அண்மைய செய்திகள்

recent
-

தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனம் மிக்க சிந்தனையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!









உலகமே திரண்டு எங்களை அடக்க முற்பட்ட போது எமது விடுதலைப் பயணத்தை அரசியல் ரீதியாகத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக எமது தீர்க்கதரிசனம் மிக்க பெருந்தலைவன் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட மக்கள் பலம் கொண்ட அரசியல் சக்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று சிவஞனம் சிறீதரன் கிளிநொச்சியில் தெரிவிப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை வளாகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு கரைச்சிப் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ப.குமாரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு பெருந்திரளான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்

“உலகமே திரண்டு எங்களை அடக்க முனைந்த அந்தக்காலத்தில் எங்களுடைய பெருந்தலைவனால் எடுத்த முடிவு ஆயுத ரீதியாக நாங்கள் முடக்கப்பட்டால் அடுத்தகட்டமாக எமது விடுதலைக்கான பயணத்தை எப்படித் தொடர்வது என்ற தீர்க்கதரிசனம் மிக்க முடிவால் ஒரு அரசியல் ரீதியான கட்டுமானத்தை 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் சக்தியை எங்களுடைய தலைவர் பிரபாகரன் உருவாக்கினார். ஆகவே இது எமது தலைவரின் தீர்க்கதரிசனம் மிக்க முடிவு. எனவே தமிழர்களாகிய நாம் தோற்கடிக்கப்பட்டு மௌனிக்கப்படவுமில்லை. ஆரசியல் ரீதியாக நாங்கள் மிகவும் பலமாகவே இருக்கின்றோம்.

நாங்கள் மற்றவர்கள் சொல்வதைப் போல் அரசியல் நேர்மையற்றவர்கள் இல்லை. மக்களுக்கான விடுதலைப் பயணத்தில் என்றைக்கும் நாங்கள் மிகவும் உறுதியுடனும் நேர்மையுடனுமேயேதான் பயணித்துக் கொண்டுள்ளேளாம். நான் இந்த மண்ணைவிட்டு ஓடியொழிந்து போனவனுமல்ல. என்னுடைய அரசியலமைப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனை நீங்கள் நேரடியாகப் பார்க்கிறியள். ஆகவே நாங்கள் வாழ்ந்த ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை எங்களின் வாழ்வியல் கட்டமைப்புக்கள் எங்களை எமது இலட்சியப் பாதையிலிருந்து விலகிப்போக விடாது. நேற்றுக்கூட எம்மீது சேறடிப்பதற்காக இங்கு வந்து நின்று சிலர் கத்தினார்கள். ஆனால் உங்களுக்கு உண்மை நன்றாகவே தெரியும். உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. என்றோ ஒருநாள் வெளியே வரும். நான் உங்கள் கண்ணுக்கு முன்னால் உங்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவன். அதனால் என்னைப் பற்றியே அடுத்தவனை இகழ்ந்து கூறுவதிலோ நான் கவனம் செலுத்துவதில்லை. இந்த மண்ணிலே நீங்கள் எனக்குத் தந்த ஆணையை காப்பாற்ற என்னுடைய உயிரைக்கூடக் கொடுத்தாவது இறுதிவரை நான் போராடுவேன்.

எங்களுக்கு ஆடம்பரங்கள் வேண்டாம். உங்கள் பலம் மட்டுமே போதும். என்னுடைய கிளிநொச்சிக் காரியாலயத்திற்குள்ளே குண்டுவைத்தார்கள் எனது பலமாக இருந்து செயற்பட்ட வேழனை உடனே கைது செய்து கொண்டு சென்றார்கள். காந்தனை மூன்று நாட்களின் பின் கொண்டு சென்றார்கள். சிறையிலடைத்தார்கள் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் இருவரையும் ஒன்பது மாதத்தின் பின்னர் வழக்குப் பேசித்தான் வெளியே எடுத்தோம். டீலிங் பேசியல்ல. அப்போது அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள் என்னோடு தனியே பேச அழைப்பு விடுத்தார்கள். அவர்களுடன் நான் தனியாகப் பேச விரும்பவில்லை. சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுடன் சென்று அவர்களோடு நான் பேசினேன் அப்போது அவர்கள் சொன்னார்கள் நீங்கள் இனிமேல் எங்களுடைய இராணுவத்தைப் பற்றிப் பேசாது விட்டால், அரசாங்கத்தின் மீது பிழைகள் என்று சுட்டிக்காட்டாது விட்டால் அவர்களை நாங்கள் இன்றே விடுகின்றோம் என்று.

