மன்னார் மண்ணிலே கல்வித் தொண்டு புரியும் “துரையம்மா அன்பகம்” இயக்குனர்களின் இதயதத்தில் இருந்து ,,,,,,,,,
மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் கல்விக்காக சேவை புரியும் “துரையம்மா அன்பகம்” இயக்குனர்களின் இதயதத்தில் இருந்து ...................
மன்னார் மண்ணிலே அளப்பரிய சேவைகள் செய்யும் அமைப்புகள் தேடலில் தூரநோக்குச் சிந்தனையோடு தூக்கணாங் குருவிக்கூடு போல துலங்குகின்ற கல்விக்காக துடிக்கின்ற இதயத்தோடு “துரையம்மா அன்பகம்”; இயங்கிவருகின்றது.
“ஒரு வருட பலனுக்கு நெல்லை நடுங்கள்
முப்பது வருட பலனுக்கு மரத்தை நடுங்கள்
நூறாண்டுப்பலனுக்கு கல்வியை கொடுங்கள்”
ஆம் இந்த அழகிய சீனப்பழமொழியின் பொருளை நன்கு புரிந்து கொண்டு கல்வித் தொண்டு புரியும் “துரையம்மா அன்பகம்” தான் இன்றைய எம் தேடல் தெரிவு தொடர்கிறது கல்வியறிவு------
அமைப்பின் பெயர்- “துரையம்மா அன்பகம்” மன்னாரில் இலக்கம் 137-3c புதிய மூர்வீதியில் அமைந்துள்ளது.
இவ்வமைப்பின் தோற்றமும் நிர்வாகமும் -
இவ்வமைப்பானது 2008ம் ஆரம்பிக்கப்பட்டது. நிர்வாக இயக்குனரான உதயன். அவர்கள் தனியாளாக ஆரம்பித்து சேவைகள் தொடர்கின்றபோது தேவைகள் அதிகரிக்க கடந்த மூன்று வருடங்களாக உத்தியோக பூர்வமாக செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. இவ்வமைப்பின் தலைவரும் நிர்வாக இயக்குனருமாகிய எ.உதயன் அவர்களும் .உதவித்தலைவர் ஜெரோம் பொருளாளர்-து.நோயல் பீரிஸ் செயலாளர் பெர்ணாண்டோ ஆலோசகர்கள் அங்கத்துவம் பெற்ற முப்பதிற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து செயலாற்றுகின்ற கல்விக்காக மட்டுமே தம்மை அர்பணித்து தாமாகவே இணைந்து கொண்ட நல்ல உள்ளங்கள் கொண்ட அமைப்பே இந்த துரையம்மா அன்பகம்
இவ்வமைப்பின் சேவை பற்றி?
சுமார் ஏழு வருடங்களுக்கு முன் துரையம்மாவின் மகனாகிய உதயனும் அவரது துணைவியாருடன் சேர்ந்து சிறிதாக ஆரம்பித்தது தான் இந்த துரையம்மா அன்பகம் தனது தாயின் நினைவு தினத்தில் ஒரு கிராமத்தில் உள்ள பிந்தங்கிய பாடசாலையில் இருந்து நன்றாக படிக்ககூடிய பத்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வந்தார். இப்படியாக ஒவ்வொரு அண்டும் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களை தெரிவு செய்து உதவிகளை வழங்கி வரும் போது மாணவர்களின் தேவை அதிகரிக்க தொடங்கியது. உதயன் அவர்கள் தனியொருவராக சமாளிக்க முடியாமல் தன்னைப்போல கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற சிலரிடம் ஆலோசனையும் அமைப்பின் செயற்பாடுகளையும் விளக்கியவர்.
எப்படி செய்யலாம்…?
எங்கே செய்யலாம்…?
இதன் பயனாளிகள யார் என்பதை எவ்வாறு தெரிவு செய்யலாம்…?
