கலைஞர் கலைத்தவசி செ. செபமாலை அவர்களின் அகத்திலிருந்து...
மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் கணனியில் முகம் கலைஞனின் அகம் பகுதியில்
கணணியில் முகம் கலைஞனின் அகம்இப்பகுதியில் இப்பக்கத்தை அலங்கரிப்பவர் கவிஞர், பாடலாசிரியர், கல்வெட்டுப்பாடகர், நடிகர், நெறியாளர், ஒப்பனைக் கலைஞர், நாட்டுக்கூத்து கலைஞர், ஓய்வு பெற்ற அதிபர் என பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் கலைத்தவசி செ. செபமாலை (குழந்தை) மாஸ்ரர் அவர்களின் அகத்திலிருந்து..........................
தங்களைப்பற்றி?
இயற்கையாகவே கடல்வளமும், நில வளமும், கலையார்வமும் கொண்ட மன்னார் மண்ணிலே செந்நெற் களஞ்சியமாக பச்சைப்பசேலென வயல்வெளிகள் பசுமாட்டுத் தொழுவங்கள் பண்பான மக்கள் பரந்து வாழப்படும் சிறந்த கிராமம் முருங்கன் தான் எனது சொந்தக்கிராமம். குழந்தை எனும் புனை பெயரோடு முருங்கன் பிட்டியிலே மனைவி ரோஸ்மேரி பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் கலையோடு.
தாங்கள் கால் பதித்த முதல் துறை?
முத்தமிழில் மூன்றாவது துறைதான் நாட்டுக்கூத்து. இத் துறையில் தான் முதன்முதலில் கால் பதித்தேன்.
இத்துறைக்கு வர உந்து சக்தியாக விளங்கியவர்கள்?
எனது தந்தையார்பெயர் செபஸ்தியான். அவர் ஒரு நாட்டுக்கூத்து கலைஞர். அவர் அண்ணாவின் பெயர் மரியான் சந்தான். அவர் ஒரு புலவர். இவர்கள் காட்டிய வழியும் இயல்பாகவே இளமைப்பருவத்திலிருந்த ஈடுபாடும்தான்.
நீங்கள் படைக்கும் கூத்துக்கள் மூலம் மக்களிடம் முன்வைக்கும் தீர்வு.இழையோடும் கருப்பொருள் எவை?
தமிழர் வீரம், இலட்சிய சிந்தை, காதல் சமத்துவம், சமூகப் பொறுப்பு போன்றவற்றை மையமாகக் கொண்டே சரித்திர சமூக நாடகங்களையும் நாட்டுக் கூத்துக்களையும் மற்றும் படைப்புக்களையும் படைத்து வருகிறேன்.
நீங்கள் இதுவரை ஆடிய, அரங்கேற்றிய கூத்துக்கள் பற்றி?
ஆரம்பத்தில் சமூக நாடகங்களாக :- பாட்டாளிக் கந்தன், பணத்திமிர், இலட்சியவாதிகள் சரித்திர நாடகங்களாக :- கண்ணகி, இலங்கை கொண்ட இராஜேந்திரன்
நாட்டுக் கூத்துக்களாக :- வீரத்தாய் (கலைக்கழக பரிசு பெற்றது.)கல் சுமந்த காவலர்கள் வீரனை வென்ற தீரன் யார் குழந்தை மொத்தத்தில் 60க்கு மேற்பட்ட நாடகங்களையும், கூத்துக்களையும் எழுதியும், பழக்கியும் அரங்கேற்றியுள்ளேன்.
சாதனைகள் என்றால் வேதனையும் இருக்கும். அந்தவகையில் உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் ஏதும் உள்ளதா?
நிறையவே உள்ளது. ஒருமுறையல்ல பலமுறை பல வழிகளில். குறிப்பாக ஒருமுறை நாடகத்தை நடத்தி முடிந்த போது அதுவும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்த போதும் ஒரு சிலரின் குளறுபடியால் எமக்குப் பணம் கிடைக்கவில்லை. பெரும் நட்டம் ஏற்பட்டது. அக்கடனை அடைக்க வீட்டில் இருந்த நெல்லை விற்று பணம் செலுத்தினேன். மற்றொரு முறை எனது மனைவியின் தாலிக்கொடியை அடைவு வைத்தும் பணம் செலுத்தினேன். கடன் வாங்கியும் கலையை வளர்த்தேன், வளர்த்து வருகிறேன், வளர்ப்பேன்.
தங்களின் வாழ்வில் சந்தோஷமான தருணம் என்றால்?
பலவுண்டு. வாழ்க்கையென்றால் இன்பமும், துன்பமும் கலந்ததுதானே. இத்துறையினில் இன்று வரை நிலைத்து நிற்கிறேன். வளர்க்கிறேன். இறைவனின் துணையோடு எல்லாமே சாத்தியமாகிறது. இதுதானே எனது சந்தோஷத்திலும் சந்தோஷம் என்பேன்.
