பாலியல் வன்புணர்வுகள் நிறுத்தப்பட வேண்டுமானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்
பாலியல் வல்லுறவுகள் நிறுத்தப்பட வேண்டுமானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என கொழும்பிலுள்ள விழுது ஆற்றல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அரசியல் ஆய்வாளருமான சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய இளைஞர் குழுக்கள் அதிலிருந்து வெளியேறி, சமூக விரோதக் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இராணுவ உயரதிகாரிகளின் நேரடி உறவுகளுடன் அல்லது உயரதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமாக இருந்தால், அந்த நெருக்கமான உறவை சாதகமாக வைத்துக் கொண்டு இவ்வாறான பாலியல் வல்லுறவுகளில் சில இளைஞர் குழுக்கள் ஈடுபடுகின்றன.
இது தொடர்பாக பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு நாங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
போரின்போதும், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலிலும் இடம்பெற்ற தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் கொலைகள் தொடர்பான விபரங்களும், அது தொடர்பான வழக்கு விசாரணைகள் கிடப்பில் இருப்பதையிட்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தோம்.
பெண்கள் அமைப்பு என்ற முறையில் எங்களால் இவ்வாறான வேலைத்திட்டங்களையே செய்ய முடியும். ஆனாலும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் கொலைகள் போன்றவற்றை தடுத்து நிறுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசியல்வாதிகள்தான் செய்ய வேண்டும்.
எவ்வாறாயினும் இராணுவப் பிரசன்னங்கள் தமிழ் மக்களிடையே இருக்கக்கூடிய உள்ளகப் பிரச்சினைகளை தூண்டி விடுவதற்கும், சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கும் வழிவகுப்பதாக கூறினார்.
பாலியல் வன்புணர்வுகள் நிறுத்தப்பட வேண்டுமானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
May 17, 2015
Rating:

No comments:
Post a Comment