தேர்தலின் போது அரச வளங்களை பயன்படுத்த வேண்டாம்: பெப்ரல்
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது அரச சொத்துக்களையும் வாகனங்களையும் பயன்படுத்துவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
19ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேர்தல்கள் ஆணையாளருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு இக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை மீளப் பெற வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஊழல் மிகு வேட்பாளர்கள் போட்டியிட்டால் அவர்களை புறக்கணிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை காலப்பகுதிக்குள் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலின் போது அரச வளங்களை பயன்படுத்த வேண்டாம்: பெப்ரல்
Reviewed by NEWMANNAR
on
July 03, 2015
Rating:

No comments:
Post a Comment