எமது இனத்திற்காக நீங்கள் அபகரிதுள்ள எங்களது மக்களின் காணிகளை விட்டுவிலகும்வரை நீங்கள் எங்கள் மக்கள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து அடக்கி ஒடுக்கி உரிமைகளை மறுக்கும் மனோநிலையிலிருந்து விடுபடும் வரை எனது இனத்திற்காக நான் எந்த இடத்திலும் பேசுவேன் என்றேன். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. எம் இனத்திற்காக எவரும் குரல்கொடுக்கக் கூடாது என்பதும் அதையும் மீறிக் கதைத்தால்
இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படுவார்கள் என்ற உண்மை தெரிகின்றதல்லவா. ஆனால் எம் இன விடிவுக்காக என்றைக்கும் நான் குரல் கொடுப்பதற்குத் தயங்கப்போவதில்லை.

எங்களிடம் மக்கள் பலம் உள்ளது. இங்கே கூடியிருக்கின்ற நீங்கள், இன்னுமின்னும் எத்னையோ எம்மின உறவுகளின் பலத்தின் மூலம்தான் நான் உங்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் எல்லோரும் எனக்குத் தந்த ஆத்ம பலத்தினால்தான் நாங்கள் உங்கள் முன் நின்று கொண்டிருக்கின்றோம். எங்களுடைய மாவட்டத்தை நாங்கள் எல்லோரும் சேர்ந்து கட்டி வளர்ப்போம்.

இங்கே எத்தனையோ திறமை மிக்கவர்கள் இருக்கின்றார்கள். இந்த மண்ணிலே இருந்து மிகவும் நெருக்கடியான யுத்தகாலகட்டத்திலே மிகவும் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக உலகத்திலே சிறப்பான யுனஸ்கோ விருது டொக்ரர்.

சத்தியமூர்த்திக்குக் கிடைக்கவில்லையா இந்த மண்ணிலே பிறந்த ஒருவருக்கு அப்படியான விருது கிடைத்தமை எங்கள் எல்லோருக்கும் கிடைத்த பெருமை அல்லவா.

எமது வரலாற்றுப் பதிவுகளை நாம சரியாக அடையாளப்படுத்திப் பேணவேண்டும். எமது கிளிநொச்சி மண் என்பது யாருக்கும் சோரம்போன மண்ணல்ல. யாருக்கும் அடியணிந்த மண்ணுமல்ல. எமது பெருந்தலைவர் வே.பிரபாகரனது தலைமையிலே வீரத்தோடும் உணர்வுகளோடும் வரலாறு படைத்தவர்கள் நாம். இப்போது எத்தனையோ பேரது நெருக்கடிகளுக்கு மத்தியில் நாமல் அண்ணாவின் நெருக்கடி கீதாஞ்சலி அம்மாவின்
நெருக்கடி சந்திரகுமாரின் நெருக்கடி டக்ளஸ்சின் நெருக்கடி, இராணுவத்தின் நெருக்கடி, இராணுவப்புலனாய்வாளர்களின் நெருக்கடி இவையெல்லாவற்றையும் கடந்து நாங்கள் இங்கு திரண்டிருக்கின்றோம் என்றால் இது எமது வரலாற்றுப் பதிவு. ஆகவே இந்த மண்ணின் விடுதலையில் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாகும்.

எமது விடுதலைக்கான பயணத்திலே அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்காக நீங்கள் ஆயிரமாயிரமாகத் திரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள். உங்கள் அரசியல் பலம் யார் என்பதை உலகத்திற்குச் சொல்லுங்கள். பெருமாற்றங்களை அது எங்களுக்குத் தரும். நாங்கள் யார் மீதும் சேறுபூசுபவர்கள் அல்ல நாங்கள் யார் மீதும் கோபங்கொண்டவர்களுமல்ல நாங்கள் யார் மீதும் காழ்ப்புணர்வுகொண்டவர்களுமல்ல. என்னுடைய கொள்கை உங்களுடைய கொள்கை. நீங்கள் என்னிடம் தந்துள்ள அந்த ஆத்மபலம் என்னையும் வளர்த்திருக்கின்றது. உங்களுடைய பலத்தினால் உங்களுடைய நம்பிக்கைக்குரியவனாக இந்த மண்ணிலே நான் மீண்டும் என்னால் முடிந்தவரை என் உயிர் உள்ளவரை உங்களோடு இணைந்து செயற்படுவேன். அதனால் நீங்கள் தயவுசெய்து வீட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்கள் பலத்திலே எமது விடுதலையை வென்றெடுப்பதற்கு நாங்கள் என்றைக்கும் உறுதியோடு பயணிப்போம்”என்று கூறினார்.
 
 
 

தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனம் மிக்க சிந்தனையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு! Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.