
புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது. படு அசிங்கமானது. இந்தப் படுகொலை மிலேச்சத் தனமானது. சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலானது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா. சம்பந்தன்.
எனவே கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளைத் தப்பவிடாது அவர்களுக்கு அதிஉச்சத் தண்ட னையை நீதித்துறை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தன் எம். பி. வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும், காமுகர்களின் அந்தக் கூட்டு வன்புணர்வுக் கோரக் கொலையைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இந்த உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். எனினும், எமது மக்கள் நீதிக்கான தமது போராட்டங்களின் போது வன்முறைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கடந்த புதன்கிழமை யாழ். நகரில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினரை நிலைநிறுத்தி வைக்க அரசு திட்டமிட்டது.
இதனையறிந்த நான் உடனடியாக பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து அரசின் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டேன். அதன் பின்னர் விசேட அதிரடிப்படையினரைக் களமிறக்கும் திட்டத்தை அரசு கைவிட்டது. வித்தியா படுகொலை தொடர்பில் போதிய தடயங்கள் பொலிஸாரின் வசம் உள்ளன. எனவே, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அதிஉச்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும். வித்தியாவின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment