
தமிழர்கள் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டால் தான், இலங்கையில் சகஜநிலை திரும்பும் என்பதை அரசு உணர வேண்டும். இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி ஜனாதிபதி பதவியை மைத்திரிபால சிறிசேனா கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணம், நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் தான்.
இலங்கையில் சர்வாதிகார குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சவுக்கு மாற்றாக, ஜனநாயக முறையிலான அரசு அமைய வேண்டும், பொறுப்பான அரசாக அது இருக்க வேண்டும் எனும் மக்களின் எண்ணம் மட்டும் சிறிசேனாவை ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடவில்லை.
அந்நாட்டு மக்களை வெறுப்பில் ஆழ்த்தியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் சிறிசேனாவின் வெற்றிக்குக் காரணம். அவற்றில் மிக முக்கியமானது இராணுவமயமாக்கல்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கையில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணங்களில், இராணுவத்தின் அதிகாரம் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எனும் காரணத்தைக் காட்டித்தான் அதிகரிக்கப்பட்டது,
ஆனால், இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில் தமிழர்கள் அதிக அளவில் பங்கேற்ற பின்னரும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டது ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
ராஜபக்ச ஆட்சியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளில் வணிக நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்டங்கள், கல்வி, சுற்றுலா, காவல்துறையின் பணிகள் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட இராணுவத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது.
ஆபத்தான இந்தப் போக்கு சிறிசேன ஆட்சியில் உடனடியாகக் கைவிடப்படும் என்பது சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
டிசம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரை அமெரிக்காவின் ‘ஓக்லாண்ட்’ நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள், இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இணக்கமான நிலைப்பாட்டுக்கு வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கின்றன.
உள்நாட்டுப் போரின் போது இடம்பெயர நேர்ந்த தமிழர்களின் நிலப்பகுதிகளை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது தமிழர்களின் கடும் அதிருப்திக்குக் காரணமாக இருக்கிறது.
தமிழர்கள் வாழும் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் விவகாரம் நீண்டகாலம் இழுபறியாக இருப்பது தெரிந்த விஷயம்தான்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை போன்ற விஷயங்களில் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
வட மாகாணத்தைப் பற்றி சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின்படி, இராணுவத்தின் வசம் இருந்த தமிழர்களின் நிலப்பகுதிகளை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் மறுவாழ்வுக்கான புதிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. ஆனால், இவை மட்டும் போதாது.
இராணுவ மயமாக்கல் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை அரசு உணர வேண்டும். பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்கள் இதற்கு உதாரணம்.
சர்வதேச அளவிலான அழுத்தம் மற்றும் தேர்தல் முடிவுகள், தமிழர்கள் விஷயத்தில் சிறிதளவேனும் முன்னேற்றம் ஏற்படக் காரணமாக அமைந்திருக்கின்றன.
ஆனால், தமிழர்கள் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டால்தான், இலங்கையில் சகஜநிலை திரும்பும் என்பதை அரசு உணர வேண்டும்.
-
No comments:
Post a Comment