அண்மைய செய்திகள்

recent
-

விம்பம்இப்பகுதியில் கலைச்சுடர் கலாபூஷண விருது பெற்ற மூத்தகலைஞர் தம்பிப்பிள்ளை பர்ணாந்து பீரீஸ் அவர்களின் அகத்திலிருந்து......................




கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் நாட்டுக்கூத்துக் கலைஞர்; வரவுகவிஞர் நாடகநெறியாளர் 50வருடத்திற்கு மேலாக கலையார்வத்துடன் கலையை வளர்த்து வரும் தனித்திறமைகளை தன்னகத்தே கொண்ட அண்ணாவியார் கலைச்சுடர் கலாபூஷண விருது பெற்ற மூத்தகலைஞர் தம்பிப்பிள்ளை பர்ணாந்து பீரீஸ் அவர்களின் அகத்திலிருந்து......................

தங்களைப்பற்றி?

 கடலும் கடல் சார்ந்த நெய்தல் இடமாகிய தாழ்வுபாடுதான் எனது சொந்த மண் ஆரம்பக்கல்வியை தாழ்வுபாடு பாடசாலையிலும் பின் நான்கு வருடங்கள் கொழும்பு சென்-ஜோன்ஸ் கல்லூரியிலும் சூழல் காரணமாக சாதாரண தரத்தினை மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் எனது கல்வியினை தொடர்ந்தேன் எனது தாய் சந்தான் டலிமா பாடுவார் நடிப்பாற்றலும் உடையவர் எனது தந்தை தம்பிப்பிளை சந்தான் 8ம் தரம் தான் படித்திருந்தாலும் கலையார்வம் மிக்கவர் துணை அண்ணாவியாராகவும் தாழ்வுபாடு மண்ணில் சம்மாட்டியாராக இருந்த படியால் தந்தைக்கு துணையாக இருந்ததால் மேற்படிப்பிற்கும் வேறுவேலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை அவசியமும் ஏற்படவில்லை.

தங்களது கலைப்பயணம் பற்றி?

 நான்கு ஆண்டுகள் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் போது நான் விரும்பி படித்தது தமிழ் பாடம் அங்கு எங்களுக்கு தழிழ் பாடத்தினை பண்டிதர் ஜோண்பிள்ளை அவர்கள் தான் கற்றுத்தந்தார். அவரின் வழிப்படுத்தலில் இலக்கியம்-நாடகம்-கூத்து-கவிதை-சிறுகதை போன்றவற்றின் சிறப்பினையும் எவ்வாறு எழுதவேண்டும் எப்படி பாத்திரமைப்பு இருக்க வேண்டும் என்பனவற்றை கற்றுத்தந்தார். அந்தச் சிறுவயதில் இருந்தே எனது கலையார்வம் என்னுள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. நான் பல சிறுகதைகள் நாடகங்களை எழுதினேன் நாட்டின் சூழல் காரணமாக 1958 மீண்டும் தாழ்வுபாட்டிற்கே திரும்பினேன். சாதாரண தரத்தினை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் பின் மேலதிகமாக படிக்கவோ வேலைக்கோ செல்லவில்லை தந்தையோடு சேர்ந்து மீன்பிடித்தொழிலில் இறங்கிவிட்டேன் ஆனாலும் கலையார்வம் என்னோடுதான் இருந்தது.

தங்களது முதலாவது மேடையேற்றம் பற்றி?

 1965ம் ஆண்டு எனது எழுத்தாலும் இயக்கத்தாலும் உருவான “அபாயத்தின் நிழல்” எனும் நாடகத்தினை இளைஞர்களைக்கொண்டு மேடையேற்றினேன். மக்களின் வரவேற்பையும் பெற்றேன் அதைத்தொடர்ந்து 1975ம் ஆண்டு நான் நாட்டுக்கூத்துக்களையும் எழுதி மேடையேற்ற ஆரம்பித்தேன் தென்மோடிதான் பாரம்பரிய இசையோடு ஒரு மணி ஒன்றரை மணிநேர கூத்துக்களாக எழுதினேன். அவ்வாறு எழுதி மேடையேற்றிய எனது முதலாவது நாட்டுக்கூத்து “கங்கையின் மைந்தன்” தான் அன்றைய மன்னார் தமிழ்ச்சங்கத்தின் போட்டியில் 2ம் இடத்தினையும் பெற்றது மகிழ்ச்சியான விடயம் அதைத்தொடர்ந்து “துரோணர்” நாட்டுக்கூத்து மன்னார் மாவட்டத்தில் 1ம் இடத்தினையும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2ம் இடத்தினையும் மாகாண மட்டம் தேசியமட்டத்தில் தெரிவானது மகிழ்ச்சியான தொடர்ச்சியாக நாட்டுக்கூத்துக்கள் வில்லுப்பாட்டுக்கள் இசைநாடகங்கள் 1ம் 2ம் 3ம் இடங்களைப்பெற்றன தொடர்கிறது பயணம்.

நாடகத்திற்கும் நாட்டுக்கூத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி?

 நாடகம் எனும் போது வசனநடை இசைநாடகம்-இலக்கிய நாடகம்-குறியீட்டு நாடகம் விரிவடைந்து கொண்டே செல்கின்றது கூத்து எனும் போது அதுவும் வடமோடி தென்மோடி காமன் கூத்து சிந்து நடை- வடமோடி தென்மோடி இணைந்ததுதான் மன்னார்ப்பாங்கு- யாழ்ப்பாணப்பாங்கு பேராசிரியர் மௌனகுரு தனது நூலில் இதன் விரிவாக்கம் வேறுபாடுகள் பற்றி எழுதியிருக்கிறார். இரண்டுமே ஒரேவிடையங்களை சொல்ல வந்தாலும் சிறு சிறு வித்தியாசங்கள் உண்டு கூத்து மக்களை இலகுவாக கவர்ந்து விடுகிறது இப்போதைய சினிமாவிற்கு முன்னால் எமது மக்கள் அமர்வதால் நிலமை மோசம்தான்.

சினிமா வருகையால் நாட்டுக்கூத்து நாடகங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றது பற்றி?

உண்மைதான் தற்போதைய சினிமா வருகையால் பெண்கள் தொலைக்காட்சி தொடர்நாடகங்களிளும் இளைஞர் யுவதிகள் இணையம் பேஸ்புக்-ருவிற்றர்-ஐபோன் போன்றவற்றில் மூழ்கி இருப்பதால் எமது பாரம்பியக் கலைகளானது அழிந்துகொண்டும். விழ்ச்சி கண்டும் வருகின்றது. அதை ஓர் அளவேனும் தடுப்பதற்கான முயற்சிகளாகத் தான் எமது மண்ணில் வருடத்தில் இரண்டு தடவையேனும் ஒளிவிழா திருவிழாக்களிலும் மேடையேற்றி வரு கின்றோம் இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு பின் இயேசுவின் பிறப்பு வெளிப்பாடான மூவிராசாக்களின் வருகையை “விண்மீன்” எனும் தலைப்பில் நாட்டுக்கூத்தாக எழுதிவைத்துள்ளேன். மேடையேற்றினேன். மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது அழிந்து போகவிட முடியாது அடுத்த தலைமுறைக்கு இக்கலையினை யார் கொண்டு செல்லப்போகிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை நடந்து முடிந்த மன்னார் பிரதேசகலை இலக்கிய விழாவில் நாட்டுக்கூத்திற்கு இடமளிக்கவில்லை… நேரப்பற்றாக்குறை என்றார்கள். முன்னைய காலத்தில் திருமறைக்கலாமன்றம் நாட்டுக்கூத்திற்கு ஆதரவளித்தது இப்போது நிதிப்பற்றாக்குறை காணப்படுவதால் தனது சேவைகளை குறைத்துக்கொண்டுள்ளது. 1989ம் ஆண்டு மேடையேற்றிய ஜோசப்வாஸ் வாழ்க்கை வரலாறு தோட்டவெளி வேதசாட்சிகள் ஆலயத்தில் அரங்கேற்றினோம் அதை மீண்டும் எமது ஊரில் மேடையேற்றுமாறு இளைஞர்கள் கேட்கிறார்கள் மிகவும் சந்தோஷமான விடயம். எமது ஊரைப் பொறுத்த மட்டில் பெரும்பாலும் எல்லோருமே கடற்றொழிலாளர்கள்தான் காற்றுக்காலத்தில் தொழிலுக்கு செல்ல மாட்டார்கள் அந்த மாதத்தில் தான் எமது மண்ணுக்கே உரிய சூசையப்பர்வாசாப்பு செணுகாப்பம்மாள் புனிதர் ஜோசப்வாஸ வாழக்கை வரலாறு போன்றவற்றை  மேடையேற்ற எண்ணியுள்ளோம்.

