அண்மைய செய்திகள்

recent
-

பொருத்தமானவர்களை தெரிவு செய்யவும்: சம்பந்தனிடம் அன்ரனி ஜெகநாதன் கோரிக்கை


எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொருத்தமான வேட்பாளர்களை நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படியும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதி அவைத் தலைவருமான அன்ரனி ஜெகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. முழு இலங்கையும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர் நியமனங்களில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமையும் கல்வித் தகைமை அற்ற பொருத்தமற்ற வேட்பாளர் நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த கல்வித் தகைமையுடைய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படியும் தெரிவு செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் தங்களுக்குரியது என்பதனால் பின்வரும் விடயங்களை மிகத் தயவுடன் முன் வைக்கிறேன்.

01. வேட்பாளர் நியமனத்திற்காக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு கிடைக்கும் விண்ணப்பங்களில் இருந்து தகைமையான வேட்பாளர்களை, தகைமையான வேட்பாளர் நியமனக் குழு மூலம் நியமிக்கவேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளர் நியமனக் குழுவில் வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டதுபோன்ற விந்தையான செயல்கள் வேண்டாம்.

02. தொடர்ச்சியாக மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு நான்காவது முறையாகவும் வேட்பாளர் நியமனம் வழங்குவது நீதியற்றது. கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்களிக்கலாம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது குடும்ப ஆட்சி என்று அதை ஏற்க மறுத்தவர்கள் நாங்கள். அதுபோல 19 ஆவது அரசியல் திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதற்கு மகிழ்ச்சியுடன் ஆதரவளித்த நாங்கள் எமது கட்சியில் நான்காவது முறை வேட்பாளர் நியமனம் வழங்குவது ஜனநாயக கொலையாகும்.

03. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அவர்களுக்குரிய காலம் முடியும் வரை வேறு எந்த தேர்தல்களிலும் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாத தேவை இருப்பின் அவர்கள் தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்த பின்பே வேட்பாளர் நியமனம் வழங்க வேண்டும்.

04. தமிழ் நாடு தவிர்ந்த ஏனைய வெளிநாடுகளில் மனைவி, பிள்ளைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வசிப்பவர்களுக்கு நிச்சயமாக வேட்பாளர் நியமனம் வழங்கக்கூடாது.

05. வெளிநாட்டுப் பிரஜா உரிமை உள்ளவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக்கூடாது.

06. ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்போது பரந்து பட்ட முறையிலும் எல்லாப் பகுதிகயையும் பிரதிநிதித்துவம் கிடைக்கத் தக்கவாறும் வேட்பாளர் தெரிவு அமைய வேண்டும்.

உதாரணமாக கடந்த மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட எட்டு வேட்பாளர்களில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஐந்து வேட்பாளர்களும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து இரண்டு வேட்பாளர்களும், ஒட்டுசுட்டான் மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து ஒருவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் குறைந்தளவு ஒருவரையாவது தெரிவு செய்யும் வாய்ப்பு இருந்தும் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

07. வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் பெண் வேட்பாளர் ஒருவராவது தெரிவு செய்யப்பட்டு பெண்களுக்கான பிரதிநித்துவம் ஏற்படுத்தப்படவேண்டும்.

08.வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வொரு தேர்தல்ல மாவட்டங்களிலும் இளைஞர் ஒருவருக்காவது வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டு இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

09. ஒரு தேர்தல் மாவட்டத்திற்கு வேறு தேர்தல் மாவட்டங்களில் இருந்து வேட்பாளர்களை நியமிக்கக்கூடாது. அம்மாவட்டத்தில் வாக்காளராக உள்ள நிரந்தர வாசிகளையே வேட்பாளராக நியமிக்க வேண்டும்.

10. முன்பு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வேட்பாளர்களாக்கும் தவறான கலாசாரம் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வேட்பாளர் நியமனத்தில் அதிக சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமானவர்களை தெரிவு செய்யவும்: சம்பந்தனிடம் அன்ரனி ஜெகநாதன் கோரிக்கை Reviewed by Author on June 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.