தேர்தல்களின் போது வாக்குரிமையினை இழந்தவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க முடியும்...
நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போதும் வாக்குரிமையினை இழந்தவர்கள் அது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் இந்த விபரங்களை தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களது முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை அறிவிக்க முடியும்.
இந்த தகவல்களை ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் திணைக்களத்தின் மேலதிக தேர்தல் ஆணையாளருக்கு ஒரு பிரதியையும் மாவட்ட தேர்தல் காரியாலயத்திற்கு ஒரு பிரதியையும் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னதாக இந்த விபரங்களை அனுப்பி வைத்து மீளவும் வாக்களிப்பதற்கான உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்த அவர் தற்காலிக அடிப்படையில் வெளிநாடு சென்று மீள நாடு திரும்ப உத்தேசிக்கும் இலங்கையர்கள் வெளிநாட்டு முகவரி மற்றும் கடவுச்சீட்டு இலக்கத்தை குறிப்பிட்டு வாக்குரிமையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய முறைமையில் தேர்தலை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், தொகுதிவாரி மற்றும் மற்றும் விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஒரே நாளில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் பெரும்பாலும் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
புதிய தேர்தல் முறையின்படி 335 உள்ளூராட்சி மன்றங்களுக்குள் 25 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல்களின் போது வாக்குரிமையினை இழந்தவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க முடியும்...
Reviewed by Author
on
September 06, 2015
Rating:
Reviewed by Author
on
September 06, 2015
Rating:


No comments:
Post a Comment