ஐ.நா.வுக்கான அமெ. பிரதிநிதி - சுமந்திரன் எம்.பி.யிடையே விசேட சந்திப்பு! சர்வதேச பிரசன்னத்துக்கு வலியுறுத்து
ஐநா வுக்கான அமெரிக்க நிரந்தர பிரதி பிரதிநிதி மிச்சல் சிசனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் பேச்சாளரும் தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும் யாழ்.மாவட்ட உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நியூயோர்க்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச்சந்திப்பு தொடர்பாக தெரியவருவதாவது,
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் கலப்பு நீதிமன்றமொன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து சர்வதேச தரத்திலான விசாரணைகள் இடம்பெறவேண்டும். சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்கள் கொண்ட பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும். அதற்கு அமெரிக்கா அழுத்தமளிக்க வேண்டும்.
தற்போது ஐ.நா. அறிக்கையை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இச்செயற்பாட்டுக்கு ரஷ்யா, கியூபா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஆதரவளிப்பதற்கு முனைப்புக்காட்டுக்கின்றன.
ஆகவே இவ்வாறான பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை அமெரிக்கா தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும் என கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிப் பிரதிநிதி மிச்சல் சிசன் இவ்விடயங்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்துவதாகவும் அவ்வாறான அழுத்தங்களை அளிப்பதாகவும் உறுதியளித்தார் என்றார்.
அதனைத் தொடர்ந்து சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உட்பட சர்வதேச பிரசன்னத்துடனான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறான விசாரணையொன்று நடைபெறாத விடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான பங்களிப்புக்களையும் மேற்கொள்ளாது என்பதுடன் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
ஐ.நா.வுக்கான அமெ. பிரதிநிதி - சுமந்திரன் எம்.பி.யிடையே விசேட சந்திப்பு! சர்வதேச பிரசன்னத்துக்கு வலியுறுத்து
Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 25, 2015
Rating:


No comments:
Post a Comment