வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது
யுத்த சூழ்நிலை நீங்கி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதால், வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கு நாட்டின் சில பகுதிகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த பொருட்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராயப்பட்டது.
யுத்த உபகரணங்கள், வெடி மருந்துகள், வெடிக்கும் பொருட்கள், பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் ஆடையை ஒத்த ஆடை வகைகள் மற்றும் தொலைகாட்டி ஆகியவற்றை வட மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யுத்த உபகரணங்கள், வெடி மருந்துகள் மற்றும் வெடி தன்மையுடைய பொருட்களை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைவிதிக்கப்பட்ட பொருட்களை விடுத்து வேறு பொருட்களை கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் இல்லையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:

No comments:
Post a Comment