என பல கேள்விகளை எம்முன்வைத்தார். அவரும் சில சட்டதிட்டங்களை வகுத்து வைத்திருந்தார் அவரது சட்டதிட்டங்கள் ஏற்றுக்கொள்ளும் படியே இருந்தது. இன்னும் புதிய சட்டதிட்டங்களும் அணுகுமுறைகளும். இலக்கு தூரநோக்குச்சிந்தனை அமைப்புக்கென்று தனியாக யாப்பும் உருவாக்கியுள்ளோம் அதிலே எமது அமைப்பின் சகல விதிமுறைகள் சட்டதிட்டங்கள் அங்கத்துவம் கொள்கைகள் என்பனவற்றை தெளிவாக விளக்கியுள்ளோம்.
அமைப்பின் இலக்கும் தூரநோக்கு சிந்தனையும் என்ன?
எமது இலக்கு யாவருக்கும் கல்வி ஆனால் எம்மால் முடிந்தவரை கல்வி கற்கக் கூடிய மாணவர்களை இனம் கண்டு அவர்களின் கல்வி கற்றலை ஊக்குவித்து. அவர்களின் சிறந்த எதிர்காலத்தை அவர்களே அமைத்துக்கொள்ள வழியினை காட்டுதல். ஆரம்பக்கலவியினை வழங்குதலும் தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவி செய்து கல்வியறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குதல்.
மாணவர்களை எவ்வாறு தெரிவு செய்கிறீர்கள்?
ஒவ்வொரு பின்தங்கிய கிராமங்களில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளற்ற பாடசாலையில் இருந்து நன்றாக படிக்கக் கூடிய மாணவர்கள் வறுமையின் நிமித்தம் கல்வியை தொடரமுடியாமல் தவிக்கின்ற மாணவர்களை இனம் கண்டு அப்பாடசாலையின் அதிபர் அத்தாட்ச்சிககடிதத்தேடும் அக்கிராமத்தின் கிராம அலுவலரின் கடிதமும் பெற்றோரின் கடிதமும் வாங்கிக் கொண்டு நாம் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான கற்றல் உபகரணங்களை வழங்குவோம். ஒரு பாடசாலையில் முதல் இடங்களைப்பெறுகின்ற பத்து மாணவர்களை தெரிவு செய்தே எமது உதவிகள் வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டு முதலாம் இடத்தை பிடிக்கின்ற பிள்ளை தொடர்ந்தும் அதே முதலிடத்தை ஒவ்வொரு ஆண்டும் பெறவேண்டும் இல்லையெனில் அப்பிள்ளைக்கான உதவியினை நிறுத்திவிட்டு இன்னுமொரு படிக்கின்ற பிள்ளைக்கு வாய்ப்பினை வழங்குவோம். ஒரு முறை மட்டும் கற்றல் உபகரணங்கள் வழங்குவதில்லை நாம் ஒரு பாடசாலையில் தெரிவு செய்கின்ற பத்துப்பிள்ளைகளும் எந்தத் தரத்தில் இருக்கின்றார்களோ அந்தத் தரத்தில் இருந்து உயர்தரம் பல்கலைக்கழகம் வரை எமது சேவை தொடரும்.
பாடசாலையில் மாணவர்கள் தெரிவு செய்யும் போது பிரச்சினைகள் ஏற்படுவதில்லையா?
நல்லதொரு கேள்வி நாம் தெரிவு செய்கின்ற கிராமத்தில் உள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊர்த்தலைவர்கள் கிராமசேவகர் பாடசாலை அதிபர்கள் மக்கள் அனைவருடனும் சந்திப்பொன்றை ஏற்படுத்தி எமது அமைப்பின் நோக்கம் திட்டம் சேவைகள் என்பனவற்றைப்பற்றி தெளிவுபடுத்துவோம் மாணவர்களின் தெரிவு முறையும் பாடசாலையின் அதிபரின் கடிதம் பெற்றோரின் கடிதம் கிராமசேவகரின் கடிதம் மாணவர்களின் புள்ளிகள் தொடர்ந்து கவனிப்போம் அதுபோல பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விச்செயற்பாட்டினை தொடர்ச்சியாக எமக்கு தெரிவிக்க வேண்டும் எம்மோடு தொடர்பில் இருக்கவேண்டும். இவற்றில் எதாவது ஒரு செயற்பாடு குறையுமானால் அந்த மாணவனுக்கோ மாணவிக்கோ எந்த விதமான உதவியிணையும் வழங்கமாட்டோம். ஏனெனில் கல்வியை எதிர்பார்த்துக்கொண்டு எம்மோடு பல பல மாணவச்செல்வங்கள் வாழ்கின்றார்கள் அவர்களின் வாய்ப்பினை பிரகாசப்படுத்தி அவர்களுக்கும் வாய்ப்பினை வழங்குவதே எமது இலக்கு.
உங்கள் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு ஏதும் தகுதிகள் தேவையா?
எந்த தகுதியும் தேவையில்லை ஆனால் பொதுநலத்தோடு பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கவேண்டும் இருந்தால் இணைந்து கொள்ளுங்கள் தடையே இல்லை எப்போதுமே ஆம் எம் அமைப்பில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் தாமாகவே வந்து இணைந்து கொண்டவர்கள் தான் இனம்-மொழி-மதம்-ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எந்த வேறுபாடுகள் கிடையாது அனைவரும் தங்களின் மாதவருமானத்தில் இருந்து தங்காளால் முடிந்தளவு ஒரு தொகைப்பணத்தினை ஒவ்வொரு மாதமும் தருகின்றார்கள். அதற்கான பற்றுச்சீட்டு வழங்கி விடுவோம். தினக்கூலிக்கு வேலை செய்கின்றவர்களும் எமது அமைப்பில் இருக்கின்றார்கள். அவர்களும் தங்கள் பங்களிப்பினை தொடர்ச்சியாக செய்கின்றனர் அது போலவே தந்தையில்லாத தாயுடனும் நான்கு பெண் சகோதரிகளோடு பிறந்த மூத்தவள் சகோதரியொருவர் தனது மாதச்சம்பளமான 5000ரூபாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 300ரூபாவினை தருகிறார் என்றால் அது 3000ரூபாவிற்கு சமனல்லவா…! இவ்வாறு பல நல்ல உள்ளங்கள் எம் அமைப்பில் உள்ளன ஒரே நோக்கத்திற்காய் சேர்ந்துள்ளோம் இருப்பதை சந்தோசமாக பகிர்ந்து கொள்ளுங்கள் அப்போது உணர்வீர்கள் உண்மையான சந்தோசத்தை…
உங்கள் அமைப்பானது தொடர்ச்சியாக இயங்குவதற்கு தேவையான பணத்தினை எவ்வாறு ஈடுசெய்ய முடியுமென நினைக்கின்றீர்கள்?
எங்கள் அமைப்பில் தற்போது 30ற்கு மேற்பட் அங்கத்தவர்கள் உள்ளனர் அவர்கள் மாதமாத தருகின்ற பணத்தினை சேர்த்து உடனுக்குடன் உதவிகளை வழங்கி வருகின்றோம். இவ்வாறு எம்மால் தொடர்ச்சியாக இயங்க முடியாது. அதனால் உதவிசெய்ய விருப்பம் தெரிவித்த உள்நாடு வெளிநாட்டு எமது உறவுகளிடமும் மற்றும் பலரிடமும் கேட்டுள்ளோம். அவர்கள் நன்கொடை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றார்கள் ஆனால் உடனே பெற்றுக்கொள்ள முடியாது. பல சட்டதிட்ங்கள் உள்ளன எமது அமைப்பினை சட்டப்படி அரசபதிவு செய்ய வேண்டும். அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். இதுவரை எமது அமைப்பின் சேவையினை விரிவுபடுத்துவதும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அரசாங்கப்பதிவானது கட்டாயமாக தேவையானது. ஆகையால் பதிவை மேற்கொள்வதால் அரசாங்கத்திடம் இருந்தும் உதவிகள் கிடைக்கும் அதே வேளை எமது உறவுகளும் உறவினர்களும் தருகின்ற நன்கொடைகள் உதவிகளை நிலையான வைப்பிலிட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டிப்பணத்தில் இருந்து எமது கல்விச் சேவையினை தொடரலாம் அதிகமான நிதிகிடைக்கப்பெறும் போது இன்னும் பல பாடசாலைகள் தெரிவு செய்து பணிகள் விஸ்தரிக்கப்படும்.முடிந்தவரை முயற்சிப்போம் முயற்சியை கைவிடமாட்டோம்.
