தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு குறித்து இறுதி நேரத்தில் குழப்பம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அலுவலகத்தில் வேட்பாளர் தெரிவு குறித்து குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலகத்தை சிலர் முற்றுகையிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவுகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அலுவலகத்தில் சித்தாண்டியைச் சேர்ந்த சாமித்தம்பி அவர்கள் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கூடியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சித்தாண்டியை சேர்ந்த பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சாமித்தம்பி அவர்களை தமிழரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டு அது குறித்த முடிவுகளை மாகாணசபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்கள் அறிவித்திருந்த நிலையில், நேற்று பிற்பகல் அவரை திடீரென நீக்கிய தமிழரசு கட்சியின் உயர்பீடம் அதற்குப் பதிலாக செளந்தரராஜ அவர்களை நியமித்திருந்தனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தாண்டி மக்கள் பலர் இன்று மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் வேட்புமனு விண்ணப்ப படிவத்தில் சௌந்தரராஜா கையொப்பமிட்டுள்ளதால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் நேற்றைய தினம் வேட்பு மனு விண்ணப்பத்தில் கையொப்பமிட்டால் பரவாயில்லை வேட்பு மனு தாக்கல் செய்யும் முன் கட்சியினர் நினைத்தால் எந்த மாற்றத்தையும் செய்யலாமென தனது கட்சி தொடர்பாக கூறியுள்ளமை கூட்டமைப்புக்கும் பொருந்துமென கூட்டமைப்பை சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் வேட்பாளர் தெரிவு குறித்து இறுதி நேர முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தலைமை வேட்பாளர் பொன். செல்வராசா அவர்களுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களுக்கமே உண்டு என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று பிற்பகல் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்படுமா? என்ற பல்வேறு பட்ட குழப்பங்கள் தற்போது ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு குறித்து இறுதி நேரத்தில் குழப்பம்!
Reviewed by NEWMANNAR
on
July 10, 2015
Rating:

No comments:
Post a Comment