இலக்கியப் படைப்பாளி பி.பி அந்தோனிப்பிள்ளை அவர்களின் இதயத்திலிருந்து,,,,,
கலைஞனின் அகம் கணனியில் முகம் இப் பகுதியில் இன்றைய கதாநாயகன் இலக்கியப் படைப்பாளி, நாடக ஆசிரியர், தமிழ் ஆசிரியர் ஓய்வு பெற்ற அதிபர் கவிஞர் என பல பன்முக ஆற்றலோடு திகழும் பி.பி அந்தோனிப்பிள்ளை எனும் மூத்த கலைஞர் அவர்களின் இதயத்திலிருந்து
• தங்களைப் பற்றி ?
மன்னார் மாதோட்டத்தில் விவசாய செழிப்புமிக்க அழகிய ஆத்திக்குழி தான் எனது சொந்த இடம். எனது மனைவி பிள்ளைகNhளடு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றேன். தற்போதைய சூழலில் முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன்.
• பள்ளிப் பருவம் பற்றி?
ஆரம்பக் கல்வியை மாவிலங்கேணி மத்திய மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரியிலும் கற்று எஸ்.ஐ.பரீட்சையில் சித்தியெய்தி தமிழ் ஆசிரியராக நியமனம் பெற்றேன். சின்ன வயதில் குழப்படிதான். குழப்படி காரணமாக எனக்கு ஆங்கிலப் புலமையைப் பெற முடியாமல் போய் விட்டது. இப்பவும் கவலை தான்.
• சிறுவர் இலக்கியம் படைப்பதற்கான சந்தர்ப்பம் எவ்வாறு அமைந்தது ?
ஆசிரியர் நியமனம் பெற்றபின்பு சிறுவர் இலக்கியம் படைக்ககூடிய சந்தர்ப்பம் தானாக அமைந்தது. நான் பரம்பரை பரம்பரையாக வந்த கலைஞனோ கவிஞனோ கிடையாது. எனது தமிழ் பற்றின் தாகத்தால் தான் நான் கலைஞனானேன். 'பாட்டுப்பாடி ஆடுவோம்' என்ற எனது முதலாவது சிறுவர்களுக்கான படைப்பு .1989ம் ஆண்டு வெளியிட்டேன். புத்தகம் சொந்தமாக வெளியிடுவதில் உள்ள சகப்பான அனுபவத்தால் அதை நிறுத்திக் கொண்டேன்.
• கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு?
பாடசாலையில் கற்பித்துக் கொண்டு இருக்கும் போது சிறுவர்களுக்கான பாடலாக 'கத்தரி தக்காளி மிளகாய்' 'வாலைத்தூக்கி ஓடி வரும்' ஆகிய இரு பாடல்களும் கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர் கைநூலில் இடம் பெற்றதை தொடர்ந்து பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. அத்தோடு நான் உற்சாகத்துடன் நான் கவிதை எழுதவும் ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு கவிதை இலக்கணம் (யாப்பு, சொல், அணி, எதுகை, மோனை) வரைவிலக்கணம் எதுவும் தெரியாது. ஆனால் நான் எழுதிய பாடலும் கவிதைகளும் எல்லா அம்சங்களும் உள்ளது என்றார்கள். உளமாற ஏற்றுக்கொண்டு பாராட்டினார்கள்.
• கவிதை பற்றி தங்களின் கருத்து ?
கவிதைக்கு ஒரு இலக்கணம் இருக்க வேண்டுமா? இலக்கணத்திற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்க வேண்டுமா? இலக்கியம் எனும் போது அதற்குள் அடங்க வேண்டும். இதற்குள் அடங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இலக்கியம் இலக்கியமாகவே இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு. அதற்கொரு எல்லை இருக்க கூடாது. அதற்கு எல்லை வகுத்தால் அதற்கு ஏது இருப்பு. இதை புதிதாய் படைப்போம் காப்பதும் எம் பொறுப்பு...
• உங்களது கவிப் படைப்பைப் பற்றி?
சிறுவர் இலக்கிய பாடல்கள் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெறவும் எனது கவிதைகள் வானொலியில் முதன் முதலில் 2004ம் தேசிய வானொலியில் ஒலிபரப்பானது அன்றிலிருந்து இன்றுவரை ஒரு .சில நாட்களைத் தவிர ஒலிபரப்பாகின்றது. அவ்வாறு வானொலியில் தவி;ந்த எனது கவிதைகளையும் என்னிடம் இருந்த கவிதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்று தீர்மானித்தேன். அவ்வாறே எனது முதலாவது கவிதை தொகுதி மார்கழி 2011 அன்று 'மழலை அமுதம்' என்ற பெயரில் லங்கா புத்தக நிறுவனத்தின் வெளியீட்டாக வந்தது. எனது இரண்டாவது தொகுப்பான 'மாண்புமிகு மாதோட்டம்' எனும் கவிதை தொகுதி 15.03.2013 வெளியீடு செய்துள்ளேன்.