மன்னாரில் பல அமைப்புக்கள் உள்ளது அவற்றிற்கும் உங்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை இடையூறுகள் உள்ளதா?
இதுவரை எங்கள் அமைப்பிற்கு எந்த விதமான இடையூறுகள் பிரச்சினைகளும் இல்லை ஆனால் பதிவு செய்த பின்பு சேவைகளைக் கண்டு எமக்கான உதவிகள் கிடைக்கும் போது பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாடப் அமைப்பானது-விசேடத்தேவையுடையவர்களுக்காவே இயங்கிவரும் அமைப்பு. மார் அமைப்பானது பல்கலைக்கழகமாணவர்களுக்கான நிதியினை வழங்கவென இயங்கி வரும் அமைப்பு அது போல ஞானம் பவுன்டேசன்-இன்னும் பல அமைப்புகள் பெரியளவில் சேவைகள் செய்து வருகின்றார்கள். நாம் இன்னும் பெரியளவில் செய்யவில்லை எமது இலக்குப்படி யாருமே கண்டுகொள்ளாத தெரிவு செய்யாத தேவையுடைய இடத்தினை தெரிவு செய்து. அதற்கான வழிமுறைகளை இனம் கண்டு எமது உதவியினை வழங்குவோம். எமது சேவை யாருக்கு தேவையோ அங்கு எமது சேவை தொடரும்.
முன்பள்ளி கட்டும் திட்டமும் அதன் வேலைப்பாடும் பற்றி?
“ஒரு நூல்நிலையம் திறக்கப்படும் போது ஒருசிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது விவேகானந்தரின் கருத்தின் ஆன்மாவாக” முன்பள்ளி கட்டும் திட்டத்திற்கான வேலைப்பாடு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அரசாங்க அனுமதி கிடைத்து விட்டது ஆனால் கட்டுவதற்கான இடத்தினை மூர்விதிக்குள் தெரிவுசெய்தோம். அது சாத்தியப்படவில்லை காரணம் அங்கு ஏற்கனவே இரண்டு முன்பள்ளிகள் இருக்கிறது. ஏன் இன்னொரு முன்பள்ளி என்று கேள்வி கேட்டார்கள்--? அவர்களின் முரண்பாடான செயல் எம்மை சிந்திக்கவைத்தது. அவர்கள் தடுப்பதற்கான காரணம் நாம் இலவசமாக முன்பள்ளியை நடத்தினால் அவர்களின் வியாபாரம் நடைபெறாமல் போய்விடும் அல்லவா 5000-10000-20000 கட்டிப்படிக்க இயலாத எத்தனையோ வறுமையினால் வாடுகின்ற பிள்ளைகள் எம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்களின் கல்வியினை முன்னேற்றுவோம் என்றால் எமக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தாங்களும் செய்யமாட்டார்கள் செய்பவர்களையும் விடமாட்டார்கள். எல்லாமே..
அவ்வாறெனில் முன்பள்ளி கட்டும் திட்டத்தினை கைவிட்டு விட்டீர்களா?
