மன்னார் ஆயர் விரைவில் நலம்பெற வேண்டி விசேட பிரார்த்தனை
சுகவீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சுகம் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்து நேற்றைய ஞாயிறு திருப்பலியில் விசேட மக்கள் பிரார்த்தனையில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கம்பன் கழக விருது பெறுவதற்காக கொழும்பு வந்திருந்தபோது திடீர் சுகவீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இந்த செய்தி கேள்வியுற்றதும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள இறைமக்கள் ஆயருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் தனது வாஸ்ததலம் திரும்பி தொடர்ந்து தனது பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சிறைப்பட்டோர் விடுதலைப் பெறவும் அடக்கப்பட்டோர் ஒடுக்கப்பட்டோருக்காக ஆண்டகையின் குரல் ஒலிக்க வேண்டும் எனவும் இறைவன் அவருக்கு நல்ல சுகம் கொடுக்க வேண்டும் என விசேடமாக ஞாயிறு திருப்பலி வேளையில் இறைமக்கள் வேண்டிக் கொண்டனர்.
இதேவேளை மன்னார் ஆயர் இராயப்ப ஜோசப் ஆண்டகை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களை மேற்கோள்காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்த போதே அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் கொழும்பிலுள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆண்டகைக்கு வேண்டிய மருத்துவ சிகிக்சைகளை வழங்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் ஆயர் விரைவில் நலம்பெற வேண்டி விசேட பிரார்த்தனை
Reviewed by NEWMANNAR
on
May 04, 2015
Rating:

No comments:
Post a Comment