கலைகளின் வளர்ச்சியே வாழ்வு என்று வாழும் நீங்கள் உருவாக்கிய முருங்கன் முத்தமிழ்கலா மன்றம் பற்றி?
எனது இருபத்திநான்கு வயதில் 1964ம் ஆண்டு எல்லோருடனும் ஒன்றிணைந்து உருவாக்கிய முத்தமிழ் கலாமன்றமானது இன்று வரைக்கும் பல வழிகளில் தடைகளை அகற்றி பல சாதனைகளோடு பொன்விழாக்காண இருக்கிறது. 2014 இந்த ஆண்டில் எனும்போது எனது கலைப்பணியின் ஒரு அடையாளமாகவே இதைப் பார்க்கிறேன் மக்களும் வரவேற்கிறார்கள்.
நாடகத்தினதும், கூத்துக்கலையினும் தற்போதைய நிலை?
அன்றைய காலகட்டம் அருமையானது. எல்லாத் துறைக்கும் பொற்காலம் என்று கூறலாம். போட்டி இருந்தாலும் வளர்ச்சி கண்டது. கலை, கலாச்சாரமாக பண்புகளை, விழுமியங்களை, ஒழுக்க முறைகளை சுட்டிக்காட்டும் கலையாக இருந்தது. தற்போது எனும்போது அவ்வாறில்லை. நவநாகரீக வளர்ச்சி, தொலைக்காட்சியில் தொடர்நாடகம், கணணி, இணையம், தொலைபேசி, சினிமா மோகம் போன்றவற்றாலும் இக்கலைகளில் எவருக்கும் விருப்பம் இல்லை. விழிப்புணர்வும் இல்லை. இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல ஊக்கமளிப்பவர்கள் குறைவு என்றாலும் இக்கலை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.
எனது கவிப்பயணத்தின் ஆசான் என்ற வகையில் என்னைப்போல உங்களால் வெளிப்படுத்தப்பட்டவர்கள் பற்றி?
நிறையவே உள்ளனர். நினைவோடு சிலர் தொடர்புகளை மேற்கொள்வதும், நேரில் வந்து சந்திப்பதும் மகிழ்ச்சியே. என் பணி தொடரும்.
கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்?
எதிலும் உண்மை ஆக்கமுடைய சிந்தனை உள்ளப்பற்று அர்;பபணிப்புடன் கூடிய தியாக உணர்வும் சாதிக்க வேண்டும் என்கிற திடமான நம்பிக்கையும் இவையே தகதிகளாக நான் கருதுகின்றேன்.
இத்துறையில் இருப்பவர்கள் வறுமையில்தான் வாழ்வார்கள் என்றொரு பொதுவான கருத்துள்ளதே அதைப்பற்றி?
உண்மை உண்மையிலும் உண்மைதான். மற்றவர்கள் போலல்ல இவர்களின் சிந்தனை. செயல் வேறு. காரணம் வௌ;வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்த எனது நண்பர்கள் அனைவரும் அப்பவும் சரி, இப்பவும் சரி செழிப்போடும் செல்வாக்கோடும் நன்றாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் நான் மட்டும் அப்பவும், இப்பவும் அதேபோல குழந்தையாவே இருக்கிறேன். (சிரிக்கிறார் வாய்விட்டு)
கலைஞர்கள் தனியாளானால் கலை வளர்ப்பதில் சிரமமில்லை. ஆனால் நீங்கள் குடும்பத் தலைவராக, பாடசாலை அதிபராக இருந்துகொண்டு கலை வளர்ப்பது சிரமமாகவில்லையா?
சிரமமில்லை நான் விரும்பி எற்றுக்கொண்டதுதானே. ஆனாலும் என்னை இத்துறையில் நிலை நிறுத்திக்கொள்ள எல்லா வகையிலும் உறுதுணையாகவும். அன்பாகவும், பண்பாகவும் ஆளுமை கொண்டு எனை ஆட்கொண்டு எனைப் போலவே கலையார்வம் கொண்ட என் மனைவி நல்ல துணைவி றோஸ்மேரி என்றால் மிகையாகாது. எடுத்துக்காட்டாக வீட்டை விட்டு வெளியோறாத பெண்கள் காலத்திலே என்னுடன் துணையாக மேடையேறியவள் என்றால் அது என்மீதும் கலைமீதும் கொண்டிருந்த அளவற்ற அன்புதானே.
கலைத் தொண்டிற்காகவே தன்னை இணைத்துக் கொண்ட நீங்கள் தமிழன்னைக்கு சூடிய முத்துக்கள் பற்றி?
அறப்போர் அறைகூவல் 1966 இன்பத்தமிழின் இதய ஓலம் 1966 யாகப்பர் இன்னிசைப் பாடல்கள் 1966 நாம் மலர் ஐ 1967 நாம் மலர் ஐஐ 1989
பரிசு பெற்ற நாடகங்கள் 1997 (சாஹித்திய மண்டல பரிசு பெற்றது.)