இல்லை இடத்தினை மாற்றிக்கொண்டோம். வண்ணாக்குளம்- குஞ்சுக்குளம்- செம்மண்தீவு மூன்று இடத்தில் தற்போது செம்மண்தீவினை தெரிவு செய்துள்ளோம் மூன்று கிராமங்களுக்கும் முன்பள்ளி தேவைதான் ஆனால் அவசரமாக தேவைப்படுவது செம்மண்தீவுக்கு தான் காரணம் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த முன்பள்ளி சில காரணங்களினால் நிறுத்தியுள்ளார்கள் அந்தப்பிள்ளைகளின் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இங்கு வாழுகின்ற 143 குடும்பங்களில் இருக்கும் பிள்ளைகள் குறைந்தது 60 இருப்பார்கள் இரண்டு தொண்டர் ஆசீரியர்களாவது வேண்டும். மிகவும் விரைவாக கல்விப்பணியினை ஆரம்பிக்க கட்டிடம் கட்டும் பணியிணை ஆரம்பிக்கவுள்ளோம். அரசாங்கம் காணிதருவதாக வாக்களித்தார்கள் தராத பட்சத்தில் விலைக்கு காணி வேண்டியாவது. ஆண்டவனின் அருளாசியோடு பணியினை தொடர்வோம்.
முன்பள்ளியில் சிறார்களுக்கான கல்வி முறையினை எவ்வாறு வழங்கவுள்ளீர்கள்?
ஆரம்பக்கல்வியானது ஓவ்வொருவரக்கும் அவசியமானது அதை பழமையோடு புதுமையாகவும் நவீனயுகத்திற்கு ஏற்றப்போல சிறார்களின் இலகுவான முறையில் விளங்கக்கூடியவாறு கல்வி முறையினை அமைக்கவுள்ளோம். தகுதியான ஆசிரியர்கள் அதே நேரத்தில் சேவைமனப்பாங்கும் அர்பணிப்பும் வேண்டும். அவர்களைக்கொண்டு தான் வெளிநாட்டுக்கல்விமுறையினை அதாவது கணணியில் மூலம் அறிவை விருத்தி செய்யக்கூடிய வகையில் தமிழோடும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுத்தல் கணணியறிவையும் தொழில்நுட்பறிவையும் வளர்த்தல் முக்கியம். திரையில் படிப்பதால் சிறார்களுக்கு மிகவும் கல்வியில் விருப்பம் ஏற்படும் ஆரம்பத்திலேயே சரியான பாதையைக் காட்டிவிட்டால் அவர்கள் இலட்சியப்பாதையில் சென்று இலக்கினை அடைந்து விடுவார்கள் சிறு தீக்குச்சியினால் அறியாமையை எரித்து கல்வியினால் ஒளியேற்றுவோம்.
அமைப்பு தவிர்ந்து உங்ளது ஏனைய செயற்பாடுகள் பற்றி?
எனது முழுநேரப்பணியே கல்வியினை வளர்ப்பதே. வாழ்வதற்கான தொழிலாக புகைப்படமெடுத்தல் இருந்தாலும் வாழ்ந்ததிற்கான அடையாளமாக எதையாவது சாதிக்க வேண்டும் அதுவும் அமைப்பைவிடவும் நான் தனியாக எனது வீட்டில் அனோஐன் எனும் மாணவணை எனது பொறுப்பில் எடுத்து அவனது உயர் கல்விவரை எனது சொந்தச்செலவில் அனைத்துவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறேன். தற்போது தரம் 7ல் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் கல்வி கற்று வருகிறான். எனக்கு மூன்று பிள்ளைகள் அனோஐனோடு சேர்த்து எனக்கு தற்போது நான்கு பிள்ளைகள் தந்தையை போல் எனது சேவை அவனுக்கு. ஒவ்வொரு தாய் தந்தையும் தான் ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறந்த ஆசான்களும் தெய்வங்களும் உணர்ந்தால் நன்மையே,,
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஏதும் உள்ளதா?
