அண்மைய செய்திகள்

recent
-

நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்; பாதுகாப்பு பணிகளில் 570 பொலிஸார்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 570 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.பீ.விமலசேன தெரிவித்தார்.

மேலும், வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடி ஏற்றத்துடன் நாளை ஆரம்பமாகவுள்ளது.

கொடி ஏற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக ஆலய அரங்காவலர் சபையிடம் இன்று முற்பகல் ஒப்படைக்கப்பட்டதாக எமது யாழ். பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை, செங்குந்தர் மரபு வழியில் வந்தவர்களே உருவாக்கி ஆலயத்திற்கு வழங்குவது பரம்பரை பரம்பரையாக வந்த வழக்கமாகும்.

இதனடிப்படையில் இந்த வருடத்திற்கான கொடிச்சீலையை தயாரிக்கும் பணிக்காக கடந்த 22 ஆம் திகதி ஆலய பிரதம குருவினால் கொடிச்சீலை தயாரிப்பவர்களிடம் காளாஞ்சி வழங்கப்பட்டது.

கொடிச்சீலையின் தயாரிப்புப் பணி நிறைவடைந்த நிலையில், சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வேல்மடம் முருகன் கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ எடுத்துவரப்பட்ட கொடிச்சீலை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள வருடாந்த மகோற்சவ திருவிழாவிற்கு, ஆசார சீலர்களாக அடியார்களை வருகை தருமாறும், தமிழ் பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் யாழ். மாநகர மேயர் யோகேஷ்வரி பற்குணராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்லை ஆதியீனத்தின் வேண்டுகோளுக்கிணங்க கலாசார ஆடைகள் தொடர்பான பதாதைகளை காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாநகர மேயர் சுட்டிக்காட்டினார்.

நாளை ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 தினங்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்; பாதுகாப்பு பணிகளில் 570 பொலிஸார் Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.