அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவல்

 போதைப்பொருட்களைக் கடத்தி வரும் பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் ஏனைய படகுகளைக் கண்காணிக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்காணிப்பு அமைப்பிற்குள்  வெளியாட்கள் பிரவேசித்துள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 


57 வெவ்வேறு ஐ.பி. இலக்கங்கள் ஊடாக இந்த முறைமைக்குள் பிரவேசிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்றுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த 'VMS' கண்காணிப்பு முறைமையைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து பெருமளவான போதைப்பொருட்களைக் கைப்பற்றியிருந்தனர். 

இந்நிலையில், இந்தத் தகவல்கள் விசாரணை அதிகாரிகளுக்கு மேலதிகமாக கடத்தல்காரர்களுக்கும் கசிந்துள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் ஆலோசனையின் பேரில், அமைப்பிற்குள் ஊடுருவிய நபர்களைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

 

மேலும், வெளியார் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இரகசிய இலக்கங்கள்  மாற்றப்பட்டு, தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பணிப்பாளருக்கு மட்டுமே அணுகல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியமை மற்றும் கடமைகளைச் சரிவர நிறைவேற்றாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் 5 உப பொலிஸ் பரிசோதகர்கள்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இப்பிரிவில் கடமையாற்றும் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விசாரணையை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. 

இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களைக் கொண்டிருப்போர் உடனடியாகப் பிரிவிலிருந்து நீக்கப்படுவதுடன், அவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.





போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவல் Reviewed by Vijithan on December 20, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.