழனிச்சாமி சந்திரன் (49 வயது), தமது மகனான ஹரியை ஒருவாறு காப்பாற்றியுள்ளார்.
அதேசமயம் பாரதியின் மகளும் அங்கிருந்த ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் இரு பெண் மருத்துவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவரது சடலம் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டது.
ரோயல் ஓல்ட்ஹம் மருத்துவமனையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவில் பணியாற்றி வந்த உமா, கிரேட்டர் மான்செஸ்டரில் 800,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர வீட்டில் வசித்து வந்தார்.
அவரது கணவர் பழனிச்சாமி சந்திரனும் பாரதியின் கணவர் சின்னசாமியும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிஇ லிங்கன் நகரிலிருந்து 5 மைல் தொலைவிலுள்ள றீபம் எனும் இடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமது பிள்ளைகளை காப்பாற்றச் சென்று உயிரிழந்த பிரித்தானிய பெண் மருத்துவர்கள்-மனதை உருக்கும் தாய்ப்பாசம்
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:

No comments:
Post a Comment