• ஆசிரியராக ஓய்வுநிலை அதிபராக இருக்கும் நீங்கள் தற்கால கல்வியைப் பற்றிய கருத்து?
கல்வி என்பது அன்றைய காலம் போல அல்ல. இன்று பல வழிகளில் பல விதமாய் விரிவடைந்து செல்கின்றது. யாரும் எப்படியும் எப்பொழுதும் எங்கேயும் கற்கலாம் தானே படிக்கின்றார்கள். ஆசிரியர்தான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனால் ஆசிரியர்களையும் மாணவர்களையும் சமூகத்தையும் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. உரிமையுமில்லை. ஆசிரியருக்கே சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு தற்போதைய மாணவர்களின் திறமை .காணப்படுகின்றது. இதற்கு நவீனத்தின் சிறப்பும் மாணவர்களின் தானே கற்றல் தன்மையும் தான் காரணமாக அமைகின்றது.
• உங்களை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?
கல்வி கற்றலின் பயனாக ஆசிரியர் நியமனம் அத்தோடு சிறுவர் இலக்கியப் படைப்பாளியாக என்னை வளப்படுத்தினேன். அத்தோடு ஓய்வு நிலை அதிபராகவும் என்னுள் இயல்பாக இருந்த கவித் தன்மையும் வெளிப்பட நான் கவிஞன் ஆனேன். எம்மை நாமே இனம் கண்டு முயற்சியும் பயிற்சியும் செய்தால் இலகுவில் இலக்கை அடையலாம்.
• வானொலிக்கு நாடகம் எழுதியது பற்றி?
வானொலியில் நாடகம் ஒலிபரப்பினார்கள். அதே போல் தேசிய விழிப்புணர்வு நாடகமாக எழுதியனுப்ப வேண்டும் என்றார்கள். நான் முதலில் வானொலியில் ஒலி பரப்பான 'குப்பை' எனும் நாடகத்தை கேட்டேன். அதே பாணியில் நான் 'தேசிய சொத்து', 'கட்டுக் காசுக்கு கடன் சாமான்', 'தேசிய விருது' போன்ற நாடகங்களை எழுதினேன். அவற்றை வானொலியில் ஒளிபரப்பிய போது மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
• மூன்று துறைகளிலும் எது இலகுவானதாக கருதுகறீர்கள்?
எழுதுவது என்பது இலகுதான் எனக்கு மூன்று துறையுமே எழுதுவது மிகவும் இலகுவாக இருந்தாலும் கணனியில் ரைப் செய்தால் நாடகம் எழுதுவது மிகவும் இலகுவாக உள்ளது. காரணம் பல பக்கங்கள் எழுதிய பின்பு சில விடையம் பிடிக்கவில்லையென்றால் மீண்டும் எழுத வேண்டும். ஆனால் கணனியில் நொடிப்பொழுதில் பிடிக்காத விடையத்தை அழித்து விட்டு புதிதாக ரைப் செய்யலாம். விருப்பத்தினை உடனே எழுதி விடலாம். கணணியுகம் இலகு.
• உங்களைக் கவலைக்குள்ளாக்கிய விடயம்?
எனக்கு பேச்சுக் கலை மீது அதிக விருப்பம். ஆனால் என்னிடம் இருக்கும் கூச்ச சுபாவம் காரணமாக எல்லா விதமான நிகழ்ச்சிகளிலும் இருந்தும் விலகி வந்தேன். அதனால் என்னிடம் உள்ள மனக் கருத்து களை எண்ணங்களை அபிலாசைகளை வெளிக்காட்ட முடியாமல் போனது. என்னுள்ளே பல விடையங்கள் முடங்கியது. மிகவும் கவலையானதொரு விடையம் மட்டுமல்ல மிகவும் வேதனைப்படுகின்றேன். இதனால் தான் எனக்கு கிடைக்க இருந்த 'கலாபூஷண' விருதினையும் இழந்தேன்.
• இவ் கலையுக வாழ்வில் நீங்கள் மிகவும் சந்தோஷம் அடைந்த விடயம்?
