மன்னார் நகர சபைக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு- இரட்ணசிங்கம் குமரேஸ்-(Video)
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் உள்ள மன்னார் நகர சபைககுச் சொந்தமான காணியினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள நிலையில் குறித்த காணி தொடர்பில் மன்னார் நகர சபை மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று(31) வியாழக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,,,,
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் தெரிவு செய்யப்பட்ட 5 ஏக்கர் காணி 1999 ஆம் ஆண்டு மன்னார் நகர சபைக்கு பூங்கா அமைத்தல் மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்தல் போன்றவற்றிற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை கடந்த 15 வருடங்களாக மன்னார் நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு காணி சீர் திருத்த ஆணைக்குழு(எல்.ஆர்.சி) ஊடாக தனி நபர் ஒருவருக்கு குறித்த காணி வழங்கப்பட்டதாக கூறி குறித்த நபர் மன்னார் நகர சபைக்கு வந்து வரி செலுத்த முற்பட்ட போதே குறித்த காணி தனி நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்தோம்.
இந்த நிலையில் மன்னார் நகர சபை காணி சீர் திருத்த ஆணைக்குழு (எல்.ஆர்.சி) உடன் தொடர்பு கொண்டு குறித்த காணி தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தோம்.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் கடந்த வாரம் மன்னார் நகர சபையில் இடம் பெற்ற போது நகர சபையின் உப தலைவரினால் குறித்த காணி பிரச்சினை சர்ச்சையாக முன்வைக்கப்பட்டதோடு குறித்த காணி பிரச்சினை தொடர்பில் உடனடியாக உரிய சட்ட நடவடிக்கையை மன்னார் நகர சபை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை(31) மன்னார் நகர சபையில் குறித்த காணி தொடர்பான அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.
-இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,முத்தலீப் பாரூக் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
-இதன் போது உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம்,மன்னார் நகர சபையின் செயலாளர்,உப தலைவர்,உறுப்பினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தநதை இ.செபமாலை அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைவாகவும்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கி ஆலோசனைக்கு அமைவாகவும் குறித்த காணி அபகரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும்,வழக்கு தொடரப்பட வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நேற்று(31) வியாழக்கிழமை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குறித்த காணி பிரச்சினை தொடர்பாக நகர சபையின் தலைவரின் பெயரில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காணியில் இருந்த தனி நபர் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
குறித்த காணி தொடர்பில் வழக்கை முன்னெடுப்பது தொடர்பில் நகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர சபைக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு- இரட்ணசிங்கம் குமரேஸ்-(Video)
Reviewed by NEWMANNAR
on
August 01, 2014
Rating:

No comments:
Post a Comment