அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஐந்து கிராம மக்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அமைதி ஊர்வலம்-அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு.-Photos

இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை உட்பட மூன்று கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் தீவுப்பகுதியைச் சேர்ந்த 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம் ஒன்றை இன்று புதன் கிழமை காலை (19) மேற்கொண்டதோடு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை மற்றும் மன்னார் மாவட்ட 'வளர்பிறை' பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து குறித்த அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டனர்.

இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம்,ஜிம்ரோன் நகர்,ஜீவபுரம்,உப்புக்குளம்,பள்ளிமுனை ஆகிய 5 கிராம மக்கள் இணைந்து குறித்த ஊர்வலத்தை மேற்கொண்டனர்.

குறித்த கிராமங்களின் இதுவரை இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை,சில கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினை,மற்றும் வீதி சீரின்மை ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து குறித்த அமைதி ஊர்வலத்தை மேற்கொண்டனர்.

மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் காலை 9.30 மணிக்கு குறித்த ஊர்வலம் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

பின் அங்கிருந்து குறித்த அமைதி ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

இதன் போது கலந்து கொண்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வாறு குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட 5 கிராம மக்களும் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்து தமது பிரச்சினைகளை நேரடியாக தெரிவிக்க விரும்பினர்.

ஆனால் அதற்கு அதிகாரிகள் இடமளிக்காத நிலையில் ஒரு சில கிராம மட்ட தலைவர்கள் மாத்திரமே அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களை சந்தித்து மகஜர் வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்க அதிபரிடம் மகஜர் வழங்கப்படுவது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊர்வலத்தில் திரண்டு வந்த மக்கள் ஆத்திரமடைந்த நிலையில் அரசாங்க அதிபரை சந்திக்க முயன்றனர்.ஆனால் அரசாங்க அதிபர் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வர இல்லை.

இந்த நிலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் மாவட்டச் செயலகத்திற்கு முன் பதாதைகளுடன் அமர்ந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலங்கள் அவ்விடத்தில் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்த மக்கள் அரச அதிபரின் செயற்பாட்டை கண்டித்த நிலையில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் நகர சபையிடம் கையளிக்கச் சென்றனர்.

இதன் போது மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் நகர சபை உறுப்பினர்களான இரட்ணசிங்கம் குமரேஸ்,எஸ்.பிரிந்தாவனநாதன் ஆகியோர் குறித்த மக்களை வரவேற்று அந்த மக்களின் கோரிக்கைகளையும்,பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டதோடு அந்த மக்கள் வழங்கிய மகஜரையும் பெற்றுக்கொண்டனர்.

பின் மன்னார் நகர சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல வேலைத்திட்டங்களையும் உடனடியாக குறித்த கிராமங்களில் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகர சபை தலைவர் தெரிவித்த நிலையில் மக்கள் அமைதியாக சென்றனர்.

மாவட்ட அரசாங்க அதிபரை சந்திக்கச் சென்ற போது அவர் நடந்து கொண்ட விதம் குறித்து வருகை தந்த மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்தனர்.











மன்னாரில் ஐந்து கிராம மக்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அமைதி ஊர்வலம்-அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு.-Photos Reviewed by NEWMANNAR on November 19, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.