நான் இன்னும் சாதிக்கவேண்டும் என நினைத்ததுண்டா?

ஆம் இதுவரை நான் எதுவுமே சாதித்துவிடவில்லை சாதிப்பதற்கு இன்னும் நிறையவே உள்ளது இருக்கும் வரை என்னால் முடிந்த வரை கலையைவளர்ப்பேன் நவீனமுறைநாடகங்கள் குறியீட்டு நாடகங்கள் மரபுவழிமுறைகளை கொஞ்சம் மாறுவதாகவும் அதே நேரத்தில் மக்களை கவர்வதற்காய் நவீனமுறைக்கூத்துக்கள் வரவுகவி ஆடற்தரு இல்லாமல் எடுத்தவுடனேயே பாத்திரநடிப்பு ஆரம்பமாகும் இப்படியாகவும் கலையை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் ஒரு முறை சூசையப்பர்வாசாப்பு செணுகாப்பம்பாள் இயேசுவின் பாடுகள் (பாஸ்)போன்றவற்றினை அரங்கேற்றம் செய்வதற்கு நான்கு இலட்சம் தொடங்கி ஐந்து இலட்சம் வரை செலவாகின்றது மக்களின் ஒத்துழைப்பு கலைஞர்களின் தொடர்ச்சியான பயிற்சியும் விடாமுயற்சியும் பல இன்னல்கள் துன்பங்களுக்கு மத்தியில் எமது பாரம்பரிய கலைவடிவத்தினை பறைசாற்றி வருகின்றோம்.

மன்னார் மண்ணில் கலைஞர்களுக்கன கௌரவம் எவ்வாறு உள்ளது?

மன்னார் மண்ணில் கலைஞர்களுக்கான கௌரவம் உள்ளது. இல்லாமல் இல்லை சிலவேளைகளில் மறுக்கப்படலாம் வேறு மாவட்டங்களுக்கு கலைவிழா போட்டிகளில் நடுவராக பங்கு பற்றியுள்ளேன். மேடைகளில் பேசும் போது மன்னார் மாவட்டம் என்று வந்தால் நாட்டுக்கூத்துக்கலை நாடகங்கள் கலைஞர்கள் எனப்பேசியே ஆகவேண்டிய நிலை காரணம் அவ்வளவிற்கு மன்னார் கலைஞர்கள் கால்பதித்துள்ளார்கள் திறமையாகவுள்ளார்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள் என்றுதானே அர்த்தம். எனக்கு பல மன்றங்களினாலும் அமைப்புக்களினாலும் பொற்கிழியும் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்துள்ளார்கள்.

தங்களின் அனுபவத்தில் இருந்து இளைஞர் யுவதிகளுக்கு சொல்ல விரும்புவது?