எனது கவிதைகள், பாடல்கள், கதைகள், பத்திரிகைகளில் நூல்களாகவும் வரும் போது எவ்வளவிற்கு மனம் சந்தோஷம் அடையுமோ அதே போல் பல மடங்கு சந்தோஷம் அடைந்துள்ளேன். எனது நாடகம் வானொலியில் ஒலிபரப்பான போது நான் ரசித்து எழுதிய ஒவ்வொரு வசனமும் என் காதில் விழும் போது எல்லையற்ற மகிழ்ச்சி தான் அதை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. என்னை அறிமுகப்படுத்தியதும் பிரபல்யப்படுத்தியதும் இலங்கை தேசிய வானொலிதான்.
• உங்களை மிகவும் கவர்ந்த கலைஞர்கள் யார்? (இலங்கை, இந்தியா)?
எல்லாக் கலைஞர்களையும் பிடிக்கும். கொசிமின் வியட்நாம் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் இலட்சியக் கணக்கான கவிதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய கவிதைகளில் ஒன்று
நான் காடுமேடு 'அலைந்து திரிந்தேன்
மேடு பள்ளங்கள் ஏறி இறங்கினேன்
மலை மேடுகள் பள்ளத்தாக்குகள் சுற்றினேன்
வனாந்தரங்கள் சமவெளிகள் ஊடாக பயணம் செய்தேன்
கொடிய விலங்குகளை சந்தித்தேன்
எவ்வித ஆபத்தும் இன்றி தப்பினேன் - அழகிய
சமவெளிக்கு வந்தேன்
மனிதனை சந்தித்தேன் - இப்போது
நான் சிறையில் இருக்கின்றேன்
இதே கருத்துடைய
கொம்பிழவர் ஐந்து
குதிரைக்கு பத்து முழம்
வெம்புதரிக்கு ஆயிரம்தான் வேண்டும்
மனிதனை பொறுத்த மட்டில்.........?
எந்த நாடக இருந்தாலும் கருத்து தான் முக்கியம்.
• நீங்கள் எழுதியதில் உங்களை கவர்ந்த கவிதை எது?
'அறியாப் பருவத்திலே
ஆரம்பித்தான் சுவைக்க
அரக்கத்தனம் அறிந்தபின்
அமிழ்ந்து விட்டான் அதற்குள்'
• மனிதரில் பிடித்தது?
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசும் மனிதரை பிடிக்கும்.
• நூல்கள் பலவுண்டு நீங்கள் விரும்பிப் படித்த நூல் பற்றி?
டால்ஸ்டாயின் சிறகதை தொகுப்பில் 'மூன்று துறவிகள்' எனும் டால்டாயின் சிறுகதை மிகவும் பிடிக்கும்.
• ஆசிரியராக அதிபராக பணியாற்றிய ஆண்டுகள் - 30 ஆண்டுகள்
• தற்போதைய நிலையில் (74 வயதில் உடல் சுகயீனமான) யாரை சந்திக்க விரும்புகின்றீர்கள்?
எனது நண்பர் கலாபூஷணம் செ.செபமாலை குழந்தை மாஸ்ரர் அவர்களை சந்திக்க விரும்புகின்றேன். பழைய பசுமையான நினைவுகளை மீட்க..
• தற்போதைய நிலையில் என்னால் இலக்கியப் பணி ஆற்றமுடியவில்லையே என்று நினைத்ததுண்டா?
ஆம் நிச்சயமாக நான் இப்போது தான் வானொலிக்கு நாடகத்தை எழுதி அனுப்பினேன். ஒன்று இரண்டு, மூன்றிற்கு எனக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையினை அடைந்தது. எனது ஆசை குறைந்தது. 100 நாடகங்களாவது வானொலியில் ஒலிபரப்பும் அளவிற்கு எழுத வேண்டும் என்று அது நிறை வேறவில்லை. எதிர்பார்ப்போடு இருக்கும் சந்தர்ப்பம் அமைவில்லை. சந்தர்ப்பம் அமைந்த போது என்னால் முடியவில்லை. ஏமாற்றம் தான் வாழ்க்கை.
• உங்களது ஜெயிப்புத் தன்மை பற்றி கூறுங்களேன்?
நான் பெரிதாக எதையும் வெற்றி பெறவில்லை. ஒரு நல்ல நிலைக்கு வெற்றி கொண்டரிடம் உங்கள் உயர்வுக்கு காரணம் எனும் போது அவன் எவனோ ஒருவனைத்தான் சொல்கிறான். தானாக எவனும் முன்னேறியதாக சொல்வதில்லை. அவ்வளவுதான் அவர்களது நினைவும் உள்ளது. அவனவனின் முயற்சியும் பயிற்சியும் தான் அவனது முன்னேற்றத்திற்கு காரணம்.