மரபுவழி நாடகங்கள் 1998 மாதோட்டம் கவிதைத் தொகுதி 2000 இத்தோடு 60ற்கும் மேற்பட்ட நாடகங்களையும், 90க்கும் மேற்பட்ட கல்வெட்டுப்பாடல்களையும் கும்மி, கோலாட்டம், வரவேற்பு, பிரியாவிடை, வில்லிசைப் பாடல்களாக 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியதோடு பிரதிகளும் வைத்திருக்கிறேன்.
கலை வாழ்விற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து உயிர்மூச்சு உள்ளவரை பாடுபடும் பன்முகப் பண்பாளனான தங்களை பார்போற்றியளித்த பட்டங்களும், விருதுகளும் பற்றி?
கவிஞர் பட்டம் 1968ம் ஆண்டு. கலைஞர் குழந்தை பட்டம் 1982 முத்தமிழ் வேந்தன் பட்டம் 1994 சாஹித்திய மண்டலப் பரிசு 1998 கலாபூஷணம் விருது 1999 திருக்கலை வேந்தன் விருது 2000 ஆளுனர் விருது 2000 தலைக்கோல் விருது 2005 (சமாதான நீதவான்) கூத்திசைக் காவலர் பட்டம் 2009.08.16 பாரிஸ் பிரான்சில் வைத்து ஐரோப்பிய தமிழ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வழங்கியது. அத்தோடு இன்னும் பல அமைப்புக்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பொன்னாடை போர்த்தி பொற்கிளியும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவித்துள்ளனர்
இன்னும் செய்யவேண்டியது உள்ளது என்று நினைத்ததுண்ணடா?
ஆம் நிறையவே உள்ளது. இதுவரை என்னால் இயன்றவரை கலையை வளர்த்து வந்தேன். இப்போது இளைய தலைமுறையினரிடம் கையளித்துள்ளேன். அவர்கள் கைகளில் கலைகள் எழுச்சி பெறும். (நம்பிக்கையான குரலில்)
பல்துறை வித்தகராக பார்போற்றும் கலைஞராக உங்களை உருவாக்கியவர்கள் துணைநின்றவர்கள் பற்றி?
முதலில் என்னை பெற்ற பெற்றோருக்கும் என்னை இவ்வளவு காலமும் வழிநடத்தும் எல்லாம் வல்ல இறைவனையும் அத்தோடு எனது தந்தை வழி உறவுகள், தாய் வழி உறவுகள், எனது மனைவி, பிள்ளைகள், எனது சகோதரர்கள், நண்பர்கள், சான்றோர்கள், என்னை ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு உள்ளங்களையும் நான் கடந்து வந்த பாதையையும் நன்றியுணர்வோடு திரும்பிப் பார்க்கிறேன். (ஆனந்தக் கண்ணீரோடு குழந்தை)
முத்தமிழின் மூச்சாய் மூத்த பெரும் கலைஞரான கலைத்தவசி கடந்து வந்த பயணத்தில் புதிதாக பயணிக்கவிருக்கும் இளைய தலைமுறையினருக்கு தங்களின் அனுபவ வாழ்வில் இருந்து?
கலைகளோடு இணைவது இலகு. ஆனால் அதில் நிலைத்து நிற்பது என்பது இலகுவானதல்ல. பணத்தோடு தொடர்புடையது தானே இவ்வாழ்வு. எந்தத்துறையானாலும் நல்ல முறையில் சிந்தனை செய்து தெளிவாக முடிவுசெய்து முயற்சியோடு இறங்க வேண்டும். இறங்கினால் அத்துறையில் முத்திரை பதிப்பதோடு நின்றுவிடாமல் முடிந்தவரை வரப்போகும் அடுத்த தலைமுறைக்கு கலைப் பாரம்பரியத்தை அன்பளிப்பு செய்து அரண் அமைக்க வேண்டும்.
நியூ மன்னார் இணையம் பற்றி?
நல்லதொரு முயற்சி தொடர வேண்டும். இதுவரை மன்னாரில் யாரும் செய்யாததொரு அளப்பரிய விடையம். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் எம் மண்ணின் மைந்தர்கள் திறமைகள் சாதனைகளை வெளிக் கொணர்ந்து இலை மறை காயாக உள்ள எல்லாக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து வெளிப்படுத்தும் எண்ணம் பாராட்டுக்குரியது தொடரட்டும். உங்கள் சேவை மலரட்டும் எங்கள் கலைஞர்களின் முகமும் அகமும்.
சந்திப்பும் சிந்திப்பும்
நியூ மன்னார்
குறிப்பு-
மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியினூடாக இலை மறை காயாக மறைந்திருக்கும் நம் கலைஞர்களை வெளிக்கொண்டு வர உங்கள் ஊரிலுள்ள கலைஞர்களை எமக்கு அறியப்படுத்த newmannar@gmail எனும் எமது மின் அஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்..
விம்பம் தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..
கலைஞர் கலைத்தவசி செ. செபமாலை அவர்களின் அகத்திலிருந்து...
Reviewed by NEWMANNAR
on
June 13, 2014
Rating:

No comments:
Post a Comment