எனது அனுபவம் எனும்போது மூத்த கலைஞர்கள் மக்கள் மத்தியில் கௌரவமாகநடத்தப்பட வேண்டும். சமூதாயத்தின் மூத்த கலைஞர்களின் பங்களிப்பும் பாரம்பரியக்கலையுடன் மனிதப்பண்புகளை கலாச்சாரத்தினையும் கட்டிக்காக்கும் காவலர்கள் ஒவ்வோரு கலைஞர்களும் ஒவ்வோரு உறுதியான தூண்கள் அவர்களின் கண்களில் தான் கடந்து வந்திருக்கிறது பாரம்பரியம் தற்போதைய இளைஞர் யுவதிகள் சினிமாமோகம் இணையகலாச்சாரம் சீரழித்துக்கொண்டு இருக்கின்றது இவற்றில் இருந்து விடுதலைபெறவேண்டும் இனிவரும் தலைமுறைக்கு நல்லவற்றை கொடுக்க வேண்டுமானால் இப்பஇருக்கின்ற இளையதலைமுறைதானே உத்வேகத்துடன் மூத்த கலைஞர்களை சந்தித்து கலந்துரையாடி கலை.கலாச்சாரம் பாரம்பரியம் பண்பு என்பனவற்ரை வீழ்ச்சியில் இருந்து காத்துக்கொள்ள முன்வரவேண்டும். அதேவேளை அடுத்ததலைமுறைக்கு வழிகாட்டியாக ஒளியூட்டவேண்டும்.

தங்கள் கலைவாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஏதும்?

 அன்றைய நாட்களில் நாட்டுக்கூத்துப்போட்டிகளில் எட்டு அல்லது ஒன்பது குழுக்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள் கடும் போட்டி நிலவும் மிகவும் கவனமாக கடும் பயிற்சியுடன் தான் போட்டிகளில் கலந்து கொள்வோம். அங்கு நடுவராக கடமைபுரிவபர்கள் முகம் பார்த்து தயவுதாட்சன்யம் பார்ப்பார்கள் ஊர்வேறுபாடுகள் மன்றங்கள் இடையில் வேறுபாடு பாகுபாடு காட்டுவார்கள் மிகுந்த மனவேதனை உண்டாகும். பலமுறை இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளது. ஒரு முறை மட்டக்களப்பில் நாட்டுக்கூத்துப்போட்டியில் மன்னாரில் முதலாம் இடம் கிடைத்த நாடகம் மட்டக்களப்பில் 3ம் இடம் கிடைத்தது. சமாதன நாடகம் “விழித்தெழு” சமூக நாடகங்களுக்கிடையிலான போட்டியில் 1ம் 2ம் இடங்களைப்பெற்ற நாடகங்கள் சமூகநாடகங்கள் அல்ல நவீன நாடகமும் குறியீட்டு நாடகங்கள் ஆகும் அதற்கான போட்டிகள் வரும் போது அவற்றை  தெரிவு செய்ய வேண்டுமே தவிர சமூக நாடகங்களுக்கிடையிலான நாடகப்போட்டிகளில் அதற்கு ஏன் 1ம் 2ம் இடங்களை கொடுத்தார்கள் பெரும் குழப்பம் உண்டாகியது. வாக்குவாதப்பட்டோம் எமக்கு கிடைக்கவேண்டிய வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டது. பத்திரிகைகளில் வந்தது சிறுகலந்துரையாடல் மூலம் பிரச்சினை வேண்டாம் என விலகிக்கொண்டோம் சில நடுவர்களின் மனநிலை வேறானதுதான் அச்சம்பவத்திற்கு பிறகு அடுத்தடுத்த வருடங்களில் பேட்டிகள் நடைபெறவே இல்லை…..?

கலையுலக வாழ்வில் சந்தோஷமான சம்பவம்?

எனது முதலாவது நாடகத்திற்கே “கங்கையின் மைந்தன்” நாடகம் 2ம் இடத்தினைப் பெற்றது. மகிழ்ச்சியானதுதான் ஏன் என்றால் அந்த நேரம் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்டவர்கள் வங்காலை மக்கள் அவர்கள் மிகவும் பழமையானவர்கள் பெரிய கிராமம் நாம் சின்ன கிராமம் அவர்களோடு போட்டிபோட்டு அந்தக்காலங்களிலே புதியதாய் அதுவும் 2ம் இடத்தினைப்பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி தானே அடுத்த வருடத்தில் நாட்டுக்கூத்துப்போட்டியில் “துரோணர் நாட்டுக்கூத்திற்கு 1ம் இடம் கிடைத்தது. வங்காலைக்கு இரண்டாம் இடம் முதல் இழந்த இடத்தை மீண்டும் பெற்றுக்கொண்டோம். தமிழ்த்தினப்போட்டியில் “தாடகை”எனும் நாடகத்திற்கு மாவட்டமட்டத்தில் வங்காலைக்கும் எமக்கும்தான் போட்டி வந்தது நாங்கள் 1ம் இடம் அவர்கள் 2ம் இடம் ஒரு முறை அவர்கள் வென்றால் மறுமுறை நாங்கள் வென்றுவிடுவோம் இது வழமைதானே போட்டியிருந்தது பொறாமையில்லை….

தங்கள் ஊரில் உள்ள மன்றம் பற்றி?

அந்தக்காலத்தில் 1963 அந்தோனியார் கலைக்கழகமாக இருந்து பின்பு உயர் தமிழ் மன்றம் 1965ம் ஆண்டு உருவாக்கப்பட்டது 50 வருடங்கள் கடந்து இயங்கி வருகின்றது அதன் சேவைகளாக நாட்டியக்கலாமன்றம்-ப்ளுசம் எனும் இசைக்குழுவும் உள்ளது தாழ்வுபாட்டு மண்ணின் பெருமை பழமை பண்பாடு கலை கலைஞர்களை கட்டிக்காத்து வருகின்றது இதன் பின் எமது இளையதலைமுறையினரால் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடரும்.

இதுவரை தாங்கள் எழுதி மேடைறே;றிய நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் ஏனையவைகள்?


நாட்டுக்கூத்துக்கள்

கங்கையின் மைந்தன் -1975 முதல் கூத்து தேசியம் 2ம் இடம்
நரகாசுரன்-1975
ஏரோதியானின் வஞ்சம்-1976
மனம் மாறிய மன்னன்-1977
துரோணர்- 1980 மாவட்டம் 1ம் இடம் தேசியம் 2ம் இடம்
பீஷ்மர்- 1980
ராமதூதுவன்- 1982
தாடகை- 1985 மாவட்டம் 1ம் இடம் தேசியம் 2ம் இடம்
தாவீதின் மைந்தர்கள்- 1985
மண்ணின் மடிந்த மணிகள்- 1986
அபயம் (புதிய)-1992 மாவட்டம் 1ம் இடம் மாகாணம் 2ம் இடம்
அனர்த்தங்கள்- 1995
விண்மீன்- 2000
பாதை- 2002
புனித அந்தோனியார்- 2010
புனிதர் ஜோசப்வாஸ்

சமூக நாடகங்கள்

அபாயத்தின் நிழல்- 1970- முதல் நாடகம்
சமுதாய சாக்கடைகள்
அன்பியத்தில் ஓர் நாள்
மனமாற்றம்
விதி செய்த சதி
மாதே உனது மனம்
என் மகன்
உறவுகள்
விழித்தெழு மாவட்டம் 1ம் இடம் மாகாணம் 3ம் இடம்
நாணயம்
திருப்பாடுகளின் காட்சி(பாஸ்)

அண்ணாவி மரபு தழுவிய நாடகங்கள்

கொக்கரக்கோ
அகதிகளாக
இயேசு வருகிறார்
சத்தியத்தின் முத்திரை
திருநிறை வேந்தர்கள்
கண்டேன் சீதையை
சாட்சிகள்(புதிய ஆக்கம்)
விசுவாசத்தூண்கள்(புதிய ஆக்கம்)
திருப்பம் (புதிய ஆக்கம்)
தேடுகிறேன் உன்னையே (புதிய ஆக்கம்)
மரணத்தின் நிழல்
அனாதைகள்
கலிலேயா கடலோரம்
சரித்திர நாடகங்கள்
தாய்மை தந்த தாயகம்
மாவீர பீஷ்மர்
ஒளிபிறந்த போது
யார் அந்த ஒளி
தாவீதுதாசன்
கதாகலாட்சேபம் வில்லுப்பாட்டு
இறைபணியாளர்
கற்பின் வேதசாட்சி
ஏணிகள்
அன்பியம்
தாய்ப்பாலின் மகிமை
தமிழ் எங்கள் உயிர்
பாவையரே வாரும்

மேலும் எழுதியவைகள்

தாழ்வுபாடு பாடசாலைக்கீதம்
சாந்திபுரம் பாடசாலைக்கீதம்
வாழ்த்துப்பாக்கள் கவிதைகள்
ஆலயங்களின் பாடப்படும் பாடல்கள் கீர்த்தனைகள் இன்னும் எழுதிக்கொண்டுதான இருக்கிறேன்.