• தற்கால இளைஞர்களுக்கு தங்களின் கருத்து?
திருவாடுதுறை இராஜரெட்ணம் செவ்வியின் போது ஜனாதிபதி விருது கிடைத்தது பற்றி கேட்ட போது அது எனது திறமைக்கு (நாதஸ்வர வித்துவான்) கிடைத்த விருதல்ல. அவர் ஆராய்ந்து அறிந்து தரவில்லை. பலர் சிபாரிசு செய்யவும் சொல்லவும் தான் தந்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். கௌரவத்திற்காக மனதால் அல்ல. அப்படியெனின் கல்யாண வரவேற்பு நிகழ்வில் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு வருகின்றேன். நல்லிரவு ;1 மணியிருக்கும் 'சபாஷ் என்றறொரு சத்தம்' கேட்டது. திரும்பிப் பார்க்கின்றேன் ஆம் அங்கு அக்காலத்தில் வீதி விளக்குகள் இல்லை. மண்டையில் விளக்கை வைத்து நடப்பார்கள். அவர்களின் ஒருவன் தான் அவனை பார்த்து கை கூப்பி வணங்கினேன். அவன் இது போன்ற பல நிகழ்ச்சிகளை ரசித்தவன். இசை ஞானம் பெற்றவன். 'அந்த சபாஷ் தான்' நான் பெற்ற உயரிய விருதாக கருதுவேன் என்றார் அதுபோல கலை வந்து படிப்பிலையோ பட்டத்திலையோ இல்லை. அவனது திறமையைப் பொறுத்து அமையும். விருதுக்காக உங்கள் திறமை வெளிப்படாமல் உங்கள் திறமைக்காக விருதுகள் கிடைக்கட்டும். போதுமானளவு அனுபவத்தையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளுங்கள் திறமையினை வெளிப்படுத்துங்கள். அதுவும் இளமையிலே நிலைத்து நில்லுங்கள்.
• உங்களது படைப்புக்கள் பற்றி?
இரண்டு பிரிவாக நோக்கலாம். சிறுவர் பாடசாலை தொடர்பாகவும் கவிதைகள் தொடர்பானது.
1. பாட்டுப்பாடி அடுவோம் - 1989 (சொந்த வெளியீடு)
2. பாடலும் சூழலும் - காயத்திரி பப்ளிகேசன்
3. பாடல் சொல்லும் கதைகள் - 2009 செப்ரம்பர் பிறைற் நிறுவனம்
4. பாடி மகிழ்வோம் - லங்கா புத்தகசாலை
5. கிராமத்தின் இதயம் (நாட்டார் பாடல்) - லங்கா புத்தகசாலை
6. சிறுவர் கதம்பமாலை - 2007,ஆகஸ்ட், காயத்திரி பப்ளிகேசன்
7. கட்டுரைக் கதம்பம் (தரம் 9-11) 2011டிசம்பர் - லங்கா புத்தகசாலை
8. கட்டுரைக் சுரங்கம் (தரம் 8-11) - காயத்திரி பப்ளிக்கேசன்
9. வரலாற்றில் தடம் பதித்தோர் 2008 ஜனவரி - காயத்திரி பப்ளிகேசன்
10. கட்டுரை எழுதுவோம் எப்படி 1990 - லங்கா புத்தகசாலை
11. மாணவர் கட்டுரைக் கோலங்கள் (4,5,6) - லங்கா புத்தகசாலை
12. சிறுவர் சிந்தனை விருந்து (தரம் 5) - திவ்வியா பப்பிளிக்கேசன்
13. பாலர் கதை விருந்து - லங்கா புத்தகசாலை
14. ஆத்தி சூடி அறுபது - லங்கா புத்தகசாலை
15. கொன்றை வேந்தன் அறுபது - லங்கா புத்தகசாலை
16. கத்தோலிக்க திருமறை-சிறுவர் இலக்கிய வழியில் - லங்கா புத்தகசாலை (தரம் 2,3)
17. திருமறையும் நடைமுறையும் (தரம் 6, 7) - லங்கா புத்தகசாலை
18. தமிழ்மொழி செயல்நூல் (தரம் 4,5) - காயத்திரி பப்ளிக்கேசன்
19. கணிதம் செயல்நூல் (தரம் 4) - காயத்திரி பப்ளிகேசன்
20. கணிதப் பயிற்சி (தரம் 5) - காயத்திரி பப்ளிகேசன்
21. சூழலைப் பாடுவோம் - திவ்யா பப்ளிகேசன்
(கிடைக்கப் பெற்றவை)
• கவிதை நூல்களாக..
