வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் சுற்றாடலுக்குள் கூடி நிற்றல், ஊர்வலங்கள் தடை...
பொதுத் தேர்தல் தினம் தேர்தல் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஒலிபெருக்கி பாவித்தல், வேட்பாளர் ஒருவரின் புகைப்படத்தை காட்சிப்படுத்தல், தேவையற்ற நடமாட்டங்கள்.
ஊர்வலங்களில் ஈடுபடுதல் என்பன தவிர்க்கப்பட வேண்டும். வாக்கெடுப்பு நிலையம் அமைந்துள்ள 500 மீற்றர் சுற்றுவட்டம் வாக்குச் சாடியாகவே கருதப்படும் என்று அம்பாறை தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர் இஸட். எம். நசீம்டீன் தேர்தல் உத்தியோகத்தர்கள் மத்தியில் தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிலையக் கடமைகளில் ஈடுபடவுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு தேர்தல் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் குறித்து விளக்கமளித்த அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல்கள் ஆணையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகாரத்தின் பிரகாரம் தெரிவத்தாட்சி அலுவலர்கள், வாக்கெண்ணும் அலுவலர்கள். அஞ்சல் வாக்குகளை அத்தாட்சிப் படுத்தும் அலுவலர்கள், சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கும், நீதிமன்றத்துக்குமே பதிலளிக்க வேண்டியவர்களாவர். நிறைவான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில், ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பு, மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகிய ஐந்து வகையான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இத்தேர்தல்களை தேர்தல்கள் திணைக்களமே நடத்துகின்றது. எந்த தேர்தலாக இருந்தாலும் அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நாங்கள் நிறைவான பங்களிப்பு வழங்க வேண்டும். தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புரைகளை ஏற்று உதவ வேண்டும்.
அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பினை நேர்த்தியாகவும், கட்சி சார்பின்றியும் நடைமுறைப்படுத்த வேண்டும். மு.ப. 07.00 மணிக்கு வாக்குச் சீட்டு வழங்கி தேர்தல் ஆரம்பித்து வைக்கப்படும். அதேபோன்று பி.ப. 4.00 மணிக்கு வாக்குச் சீட்டு வழங்கி முடிவுறுத்தப்படும். ஒரு வாக்கெடுப்பு நிலையத்தில் தவறு ஏற்படுமானால் அது மாவட்ட மட்ட பெறுபேற்றினை வெளியிட முடியாது போகும். மாவட்டப் பெறுபேறு இல்லாமல் தேசிய ரீதியிலான பெறுபேற்றை வெளியிட முடியாது. இதன் மூலம் தேர்தல் பணிகளின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடியும்.
வாக்குச் சாவடிக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரே நிறைவான அதிகாரம் பெற்றவர். தேர்தல் சட்ட திட்டங்களிற்கு முரண்படாத வகையிலும். சந்தர்ப்பம், சூழ்நிலைக்கேற்வாறும் தீர்மானங்களை மேற்கொண்டு பணியாற்ற வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளனர். தேவையான நேரங்களில் உதவித் தேர்தல்கள் ஆணையாளரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வாக்காளர்கள் தங்களது ஆளடையாளத்தை வாக்கெடுப்பு நிலையத்தில் நிரூபிப்பதற்கு எட்டு வகையான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இது தொடர்பான பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகையால் மேற்படி ஆவணங்களுடன் வருகை தராதவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வாக்குச் சீட்டு விநியோகிக்கப்படாது.
திகாமடுல்ல மாவட்டத்தில் மொத்தம் 464 நிலையங்களில் வாக்கெடுப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன. அம்பாறை தொகுதியில் 160 வாக்கெடுப்பு நிலையங்களும். பொத்துவில் தொகுதியில் 151 நிலையங்களும், சம்மாந்துறை தொகுதயில் 87 நிலையங்களும், கல்முனை தொகுதியில் 66 நிலையங்களும் அமையவுள்ளன. இதில் 341 வாக்கெடுப்பு நிலையங்கள் ஒருவழி நிலையங்களாகவும், 123 நிலையங்கள் இருவழி நிலையங்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் சுற்றாடலுக்குள் கூடி நிற்றல், ஊர்வலங்கள் தடை...
Reviewed by Author
on
August 17, 2015
Rating:

No comments:
Post a Comment