தங்களின் கலைச்சேவையை பாராட்டி தந்ந விருதுகளும் பட்டங்களும்?

கவிதை 2ம் இடம் மன்னார் பிரதேசமட்டம்-2008
சிறுகதை 3ம் இடம் மன்னர் பிரதேச மட்டம்-2007
மன்னார் கலை இலக்கிய விழாவில் கலைஞர் கௌரவிப்பு-2008
கலைச்சுடர் விருது-2006
திருக்கலை வேந்தன்-அருட்பணிமையம்-2007
ஆளுநர் விருது-வடக்குகிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களம்-2007
கலாபூஷணம்- தேசியம்-2010
மன்னார் மாவட்டம் எனது மண்ணும் பல அமைப்புகள் பொற்கிழி தந்து பொன்னாடைபோர்த்தி கௌரவித்துள்ளார்கள்

தாங்கள் வகித்து பதவிகள் பற்றி?

கிராமோதையாசபை  2 முறை தலைவர் 1981-1982
உயர் தமிழ் மன்றத்தின் போஷகரும் அங்கத்தவரும்
சமூகத்தொடர்பாடல் அருட்பணி மையம் அங்கத்தவர்
பங்குகோயிலின் சபைச்செயலாளர்
மன்னார் தமிழ்ச்சங்க உறுப்பினர்
மன்னார் பிரதேச செயலக கலைக்குழு உறுப்பினர்
தாழ்வுபாடு கிராம அபிவிருத்தி செயலாளர்
அகில இலங்கை தமிழ்த்தினப்போட்டிகள் நாடக நாட்டுக்கூத்துப்போட்டிகள் அனைத்திற்கும் நடுவராக பணியாற்றுதல்.
என்வாழ்வின் கலைச்சேவையும் பொதுச்சேவையும் தான் தொடரும் பணியாகவுள்ளது.

மக்களின் மன்னவன் நீயுமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?

இணையத்தின் மூலம் எம்மை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துவது பெரிதும் பாராட்டுக்குரியது. அதுவும் வீடுதேடிவந்து உறவாடி உளம் மகிழ்ந்து பேசி ஊரறிய உலகறிய செய்வது மிகவும் பாரடடுக்குரியது. மூத்த கலைஞர்கள் இளம் கலைஞர்கள் இருவகையாக அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது மிகவும் தேவையான சேவையாகும் என்னைப்பொறுத்தமட்டில் இது எனக்குகொரு வெளிச்சம் என்பேன் எப்படி எனது சிறுவயதில் எனக்குள் இருந்த கலையார்வத்தை வெளிச்சம் போட்டுக்காட்டினாரோ ஜோண்பிள்ளை அதுபோல அன்றைய கலையில் இருந்துபெற்ற அனுபவத்தினையும் இன்று இணையம் மூலம் வெளிச்சம போட்டுக்காட்டும் பணியினை நீயு மன்னார் இணையம் தணியாளாக நின்று செய்து வருகின்றது. இப்ப இருக்கின்ற கலைஞர்களை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சொல்ல இப்படியான முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறவேண்டும் மனம் திறந்து பாராட்டுகிறேன்.

 மன்னார் இணையத்திற்காக
வை-கஜேந்திரன்







விம்பம்இப்பகுதியில் கலைச்சுடர் கலாபூஷண விருது பெற்ற மூத்தகலைஞர் தம்பிப்பிள்ளை பர்ணாந்து பீரீஸ் அவர்களின் அகத்திலிருந்து...................... Reviewed by NEWMANNAR on April 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.