அண்மைய செய்திகள்

recent
-

ஒரே நேரத்தில் தமிழரசுக் கட்சி 5 மாவட்டங்களில் வேட்புமனு


வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.




யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்திலும், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பொன்.செல்வராஜா தலைமையில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலும், அம்பாறை தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனு ரெலோவின் பொதுச் செயலாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் அம்பாறை மாவட்டச் செயலகத்திலும் பிற்பகல் 2.30 மணிக்கு கையளிக்கப்படவுள்ளன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், வன்னித் தேர்தல் மாவட்டம், திருகோணமலை தேர்தல் மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் நேற்று முடிவுக்கு வந்தன.



அதனடிப்படையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தலைமையில் 10 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.



அவர்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் ஆகியோருக்கும் புதிதாக இராஜேந்திரா (கோப்பாய் தொகுதி), அருந்தவபாலன் (சாவகச்சேரி தொகுதி) ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர் ந.அனந்தராஜ் ஆகியோர் களமிறக்கப்படவுள்ளனர்.



புளொட் சார்பில் அதன் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான த.சித்தார்த்தனும், ரெலோ சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தாவும் போட்டியிடவுள்ளனர்.



வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் 9 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.



அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில், சார்ள்ஸ் நிர்மலநாதன் (மன்னார் மாவட்டம்), றோய் ஜெயக்குமார் (வவுனியா மாவட்டம்), திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா (முல்லைத்தீவு) ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.



புளொட் சார்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசனும், ரெலோ சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோருடன் மலையக வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் களமிறக்கப்படுகின்றார்.



அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவமோகன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.



மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பொன்.செல்வராஜா தலைமையில் 8 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.



அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோருக்கும் புதிதாக மட்டக்களப்பு மேற்கு முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன், ஓய்வுபெற்ற அதிபர் சௌந்தரராஜன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



ரெலோ சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், புளொட் சார்பில் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் களமிறக்கப்படவுள்ளனர்.



அதேவேளை, திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினமான இரா.சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர்களும், அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் ரெலோவின் பொதுச் செயலாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் 10 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.



இதற்கமைய இன்று பிற்பகல் 2 மணிக்கு வேட்புமனுக்களை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=660764139310395287#sthash.3u0IWv41.dpuf
ஒரே நேரத்தில் தமிழரசுக் கட்சி 5 மாவட்டங்களில் வேட்புமனு Reviewed by NEWMANNAR on July 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.