அண்மைய செய்திகள்

recent
-

அன்னையர் தினம்


ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்ரில் எம்மை சுமந்த கணம் தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாளை உலகம் முழுவதும் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும் தமது தாய்மாருடன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் குவித்து தமது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இணையத்தில் அன்னையர் தின வாழ்த்துகளை படிக்கும் போது அவற்றுக்கு சமனாக இந்த நாளை கட்டாயம் கொண்டாடத் தான் வேண்டுமா என்ற ஏளனங்களும், கிண்டல்களும் கலந்த பின்னூட்டங்களும் கருத்துப் பகிர்வுகளையும் படிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நேரும் போதெல்லாம் மனது வேதனைப்படும்.

ஒவ்வொரு நிகழ்வுகளும் வரலாறு ஆகாது..ஆனால் சில விஷேஷமான குறிப்பிட்ட நிகழ்வுகள் சம்பிரதாயங்களாக – ஏதோ ஒரு வரலாற்றின் சுவடுகளாகத் தான் எம்மோடு கூடவே வருகின்றன. அதே போல் அன்னையர் தினத்துக்கென்றும் பல காரணங்களும் வரலாறும் பண்டை காலந்தொட்டு இருக்கத் தான் செய்கின்றது. அந்த வரலாறுகளைப் பற்றித் தெரியாதவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை..!!

பண்டைக் காலங்களில் அன்னையர் தினம் என்பது பெண்கடவுள்களை அம்மாவாக போற்றிக் கொண்டாடப்பட்டிருக்கின்றன. உலகில் தோன்றிய எல்லா மதத்திலும் பெண் கடவுள் இன்றியமையாத ஒரு படைப்பாகியிருந்திருக்கிறது. ஏன் நமது இந்து சமயமே அதற்கு பெரிய ஒரு உதாரணமாக கொள்ளலாமே.. இயற்கையையும், அனோமதேய சக்தியையும் பெண்ணின் வடிவாக போற்றியிருப்பது கண்கூடான விசயங்கள் . நதியிலிருந்து விதி மகள் வரை பெண்னின் வடிவம். பெண்ணைப் பெரும்பாலும் தாயின் வடிவாகவே போற்றினர்.

உலகில் அன்னையர் தின வரலாற்று சுவடுகளை தேடிக் கொண்டு போனால் பண்டைய எகிப்திய காலம் வரை அவை உங்களைக் கூட்டிச் செல்லும். பண்டைய காலங்களில் அன்னைக்கான மேன்மையையும் பெருமையையும் மானுட அன்னையரை விட அமானுஷ்யமாயிருந்த இயற்கை அன்னைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்று சொல்லலாம்.

இந்த வகையில் பண்டைய எகிப்தியர் தான் அநேகமாக உலகில் முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடியவர்கள் என சொல்லலாம். இவர்கள் ஐஸிஸ் என்ற பெண் கடவுளை மேன்மைப்படுத்தும் வகையில் இந்நாளைக் கொண்டாடினர். இந்த பெண் தெய்வமான ஐஸிஸ் (mother of hours) இயற்கை அன்னையாக போற்றப்பட்ட தெய்வமாகும். இந்தப்பெண் தெய்வமானது அடிமைகளுக்கும் , தாழ்த்தப்பட்டோருக்கும் , நோய்வாய்ப்பட்டோருக்கும், சிநேகமானவளாயும், ஏழை எளியோரின் பிராத்தனைகளை செவிமடுப்பவளாயும் நம்பப்பட்ட தெய்வமாகும்.

இந்த பெண் தெய்வத்தினை போற்றும் விழாவே உலகின் முதலாவது அன்னையர் தினமாக கொள்ளலாமாம். இந்த எகிப்து தெய்வமானது பின்னாளின் ரோமானியரின் சமயத்திலும் , கிறிஸ்தவர்களின் பகானிஸிதத்திலும் கூட வணங்கப்படுபவளாக இருந்திருக்கிறதாம்.

