சிறையில் வாடும் கைதிகளை உடனடியாக பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும்:சுரேஷ் பிரேமச்சந்திரன்
எந்தவிதமான வழக்குகளும் இல்லாமல் நீண்டகாலமாக சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பினை வழங்கி உடனடியாக விடுதலை செய்வதே புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு காட்டக்கூடிய நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழாராட்சி மாநாட்டில் உயிர்நீத்தவர்களின் நினைவு நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள நினைவுத்திடலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தங்களுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்கச் சொல்லிக்கேட்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் வாக்களித்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்று அரச தரப்பு தமது நல்லெண்ணத்தைக் காட்டுவதற்கான ஒரு காலகட்டம் வந்திருக்கிறது.
எந்தவிதமான வழக்குகளும் இல்லாமல் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் வாழக்கூடிய அரசியல் கைதிகளும் வழக்குககளை இழுத்தடித்து பத்து பதினைந்து வருடங்களாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற இளைஞர்கள் யுவதிகளும் சிறைகளில் உள்ளனர். எனவே முதலாவதாக பொதுமன்னிப்பின் ஊடாக இவர்கள் அனைவரையும் விடுவிப்பதே இந்தஅரசாங்கம் தமிழ் மக்களுக்கு காட்டக்கூடிய நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு இந்த விடயமானது உந்துசக்தியைக் கொடுப்பதாக அமையும்
அந்த வகையில் இது தமிழ் மக்கள் கொடுத்த வெற்ற என இந்த அரசாங்கமும் முக்கியமாக ஜேவிபி கூடச் சொல்லியிருக்கின்றது. இந்நிலையில் இந்த வெற்றியானது தமிழ் மக்களால் கிடைத்த ஒரு வெற்றி என்ற விடயம் அரசாங்கம் உட்பட்ட அனைவருக்கும் தெரியும்.
குறைந்த பட்சம் இந்த வெற்றியின் தன்மையைப் புரிந்துகொண்டு நல்லெண்ண அடிப்படையில் கைதிகளை முதற் கட்டமாக விடுதலை செய்வதும் தொடர்ச்சியாக முழுமையாக மக்களை மீள்குடியேற்றம் செய்வதும் பொருத்தமாக அமையும்.
இருபத்தைந்து முப்பது வருடமாக மக்கள் நடுத்தெருவில் நிற்பதை எந்தவொரு நாகரீகமான சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இந்த இரண்டையும் செய்வதே தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் உறவை வலுப்படுத்தும். ஒரு சுமூகமான நிலையில் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும் என நாங்கள் கருதுகின்றோம்.
எனவே இந்த அரசாங்கம், புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ்விடயம் தொடர்பில் கவனமெடுத் செயற்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமும் கோரிக்கையுமாகும் என்றார்.
சிறையில் வாடும் கைதிகளை உடனடியாக பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும்:சுரேஷ் பிரேமச்சந்திரன்
Reviewed by NEWMANNAR
on
January 10, 2015
Rating:

No comments:
Post a Comment