ஆம் நிறையவே உள்ளது அதிலும் என்னை கவலைக்குள்ளாக்குவது எனது தாயின் இயல்பான கொடுக்கும் குணம் தான் என்னிடமும். எனது மனைவி பிள்ளைகளிடமும் உள்ளது. நான் இளைஞனாக இருக்கும் போதே எனது தயார் சொல்லுவார் குறைந்தது நான்கு பேரையாவது படிக்க வைக்கவேண்டும் அது தொந்தக்காரருக்குள் செய்தால் உதவி பிறருக்கு செய்தால் அது சேவையடா முடிந்தால் உனது வாழ்விலே அதை செய் என்பார் எனது அன்னையின் வாக்கை வேதவாக்க ஏற்று அந்த இளம் வயசிலே செய்ய ஆரம்பித்தேன். நானும் எனது அண்ணணும் ஆளுக்கொருவரை படிப்பிக்க ஆரம்பித்தோம.; படிக்க வைத்தோம் அவர்களும் படித்தார்கள் பட்டம் பெற்றார்கள் இப்போது நல்ல நிலையில் உள்ளார்கள் அண்ணன் படிப்பிக்கவைத்தவர் வைத்தியராக யாழ்பாணத்திலும் நான் படிக்க வைத்தவர் வவுனியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவுள்ளார் ஆம் இருவருக்கும் குறைந்தது ஒரு இலட்சம் முதல் ஒருலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா வரை சம்பளம் வாங்குகிறார்கள். சொகுசான வங்களா வீடு சொகுசான கார் என வசதியாகத்தான் வாழ்ந்து வருகின்றார்கள் குடிகும்மாளத்திற்கு பொழுதுபோக்கிற்கு என செலவு செய்யும் தொகையும் அதிகமே அதிகம் தான் ஆனால் குறைந்தது மாதமதம் ஒரு 5000 ரூபா வரை தரலாமே---? இல்லை ஒரு மாதம் குடிக்கு செலவிடும் பணத்தினை சேர்த்தால் ஒரு மாணவனை சாதரரண தரம் வரை படிக்க வைக்கலாம் அதுவும் இல்லை. முகநூலில் நாம் என்ன செய்கிறோம் என்பதை உற்று நோக்குவார்கள் விமர்சனம் செய்வார்கள் ஆனால் உதவ முன் வரமாட்டார்கள் தங்களின் முன்னைய வாழ்வை நினைத்து பார்த்தால் புரியும் செய்ததை சொல்லிக்காட்ட வில்லை செய்நன்றி மறந்து சுயநலப்போர்வைக்குள் கண்ணை திறந்தபடியே உறங்குகின்றார்களே அதுதான் எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது இவர்களைப் போல சுயநலவாதிள் பலர் எம்மோடு வாழ்கிறார்கள்…
உங்கள் அமைப்பின் மேலதிக திட்டங்கள் எதிர்கால இலக்குகள் பற்றி?
எமது அமைப்பு பலதிட்டங்களை தீட்டிவைத்திருந்தாலும் எம்மால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்வதற்கு தேவையான பணத்தினை சேமிக்க வேண்டும். தேவைகள் தேவைப்படுவோர் அதிகமாகவே உள்ளனர் எமது சேவைகள் அவர்களையே நோக்கியே. முன்பள்ளி திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும் அதுபோல் ஏனைய செயற்பாடுகளையும் செய்து வருகிறோம் எனக்கு இன்னும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று ஆசைதான் ஆனால் எம்மமைப்பின் உறுப்பினர்களின் ஆலோசனைப்படி அகலக்கால் பதிக்காமல் தற்போதுள்ள தேவைகளை முதலில் நிறைவு செய்வோம் பின்பு தொடர்வோம் சிந்தித்து பார்த்தேன் உண்மைதான் ஒன்றை பூரணமாக செய்வதில் தான் நிறைவு இருக்கிறது. அதன் படியே செயலாற்றி வருகிறோம்.
உங்கள் வாழ்வில் நன்றிக்குரியவர்கள் பற்றி?
