இழந்த உரிமைகளை மீட்க போராடும் நாம் வன்னியிலே இழந்த தமிழர் பிரதி நிதித்துவத்தையும் மீட்கவும் ஒன்றுபட வேண்டும்-எஸ்.வினோ நோகராதலிங்கம்.-Photos
பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப பலமாக இருக்கும் போது எமது அரசியல் உரிமைப் போராட்டத்தை வலுப்படுத்த முடியும். எமது உரிமையை யாரிடமும் தாரைவார்க்கவோ, யாரும் தட்டிப்பறிக்கவோ எமது மக்கள் இடம் கொடுக்கக்கூடாது.
எமது பலத்தினை நிரூபித்துக்காட்டவும், உலகுக்கு தெரியப்படுத்தவும் தேர்தல்களை ஜனநாயக ரீதியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களின் நேற்று பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
வன்னி மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் இப் பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள ஒன்றுபட்டு, நிதானத்துடன் சிந்தித்து எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்.
2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இனப்பரம்பல் விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது.
ஐந்து தமிழ் பிரதிநிதிகளும், ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் தெரிவாகியிருந்தனர்.
ஆனால் 2010 இல் நடைபெற்ற தேர்தலில் மூன்றுக்கு மூன்று என தமிழ் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கைமாறியது.
இது இயற்கையான பிரதிநிதித்துவத்தை புரட்டிப்போட்டது.
இந்த விடயத்தில் மேடை மேடையாக எமது மக்களுக்கு விளக்கியிருந்த போதும் எமது பிரச்சாரம் தோல்வியிலேயே முடிந்தது.
பெரும்பான்மை சிங்கள கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களின் சில்லறை வாக்குகளும், முன்னைய அரசால் வழங்கப்பட்ட பொய் வாக்குறுதிகளும் இந்த வாக்கு சரிவுகளுக்கும், இழப்புகளுக்கும் காரணமாக அமைந்தன.
இதன் விளைவாக இரண்டு பிரதிநிதிகளை இழந்தோம்.
எப்போதும் உரிமைகள் சார்ந்ததும், உணர்வு பூர்வமாகவும் சிந்திக்கின்ற எம்மக்களில் சிலர் நிலை தடுமாறினர். முகாம் வேலிகளுக்குள் முடக்கப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
எஞ்சிய மக்களின் வாக்குகள் விலை பேசப்பட்டது. மீள்குடியேற்றம், தடுப்பிலுள்ள இளைஞர்களின் விடுதலை, சொத்துக்கள் மீள கையளித்தல் என பொய்யான வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. அனைத்தையும் இழந்து கையறு நிலையில் நொந்து போயிருந்த எமது மக்களின் நிலையை தமக்கு சாதகமாக்கி சலுகைகளையும், இலவசங்களையும் வழங்கி கையேந்த வைத்தது மன்னைய அருசு. தவறுகளை உணர சிறிது காலம் எடுத்தது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள் சரியான தருணத்துக்காக காத்திருந்து வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தார்கள். ஜனாதிபதி தேர்தலிலும் தவறுகளை திருத்திக்கொண்டு ஒன்றுபட்டு நின்றார்கள், வென்றார்கள்.
நடைடிபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலிலும் எமது மக்களின் வாக்குகளை கொள்ளையிடவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை கபளீகரம் செய்யவும் திட்டங்கள் தீட்டப்படும்.
வன்னி மக்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்க போராடும் நாம் வன்னியிலே இழந்த தமிழர் பிரதிநிதித்துவத்தையும் மீட்கவும் ஒன்றுபட வேண்டும். இன்று யார் என்ன சொன்னாலும் தமிழ் மக்களின் ஒரே பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பே. அந்த அங்கீகாரத்தை ஜனநாயக முறைப்படி நீங்கள் தந்திருக்கிறீர்கள். அதை மீளவும் நீங்கள் உறுதிசெய்ய இத்தேர்தலை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இழந்த உரிமைகளை மீட்க போராடும் நாம் வன்னியிலே இழந்த தமிழர் பிரதி நிதித்துவத்தையும் மீட்கவும் ஒன்றுபட வேண்டும்-எஸ்.வினோ நோகராதலிங்கம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 08, 2015
Rating:

No comments:
Post a Comment