மன்னார் தாராபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலையை திறக்க விடாமல் தடுத்ததன் காரணம் என்ன??? பா.சத்தியலிங்கம் கேள்வி.
மன்னார் தாராபுரம் கிராமத்தில் வட மாகாண சபையினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை நேற்று (3) வெள்ளிக்கிழமை மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கச் சென்ற போது குறித்த நிலையத்தை திறப்பதற்கு அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தடையாக செயற்பட்டமை அபிவிருத்திக்கு தடையான செயற்பாடாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார்
நேற்று (3) வெள்ளிக்கிழமை மதியம் மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
வட மாகாண சபையினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்கள் நேற்று (3) வெள்ளிக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பண்டார வெளி, மற்றும் உயிலங்குளம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையங்கள் மற்றும் எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட தாய்,சேய் கிராமிய சிகிச்சை நிலையம் ஆகியவை வைப ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இறுதியாக மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தையும் திறப்பதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகிய எனது தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் சென்றிருந்தோம்.
ஆனால் அங்கு எமக்கு அக்கிராம மக்களினால் குறித்த நிலையத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தாராபுரம் அரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைப்பதற்கு அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகளினால் தடைகள் ஏற்படுத்தபட்டிருந்தது.
குறித்த வைத்தியசாலை கடந்த 2013 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முற்பகுதியில் கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக தொடர்ச்சியாக மக்கள் சேவைக்கு குறித்த கட்டிடம் வழங்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருந்தது.
இக்கிராமத்தில் சமூகங்களிடையே பிரசினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக திறப்பு விழாவை பிற்போட்டிருந்தாலும் கூட கடந்த மாதம் 25 ஆம் திகதி (25-06-2015) வன்னி மாவட்ட அமைச்சர் றிசாட் பதியூதீனையும், சுகாதார இராஜங்க அமைச்சராக இருந்த ஹசன் அலியையும் பிரதம விருந்தினர்களாக அழைத்து குறித்த கட்டிடத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தோம்.
ஆனால் தவிர்க முடியாத சில காரணங்களினால் குறித்த திறப்பு விழாவை நடத்த முடியவில்லை.
இரண்டு அரசியல் வாதிகளும் குறித்த வைத்தியசாலையை இணைந்து திறப்பதற்கு ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் குறித்த நிகழ்வை நாங்கள் பிற்போட வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டோம்.
இதற்கு பின்னர் வைத்தியசாலைத் திறப்பு விழா தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியூதினின் சகோதரரும் வட மாகாண சபை உறுப்பினருமாகிய றிப்கான் பதீயூதினிடம் பேசி அதன் அடிப்படையில் இணக்கப்பாட்டிற்கு வந்து மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சராகிய நானும் இணைந்து தாராபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார வைத்தியசாலையைத் திறப்பதற்கு தீர்மானித்து அதனை திறந்து வைக்க இருந்தோம்.
எனினும் நாம் தாராபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த குறித்த வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு அக்கிராம பெண்கள் ஒன்றினைந்து அமைச்சர் றிசாட் பதியூதீன் இல்லாமல் அந்த வைத்தியசாலையை திறக்க முடியாது என தெரிவித்து அதனை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக போருக்குப் பின்னரான சந்தர்ப்பத்தில் மீள் குடியமர்கின்ற மக்கள் தங்களுக்கு வைத்தியசாலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் இக் காலத்தில் இங்கு வைத்தியசாலையை திறக்க வேண்டாம் என மூடி வைத்துக் கொண்டு பெரிய வளத்தை திறக்க முடியாமல் தடுத்து வைப்பது என்பது வேடிக்கையாக இருக்கின்றது.
இதன் அர்த்தம் என்ன என்று சொன்னால் இம் மக்களுக்கு குறித்த வைத்தியசாலை தேவையில்லை என்பதேயாகும்.
ஏன் என்றால்; சுமார் இரண்டு கிலோ மீற்றருக்குள் வேறு வைத்தியசாலைகள் இருக்கின்றன.
ஆகவே உண்மையில் இந்த வைத்தியசாலை வேறு இடத்திற்கு போக வேண்டிய நிலையில் அரசியல் வாதிகளின நடவடிக்கையால் தேவையில்லாத இடத்திற்கு இவ் வைத்தியசாலை வழங்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.
எமது வட மாகாணத்தில் அனைவருக்கும் தொடர்ந்து சுகாதார சேவையை வழங்கும் கடமை அமைச்சர் என்ற வகையில் எனக்கு இருக்கிறது.
ஆனால் அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழி நடத்துவதன் காரணமாக மக்களுக்கு வழங்க வேண்டிய சேவையினை தடுத்து நிறுத்துவது வேதனைக்கூறிய விடயமாகும்.
எனவே இவ்வாறான அரசியல்வாதிகள் எமது சமுதாயத்திற்குத் தேவையில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் தாராபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலையை திறக்க விடாமல் தடுத்ததன் காரணம் என்ன??? பா.சத்தியலிங்கம் கேள்வி.
Reviewed by NEWMANNAR
on
July 04, 2015
Rating:
No comments:
Post a Comment