இந்த எகிப்திய பெண் தெய்வமான ஐஸிஸுக்கான விழாவை ரோமானியர்களும் கொண்டாடினர். பின்னாளில் ரோமானியர்களின் பிரத்தியேக தெய்வமான ஸீஸஸ் (Zeus) உட்பட பல தெய்வங்களுக்கும் சிரேஷ்ட தாயாக வணங்கப்பட்ட ரெஹா (Rhea) என்ற பெண் தெய்வ த்தை அன்னையர் தினமாக மூன்று நாள் கொண்டாட்டமாக கொண்டாடி வந்தார்களாம். இந்தக் கொண்டாட்டம் வருடத்தின் சம இரவு நாளில் தான் தொடங்குமாம்.

இதே போல் கிரேக்கத்தின் பல பெண் தெய்வங்களுக்கும், ஆசியாவின் பெண் தெய்வங்களுக்கும் இத்தகைய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. நாகரீக முன்னேற்றமும் , மனிதப்பரம்பலின் விரிவும் தெய்வ வழிபாடுகளிலிருந்த இந்த பெண் தெய்வங்களுக்கான கொண்டாட்டங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் உருவெடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

பின்னாளில் பெண் தெய்வங்களை முன்னிறுத்தி கொண்டாடப்பட்ட அன்னையர் தினம் முதன் முதலாக மானுடத் தாய்மாருக்காக பரிமாணமெடுத்தது ஐரோப்பாவில் என்று தான் சொல்ல வேண்டும். ஈஸ்டர் பெருநாளுக்காக 40 நாட்கள் விரதமிருக்கும் கிறிஸ்தவர்கள் அந்த மாதத்தின் 4வது ஞாயிற்றுக் கிழமையில் தாம் ஞானஸ்தானம் பெற்ற தேவாலயம் (mother church) சென்று வழிபாடுகள் நடத்துவார்களாம். அந்த தேவாலயஙளில் தேவமாதாவுக்கு இவர்களின் பரிசுகளாக சமர்ப்பிக்கப்படும் நகைளும் மலர்களும் வேறு பல பரிசுப் பொருளளும் லும் அந்நாட்களில் நிரம்பியிருக்குமாம்.

1600 களில் தான் இந்த உண்மையான அன்னையர் தினத்தை தம்மைப் பெற்றவளுக்காக ஒதுக்கினார்களாம் ஐரோப்பியர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வேலையாட்களுக்கு மே மாதத்தின் 4 வது ஞாயிற்றுக்கிழமையை தமது தாய்மாருடன் சென்று கழிக்க அனுமதி வழங்கப்படுமாம். ம். தாயை சந்திக்கச் செல்லும் வேலையாட்கள் அவளுக்காக மலர்கள், இனிப்பு வகைகள், கேக் வகைகள், மற்றும் தத்தமது வசதிக்கேற்ப பரிசுப் பொருட்களுடன் போய் தத்தமது தாய்மாரை சந்திக்க செல்வது வழக்கமாக இருந்தது. இதை அப்போது மதரிங் சண்டே (mothering sunday) என்று அழைக்கப்பட்டதாம்.

அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஐரோப்பியர்கள் வாழ்வில் பிரிட்டிஷ் நாட்டில் வழக்கபடுத்திக் கொண்ட மதரிங் சண்டே பாரம்பரியம் நாளடைவில் மறைந்து போய் சில நூற்றாண்டு காலத்தில் அது மறைந்தே போய்விட்டது எனலாம். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த ஐரோப்பியரின் வாழ்வு மிகவும் நெருக்கடியும், நீண்ட நேர உழைப்புக்கு பலவந்தமாக உந்தப்பட்டவர்களாயுமிருந்ததாலும் அவர்களால் ஐரோப்பாவில் பின்பற்றிய பாரம்பரியங்களை தொடரமுடியாமல் போனதன் காரணம்.

முதன் முதலாக வட அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டில் ஜூலியா வார்ட் ஹோவ் (Julia Ward Howe) என்ற தாயார் “அன்னையர் தினத்தை” பற்றி பிரகடனம் செய்தார். அமெரிக்காவில் நடந்த சிவில் யுத்தத்தில் இறந்தவர்களின் மறைவும் , யுத்தம் கொடுத்த பேரழிவும் ஜூலியா வார்ட் அவர்களை மிகவும் பாதித்தது. ஒரு தாயின் மகன் இன்னொரு தாயின் மகனை கொல்லும் அடிப்படையிலான யுத்தங்களை எதிர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை முன்னிறுத்தி யுத்த களத்திலிருக்கும் வீரர்களுக்காக குரல் கொடுக்க அனைத்துலக தாய்மாரையும் ஒன்றிணையச் சொல்லி அழைப்பு விடுத்தார். உலகின் அமைதியையும் தாய்மையும் பேணும் நாளாக அன்னையர் தினம் உலகளவில் கொண்டாடப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் விரும்பினார்.

அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ம் திகதியைத் தான் அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று விரும்பினார். ஆனால் ஜூன் 2ம் திகதி யை வட அமெரிக்க மகளிர் சங்கங்கள் புதிய அன்னையர் தினமாக 1873ம் ஆண்டு பிரகடனம் செய்தன. அன்னையர் தின கொண்டாட்டங்களுக்காக ஜூலியா தான் நிதியுதவி செய்தார். அவர் இறந்த பின்னும் போஸ்டன் நகரில் 10 வருடங்கள் கொண்டாடினார்கள். அதன் பின் அந்த அன்னையர் தினக் கொண்டாட்டமும் இடை நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த அன்னை எடுத்த முயற்சி குறைந்த ஆயுளுடன் முடிந்துவிட்டாலும் அவர் அன்றைக்கு வித்திட்டது தான் இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினத்துக்கு வழிகாட்டலாக அமைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அன்னையர் தினத்துக்கான அவருடைய நோக்கம் போற்றப்பட வேண்டியது. சமூக அக்கறையின் அடையாளமாக அன்னையர் தினம் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பியது போற்றப்பட வேண்டியது.

பின்னாளில் அனா ரிவீஸ் ஜார்விஸ் ( Anna Reeves Jarvis) என்ற பெண்மணி தான் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜினியா மகளிர் அமைப்பின் மூலம் ஜூலியா வார்ட் ஹோவின் அன்னையர் தின த்தை தத்தெடுத்து நடாத்த விரும்பினார். சிவில் யுத்தத்தால் பிரிந்த சொந்தங்களை ஒன்று சேர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை உபயோகிக்க அவர் விளைந்தார்.

அனா தன் மகளுடன் இரவு நேரப் பிராத்தனைகளின் போதெல்லாம் அன்னையருக்கென்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒரு வேண்டுதலாகவே வைப்பாராம். அதுவே அவர் மகள் அன்னா மேரி ஜார்விஸ் (Anna Mary. Jarvis ) மனதில் ஆழப்பதிந்து விட்டது.

அன்னா மேரி தன் தாயாரின் மறைவுக்கு பின் உத்தியோகபூர்வமாக அன்னையர் தினத்தை உலகின் அமைதிக்காகவும் அன்னையரை பெருமைப்படுத்தும் முகமாகவும் நாட்டின் தேசிய நாட்களில் ஒன்றாக தேர்வு செய்ய வேண்டுமென்ற பிரேரணையை நிறைவேற்ற விண்ணப்பிக்கும் வேலைகளில் இறங்கினார்.. அன்னா மேரி அவர்கள் தனது தாயார் 20 வருடங்களுக்கும் மேலாக ஞாயிற்றுக் கிழமைகளின் வேத பாடசாலை ஆசிரியையாக கடமையாற்றிய வெஸ்ட் வேர்ஜினியாவிலிருக்கும் ஆண்ட்ரூஸ் மெதடிஸ் சர்ச் நடத்துனரிடம் தனது விண்ணப்பத்தை முதலில் கையளித்தார். அவரது கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ள உத்தியோகபூர்வமாக மே மாதம் 10ம் திகதி வெஸ்ட் வேர்ஜினியா ஆண்ட்ரூஸ் மெதடிஸ் தேவாலயத்திலும் பிலடெல்பியா பென்ஸில்வேனியாவில் ஒரு தேவாலயத்திலும் அன்னையர் தினத்தைக் கொண்டாடினார்கள். அன்று அந்த விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு தாய்மாருக்கும் தனது தாயாருக்கு பிடித்த வெள்ளை நிற கார்னெஷன் மலரில் இவ்விரண்டு மலர்களை கொடுத்தார். அன்றிலிருந்து தொடங்கியது தான் ஒவ்வொரு அன்னையர் தினத்துக்கும் கார்னேஷன் மலர்களை அம்மாக்களுக்கு கொடுக்கும் சம்பிரதாயம். அதன் பின் உயிருடன் இருக்கும் அன்னையருக்கு பிங் அல்லது சிவப்பு நிற கார்னேஷனையும், மறைந்து போன தாய்மாரின் சமாதிகளில் வெள்ளை நிறக் கார்னேஷன் மலரையும் சமர்ப்பிக்கும் சம்பிரதாமாகியது.

