அண்மைய செய்திகள்

recent
-

பாரத் பல்கலைக்கழகத்தில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் 21 பேருக்கு அருட்சுனைஞர் பட்டையப் படிப்பு


உலகில் தமிழ் மொழி நிலைக்க வேண்டுமெனில் தமிழ் மொழிக் கல்வி வளர்க்கப் படவேண்டும். புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் வீடுகளில் எல்லாம் பேச்சு மொழி தமிழாக மாற வேண்டும்.

வழிபாட்டு மொழியாக சமசுக்கிரதத்திற்குப் பதிலாகத் தமிழ் மாற வேண்டும். என்னும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் முனைப்பான வேலைத்திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்கக் கிளைத் தலைவர் திரு மிக்கிச்செட்டி அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி,

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் 21 பேருக்கு அருட்சுனைஞர் பட்டயப் படிப்பை பாரத் பல்கலைக் கழகத்தின் உலகத் தமிழாயம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் உதவியுடன் நடத்த முடிவு செய்து,

இன்று காலை 10.00 மணிக்கு பாரத் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் தனது தொடக்க உரையில்,

தமிழன் கதிரவனைத்தான் இறைவனாக வணங்கினான் என்றும் கதிரவன் காலையிலும் மாலையிலும் சிவப்பு நிறத்தில் இருப்பதால் கதிரவனை சிவம் என்று அழைத்து வழிபடத் தொடங்கினான் என்றும் கூறினார்.

அதனால்தான் கதிரே ஈசன் எனப் பொருள்படும் கதிரேசன் என்னும் பெயரை மக்கள் வைத்துக் கோள்கின்றார்கள் என்றும் கூறினார்.

அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2008 – ஆம் ஆண்டு அவரால் தொடங்கப்பட்டு, பிறகு SRM பல்கலைக்கழகத்தில் 2011 – ஆம் தொடங்கப்பட்டது என்றும் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள் அங்குள்ள 45- க்கும் மேற்பட்ட சைவக்கோயில்களில் தமிழிலேயே வழிபாடு செய்ய விரும்புகின்றனர்.

ஆனால் இந்தியாவிலிருந்து செல்லும் அர்ச்சகர்கள் தமிழில் வழிபாடு செய்யாமல் அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்தச் சிக்கலிலிருந்து விடுபட தென்னாபிரிக்கத் தமிழர்களுக்கு அருட்சுனைஞர் பயிற்சி கொடுத்து அவர்களைக்கொண்டு தென்னாப்பிரிக்க சைவக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்று விரும்பிய திரு மிக்கிச்செட்டி அவர்கள், துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களை அணுகி தென்னாபிரிக்கத் தமிழர்களுக்கு அருட்சுனைஞர் பட்டயப்படிப்பினை பாரத் பல்கலைக்கழகத்தின் வாயிலாக நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.

துணைவேந்தர் திரு.மிக்கிச்செட்டி அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மிக்கிச்செட்டி அவர்களால் தேர்வு செய்யப்பட்ட 21 பேருக்கான அருட்சுனைஞர் பட்டயப்படிப்பை பாரத் பல்கலைக்கழகத்தின் சான்றிதழுடன் வழங்க இசைவு தந்ததை அடுத்து,

அப்பாடதிட்டம் இன்று காலை 10.00 மணிக்கு பாரத் பல்கலைக் கழகத்தின் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தப் பட்டயப் படிப்பை தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு சக்திவேல் முருகனார் ஜூலை மாதம் 2 – ஆம் நாளில் இருந்து ஆகஸ்டு மாதம் 2 – ஆம் நாள் வரை நடத்துகின்றார்கள்.

விழாவில் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் செயலர் திரு சீனிவாசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

திரு மிக்கிச்செட்டி அவர்கள் அறிமுக உரை ஆற்றினார்கள். அவர்கள் தனது உரையில் துணைவேந்தர் .பொன்னவைக்கோ அவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கு ஆற்றிவரும் தமிழ்ப்பணி பற்றி நன்றி பெருக்கோடு கூறினார்கள்.

திரு சக்திவேல் முருகனார் அவர்கள் சிற்றப்புரை வழங்கினார்கள். விழாவில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்கக் கிளையின் செயலர் மருத்துவர், பாலாஜி மருத்துவக் கல்லூரியின் துணைமுதல்வர் மருத்துவர் சாய்குமார், பெங்களூரிலிருந்து வருகை தந்திருந்த உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்கள் திரு.சுந்தரவேல், திரு.விஜயன், திரு.கோபிநாதன் ஆகியோர் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரத் பல்கலைக்கழகத்தில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் 21 பேருக்கு அருட்சுனைஞர் பட்டையப் படிப்பு Reviewed by NEWMANNAR on July 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.