எனக்கு இந்த அருமையான வாழ்வைத்தந்த எனது தெய்வங்களான தாய்தந்தையருக்கும் என் உற்ற துணையான மனைவி பிள்ளைகள் அதுபோல எந்த வித எதிர்பர்ப்பும் இல்லாமல் பொதுநோக்கு சிந்தனையோடு தமது சேவையுணர்வால் செயலாற்றிக்கொண்டிருக்கும் எமது துரையம்மா அன்பகத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அதுபோல முடிந்தளவு உதவிகளை தாரளமாக வழங்கி வருகின்ற அனைவருக்கும் எனது நன்றிக்குரியவர்களும் நினைவில் நிற்பவர்களும் என்றுமே சேவை மனப்பாங்கோடு இணைந்து இருங்கள். தனியொருவனாக---குடும்பமாக---குழுவாக---இப்போ விருட்சமாக உருவாகியுள்ளது ஏழாவது ஆண்டில் இன்னும் தொடரும் சேவை-----
இதுவரை---
பூம்பூகார்,ஈஸ்வரபுரம்,கிடாச்சுரி, வவுனியா மாவட்டம்
தலைமன்னார்கிராமம்,கள்ளியடி,கத்தாளமபிட்டி,சவுரிகுளம்,மன்னார் மாவட்டம்
இனி----குஞ்சுக்குளம்,செம்மண்தீவு,வண்ணாக்குளம் பெரியமுறிப்புதேவன்பிட்டிமூன்றாம்பிட்டி இன்னும் பல
மன்னார் மண்ணின் பெருமை பேசும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?
இன்று பல இணையங்கள் மன்னாரை பிரதிபலித்தாலும் அன்றைய காலங்களில் மன்னாரில் நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் உடனுக்குடனும் மன்னாரின் அனைத்து விடையங்களையும் அறிய முடியும் என்றால் அது நியூமன்னார் இணையத்தின் மூலம் தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை நல்லதொரு வேலையை செய்கிறார்கள் யார் இவர்கள் என்ற கேள்விகள் எமக்குள் இருந்து கொண்டே தான் இருந்தது. யார் என்று தெரிய வில்லை சரி யாராக இருந்தாலும் நல்லது செய்கிறார்கள் தொடரட்டும் அவர்களது சேவை என பாராட்டியுள்ளோம் உண்மையாகவே அந்த நேரத்தில் எழுந்த கேள்விகளுக்கான விடையினை மன்னார் மண்ணில் உள்ள அமைப்புக்கள் கலைஞர்கள் மண்ணின் பெருமை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக சிறப்புக்கள் சேவைகள் என்பனவற்றை செவ்வி கண்டும் ஆய்வுக்கட்டுரை மூலமும் புகைப்படத்தின் மூலமும் வெளிக்கொணர்வது மகத்தான செயலே… நடைபெறுகின்ற செய்திகளை மட்டும் போடுகின்ற ஏனைய இணையங்களைப்போல இல்லாமல் கலைஞர்களை கொளரவிப்பதும் அளப்பரிய சேவைகள் செய்யும் அமைப்புகள் என அடையாளமிட்டு காட்டுவது எம்மை இன்னும் இன்னும் உற்சாகப்படுத்துவதும் எம்மை வெளிப்படுத்துவதுமாய் உள்ளது. நியூமன்னார் இணையத்தின் தேவை வளர்ச்சி தான் இப்போது முளைத்திருக்கும் ஏனைய இணையங்களின் வருகை… மன்னார் மக்களின் உவகை நியூமன்னார் இணையம்தான் இதன் நிர்வாக இயக்குனருக்கும் எம் அமைப்பினை செவ்வி கண்ட உங்களுக்கும் எம் அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்,,,,,,
தொடர்புகளுக்கு,,,,,,
தொலைபேசி இலக்கம் -94-232223201 ---(094778547445)
V,MANUVELPILLAI
THURAIYAMMA
E-mail-vthuraiyamma@yahoo,com
THURAIYAMMA
E-mail-vthuraiyamma@yahoo,com
செவ்வி வழங்கியவர்கள்- துரையம்மா அன்பகத்தின் நிறுவனர் -உதயன்
உதவித்தலைவர்;- ஜெரோம்
மன்னார் மண்ணிலே கல்வித் தொண்டு புரியும் “துரையம்மா அன்பகம்” இயக்குனர்களின் இதயதத்தில் இருந்து ,,,,,,,,,
Reviewed by NEWMANNAR
on
January 28, 2015
Rating:


.jpg)

No comments:
Post a Comment