1. மழலை அமுதம் கவிதைத் தொகுதி (மார்கழி 2011)
2. மாண்புமிகு மாNதூட்டம் (மண் பேசும் கவிதைகள்) 5.06-2013
• சிறுகதைகளாக
இலங்கையின் இருபத்தெட்டு சிறுகதைகள் நூலில்
'வீட்டைக் கட்டிப்பார்' எனும் சிறுகதையும் வந்துள்ளது.
தேசிய வானொலியில் :தேசிய சொத்து', 'கட்டுக்காசுக்கு கடன்சாமான்' 'தேசிய விருது'
(ஒலிபரப்பானது)
• தங்கள் கலைச் சேவையைப் பாராட்டி தந்த விருதுகள் பற்றி?
நான் பெரிதாக எதையும் பெற்று விடவில்லை. ஞாபகமும் இல்லை.
1. கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடமாகாணம் வழங்கிய ஆளுநர் விருது –2008
2. ஞானம் சஞ்சிகை – அட்டைப்பட அதிதியாக கௌரவித்தது.
3. மன்னார் தமிழ் செம்மொழி விழா 'நினைவுச் சின்னம்' 2010
4. மன்னார் தமிழ் செம்மொழி விழா 'கௌரவ விருது' 2010
5. மன்னார் நானாட்டான் பாடசாலைச் சங்கம் 'நினைவுச் சின்னம்' 2011
6. மன்னார் முருங்கன் கலா மன்றத்தினால் மன்ற இயக்குனர் 'கலைத்தவசி' 'கலாபூசணம்' செ.செபமாலை அவர்களால் (குழந்தை) எனது மாண்புமிகு மாதோட்டம் புத்தக வெளியீட்டின் போது எனக்களித்த 'மழலைக் கவியோன்' என்ற விருது (5.06.2013) இவ் விருதையே எனக்கு கிடைத்த உயரிய விருதாக கருதுகின்றேன்.
இன்னும் பல அமைப்புகள் சமூக சங்கங்கள் மூலமும் பாராட்;டுப்பத்திரமும் பொன்னாடையும் போர்த்தி பொற்கிளி தந்தும் கௌரவித்துள்ளார்கள்.
• கலைத்துறையில் உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றி?
நினைவு கூற வேண்டியவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.
முதலில் எல்லாம் வல்ல இறைவன் என் பெற்றோர்கள் எனது நண்பர்கள் குறிப்பாக எனது ஆக்கங்களை வானொலியில் கேட்டும் எனது படைப்புக்களை பார்த்தும் உடனுக்குடன் பாராட்டும் நண்பன் பி.பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கும் எனது கவிதைகளையும் நாடகங்களையும் தவழ விட்டு என்னை வெளிப்படுத்திய இலங்கை தேசிய வானொலியில் 'கலசம்' கவிதை தயாரிப்பாளர் ஜெயந்தி ஜெயசங்கருக்கும் எனது படைப்புக்களை சிறந்த முறையில் அச்சிட்டு வெளியீடு செய்யும் லங்கா புத்தக நிறுவனத்தின் முகாமையாளர், காயத்திரி நிறுவன முகாமையாளர் திரு.வே.நவமோகனுக்கும் பிறைட் நிறுவன முகாமையாளருக்கும் இன்னும் பல வழிகளிலும் என் பயணத்தில் பங்கு கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைக்கின்றேன்.
• மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?
இலக்கணம் இலக்கியம் என்றில்லாமல் எல்லாக் கலைஞர்களையும் உள்வாங்கி வெளிச்சத்திற்கு கொண்டு வருதல் அளப்பரிய சேவை என்பேன். எம்மை போன்ற கலைஞர்களுக்கு பெருமை தான். எவ்வளவோ கஸ்ரப்பட்டு துன்பப்பட்டு கலைக்காக வாழ்கின்ற நம்மை வீடு தேடி வந்து உரையாடி உறவாடி உலகறியச் செய்யும் வண்ணம் இணையத்தில் எங்களை இணைத்து வெளிப்படுத்தும் உங்களுக்கும் உங்கள் இணைய நிர்வாகிக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள். குறிப்பாக முதுமையின் பிடியில் சிக்கியிருக்கும் என்னைப் போன்றவர்களையும் இணையத்தில் சேர்ப்பது எனது பாக்கியமாகவே கருதுகின்றேன். தொடரட்டும் உங்கள் சேவை அற்புதமான சேவை.
சந்திப்பும் சிந்திப்பும்
இலக்கியப் படைப்பாளி பி.பி அந்தோனிப்பிள்ளை அவர்களின் இதயத்திலிருந்து,,,,,
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:

No comments:
Post a Comment