1908 ஆம் ஆண்டில் நெபரஸ்கா நகரின் அமெரிக்க செனட்ரான எல்மர் பர்கெட் (Elmer Burkett) என்பவர் அன்னையர் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கும்படி வை.எம்.சி.ஏ வைத்த கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்தார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் 1909 ஆம் ஆண்டு 46 மாநிலங்களிலும் கனடா, மெக்ஸிக்கோ நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

அன்னா மேரி ஜார்விஸ் தனது வேலையை இராஜினாம செய்து விட்டு முழுமூச்சுடன் அன்னையர் தினத்தை உத்தியோக பூர்வமாக தேசிய நாளாக அறிவிக்கும் படி அரசை வற்புறுத்துவதை தனது கடமையாக்கிக் கொண்டு பல தொண்டு நிறுவனங்களையும் , வியாபார தலைகளையும், மகளிர் அமைப்புகளையும், தேவாலயங்களையும் தனது முயற்சிக்கு ஆதரவு கேட்டு அலைந்தார்.

ஈற்றில் உலக தேவபாடசாலை அமைப்பினை தனது கோரிக்கைக்கு இணங்க வைத்தார்…அதன் மூலம் 1912ம் ஆண்டில் அமெரிக்கா காங்கிரஸ் வெஸ்ட் வெர்ஜினியா மாநிலம் உத்தியோக பூர்வமான அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. 1912ம் ஆண்டு அமெரிககவின் 28வது ஜனாதிபதியான வூட்ரோ வில்ஸான் (Woodrow Wilson) தேசிய அளவில் அன்னையர் தினத்தை ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்ற பிரேரணையில் கைச் சாத்திட்டார்..

அதன் பின் அன்னையர் தினம் நாட்டின் மிகப் பிரபலமான தினமாகியது. படிப்படியாக வியாபாரரீதியில் அன்னையர் தினம் பெருமளவில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கும் ஒரு கமர்ஷியல் நாளாக மாறியது. இந்த மாற்றம் அன்னையர் தினத்தின் உண்மையான நோக்கை பங்கமாக்குவதாக அன்னா மேரி கருதினார். அதை அவர் எதிர்க்கவும் செய்தார். சமூக அக்கறையோடு உலகின் அமைதியைதையும், தாய்மையையும் மேன்மைப்படுத்தும் தினமாக அமைய வேண்டிய தினம் வெறுமனே பரிசுப் பொருட்களை வாங்கி கையளிப்பதோடு முடிந்துவிடுவதை அவரால் பொறுக்க முடியவில்லை. அதனால் 1930m aandin அன்னையர் தினத்தன்று கார்னேஷன் மலர்கள் விற்கும் இடத்தில் தனது ஆட்சேபணையை எதிர்ப்பாக காட்ட முற்பட்ட போது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் இன்று ஒவ்வொருவரும் தமது அன்னையரை போற்றும் தினமாக அன்னையர் தினத்தை போராடிப் பெற்றுத் தந்த அன்னா மேரி ஜார்வஸ் தன்னை நினைக்க வென்று ஒரு வாரிசேயில்லாமல் , பார்வையிழந்தவராக , பரம ஏழையாக 1948ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். அவருக்கே தெரியாமல் இருந்த ஒரு விசயம் அவருடைய கடைசிக் காலங்களில் மலர் வியாபார நிலையம் ஒன்று தான் அவருக்கான செலவுகளை கவனித்து வந்தது என்பதை..

அவர் மறைந்தாலும் அவரால் முன்னெடுக்கப்பட்ட அன்னையர் தினம் இன்று 40க்கும் மேலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

அன்னையர் தினம் Reviewed by NEWMANNAR on May 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.