இன்னாருக்கு இன்னாரென்று - விமர்சனம்
ஒவ்வொருவரும் பிறக்கும்போதே இன்னாருக்கு இன்னார்தான் என்று கடவுள் எழுதி வைத்துவிடுகிறார். அதை யாராலும் மாற்ற முடியாது என்பதை சொல்லும் படம். கிராமத்து இளைஞன் சிலம்பரசன், முறைப்பெண் ஸ்டெபியை காதலிக்கிறார். அந்தஸ்த்து பார்க்கும் மாமா சந்தானபாரதி பெண் தர மறுக்கிறார். ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து காட்டினால் பெண் தருவதாகச் சொல்கிறார்.
மாமனின் சவாலை ஏற்று ஒரு கோடி சம்பாதிக்கச் சென்னை வருகிறார் சிலம்பரசன். வந்த இடத்தில், தான் வேலை பார்க்கும் முதலாளியின் மகள் அஞ்சனா அவரைக் காதலிக்கிறார்.
மாமனோ கொடுத்த வாக்கை மீறி அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஸ்டெபியை திருமணம் செய்து வைக்கிறார். யாருக்கு யார் ஜோடியாகிறார்கள் என்பது மீதி கதை.கிராமத்து காதல், மாமன் எதிர்ப்பு, பணம் சம்பாதிக்க சென்னை வருதல், ஒரே பாட்டில் உயர்ந்த இடத்துக்கு செல்லுதல், பணம் சம்பாதித்து திரும்பி போகும்போது ஊரில் எல்லாமே தலைகீழாக மாறி இருத்தல், பிறகு பரபர கிளைமாக்ஸ், திடீர் திருப்பம் என எல்லாமே பார்த்து சலித்த சமாசாரங்கள்தான்.
ஹீரோ,கிராமத்து இளைஞன் தோற்றத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும். ஸ்டெபி மாமன் மகனைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார். அப்புறம் கிளைமாக்சில் உருகி உருகி அழுகிறார்.
இன்னொரு ஹீரோயின் அஞ்சனா ஹீரோவை ஒரு தலையாகக் காதலித்து எப்போதும் காதல் பார்வையுடனேயே திரிகிறார். இசையும் உள்ளேன் ஐயா வகையறா. கேட்டுக்க நண்பா கேட்டுக்க... என்ற குடிமறுப்பு பாடல் கவனிக்க வைக்கிறது. ஹீரோவை விட அதிகம் பேசி வெறுப்பேற்றுகிறார் அனுமோகன். சித்தப்பாவின் ஓட்டல் வேலைக்காரியை வைத்து செய்யப்படும் காமநெடிகள் முகம் சுழிக்க வைக்கிறது.
டைட்டில் கார்டில் புகழ்பெற்ற தம்பதிகளின் புகைப்படங்களை காட்டுவது, சென்னைக்கு வரும் ஹீரோ வேலை தேடிச் செல்லும் இடங்களில் ஏமாற்றத்துடன் திரும்புவது, கிளைமாக்சில் வரும் சின்ன திருப்பம் ஆகியவை மட்டுமே இது சினிமா என்பதை நினைவூட்டுகிறது.- தினகரன் விமர்சனக்குழு.
இன்னாருக்கு இன்னாரென்று - விமர்சனம்
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment