வித்யா கொலைச்சம்பவ சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு உத்தரவு
யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யா வன்புணர்விற்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் 09 சந்தேகநபர்களையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து, விசாரணைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கொலைசெய்யப்பட்ட மாணவி சார்பில் ஆஜரான மனித உரிமைகள் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வீ தவராசா தெரிவித்தார்.
அதற்கமைய, ஜீலை 13 ஆம் திகதிவரை ஒன்பது சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கொலை சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றிருந்தார் என்பது தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணியால் கடந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும், இறுதி அறிக்கை அடுத்த வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிப்பதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடயப் பொருட்கள் அனைத்தையும் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தி, மரபணு சோதனைகளை முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகளின் நிமித்தம் சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விசாரணையில் இன்று சாட்சியமளிக்க சென்ற வித்தியாவின் தாயும் சகோதரனும் திடீர் சுகவீனமுற்றுள்ளனர்
சுகவீனமுற்ற நிலையில் சகோதரன் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
புங்குடுதீவில் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியா, கடந்த மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்புணர்விற்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
வித்யா கொலைச்சம்பவ சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
June 15, 2015
Rating:

No comments:
Post a Comment