
மன்னார் ஆயரின் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவின் காரணமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்பொழுது பக்கவாதத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள அவருக்காக இன்று வெள்ளிக்கிழமையை விசேட பிரார்த்தனை தினமாக அனுசரிக்குமாறு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி. ஏ.விக்ரர் சோசை அடிகளார் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகையின் உடல்நிலை தொடர்பாக பல தரப்புக்கள் மத்தியில் இருந்தும் அக்கறையும் கரிசனையும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி எச். கே. டீ. எஸ். குலரட்னவின் தகவலை அடிப்படையாகக் கொண்டு ஆயரின் தற்போதைய உடல்நிலை தொடர்பான தகவல்களை வழங்குகின்றோம்.
ஆயருக்கு மே மாதம் 2ம் திகதி மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
துரதிஷ்டவசமாக மே மாதம் 17ம் திகதி பக்கவாதத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய வலது கை மற்றும் வலது கால் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தற்போது அளிக்கப்பட்டு வருகின்ற இயன் மருத்துவம் மூலமாக அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்மா போன்றவைகளும் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆயர் தொடர்ந்தும் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளார்.
ஆயரின் உடல்நிலையில் அக்கறையுள்ள அனைவருடைய பிரார்த்தனைக்காகவும் நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையில், அவருடைய உடல்நலம் தேற தொடர்ந்தும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இன்று வெள்ளிக்கிழமையை ஆயருக்கான விசேட பிரார்த்தனை தினமாக அனுசரிக்குமாறு மன்னார் மறைமாவட்ட இறைமக்களைக் கேட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment