உழைக்காமல் பெறும் பணம் பின்வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும் : வடக்கு முதல்வர்
மக்கள் நலன் சார்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க அரச அதிகாரிகள் முன்வரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையினால் நேற்றைய தினம் மன்னார் மாவட்ட தட்சனா மருதமடு அரச தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நடமாடும் சேவை மக்களின் நலன் கருதியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாங்கள் எமது காரியாலயங்களில் இருந்து கொண்டு உங்களை அங்கு வாருங்கள் என்பதிலும் பார்க்க உங்களைத் தேடி நாங்கள் யாவரும் வந்துள்ளோம்.
மூலை முடுக்குகளில் உள்ள உங்களுள் சிலரை இங்கு அழைத்து வர பிரயாண வசதியுஞ் செய்து தந்துள்ளோம். இதன் முழு நன்மையையும் பெற்றுக் கொள்வது உங்களைச் சார்ந்தது. இவ்வாறாகப் பல உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் உங்களைத் தேடி வரும் போது அதற்கான முழுப் பலனையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.
.மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதால் தாமதங்கள் குறைகின்றன. நீங்கள் எனக்கெழுதி நான் எனது செயலாளருக்கு எழுதி, அவர் உங்கள் கிராமத்திற்கு அருகில் இருக்கும் செயற்பாட்டு அதிகாரிக்கு எழுதி அறிக்கை கேட்க அந்த அதிகாரி உங்களைச் சந்தித்து அறிக்கை தயாரித்து எமது செயலாளருக்கு அனுப்ப, அதன்பின் எனது செயலாளர் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க எல்லாமாகச் சுமார் 2 மாத காலமாகின்றது.
அதன் பின்னர்தான் உங்கள் குறைக்கு என்ன தீர்வைப் பெற்றுக் கொடுக்கலாம் என்று ஆராய்கின்றோம். இந்த வழிமுறை கால தமதத்திற்கு வழிகோலுகிறது. கால தாமதத்தைத் தவிர்ப்பது எமது முதலாவது குறிக்கோள்.
அடுத்து வெளிப்படைத்தன்மையை நாம் எமது செயல்களில் உறுதிப்படுத்துகின்றோம். அரசியல் காரணங்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் அலுவலர்கள் தாமதிப்பதையும், தப்பான தீர்மானங்களை எடுப்பதையுந் தவிர்க்கின்றோம்.
முன்னர் எமது அலுவலர்கள் அரசியல்வாதிகளின் ஆட்டுதலுக்கு ஏற்ப ஆடி வந்திருந்தார்கள் என்றால் அந்த நிலையை மாற்றி உண்மையான நிர்வாகத் திறனுடன் சட்டப்படி கடமையாற்ற இந்த நடமாடுஞ் சேவை இடமளிக்கின்றது.
அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் சட்டத்திற்கும் மக்கள் உரிமைகளுக்கும் மட்டும் கட்டுப்பட்டு நிர்வாகத்திறனுடன் கடமையாற்ற இந்த நடமாடுஞ் சேவை இடமளிக்கின்றது.
மூன்றாவதாக நாங்கள் பதிலளிக்க வேண்டிய ஒரு கடப்பாட்டை இச் சேவையினால் வலியுறுத்துகின்றோம். கடிதம் அனுப்பினோம், நேரில் சென்று கண்டோம் எதுவும் நடக்கவில்லை என்று மக்கள் கூறாது இருப்பதற்கு நாங்களே உங்கள் முன் வந்து உங்கள் பிரச்சனைகளுக்குப் பதில் கூறுகின்றோம்.
நான்காவதாக எல்லா அலுவலர்களும் ஒன்று சேர்ந்து இங்கு இருக்கும் போது ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து உடன் நடவடிக்கை எடுக்க இது உதவுகின்றது. எது சரிஇ எது முறைஇ எது நியாயம் என்று கூட்டாக ஆராய்ந்து அறிந்து சட்டப்படி செயலாற்ற விழைவதே இந்த நடமாடுஞ் சேவையின் குறிக்கோள்.
நாம் உங்கள் பிரச்சனைக்கு இன்று தீர்வு காணாவிட்டால் அவற்றைக் குறித்துக் கொண்டு போய் ஒரு சில நாட்களுக்குள் அவற்றிற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்வோம்.
மன்னார் மாவட்டம் மிகப் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருவதாகக் கூறப்பட்டாலும் அண்மைக் காலங்களில் உங்கள் நன்மை கருதி நாங்கள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
பிறர்க்காக வாழ்வதில்த்தான் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் நிலைநிறுத்தப்படுகிறது. அமைச்சர்களும் அலுவலர்களும் நாங்கள் மக்கள் சேவையாற்ற வந்தவர்கள் என்பதை மறக்கக் கூடாது.
அரசாங்கம் எமக்குச் சம்பளத்தையும் பலவித அனுசரணைகளையும் நலவுரித்துக்களையுந் தருகின்றது. அவற்றைப் பெறுவதற்காக நாங்கள் வலுவாக உழைக்க வேண்டும். உழைக்காமல் பெறும் பணம் எப்பேர்ப்பட்ட சிக்கல்களைப் பின் வாழ்வில் ஏற்படுத்தும் என்பதை எங்களுள் சிலர் சிந்திப்பதுமில்லை சிரத்தை கொள்வதுமில்லை.
சென்ற வருடம் பிழையாகப் பணம் சேர்த்தவர்களின் வெளிநாட்டுக் கணக்கு விபரங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. எங்களைப் பராமரிப்பதும் பகட்டாக வைத்திருப்பதும் அரசாங்கத்தின் கடமை என்று எண்ணிக் கொண்டு நாங்கள் மக்களின் கடமைகளைப் புறக்கணிக்கக் கூடாது அல்லது சுயநலத்துடன் நடந்து கொள்ளக் கூடாது.
நான் ஆங்காங்கே வடமாகாணத்தின் பல இடங்களுக்கும் சென்று எமது அரசாங்க அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும் சந்தித்து வருகின்றேன்.
அவர்களில் பெரும்பான்மையோர் தாங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் வந்தாலும் மாகாண அரசுடன் இணைந்து மக்கள் நலம் காத்து நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்த்தான் கடமையாற்றுகின்றார்கள்.
ஒரு சிலர் மட்டும் மத்திய மாகாண அதிகாரங்களைப் பிரித்துக் காட்டித் தம்மை வேறானவர்கள் என்று சித்தரித்துக் காட்ட முனைகின்றார்கள். அப்பேர்ப்பட்ட அலுவலர்களை நாங்கள் பொதுவாக அடையாளம் கண்டுள்ளோம்.
அவர்களின் அரசியல் பின்னணிகளை அறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆவன செய்து வருகின்றோம். அவர்கள் திருந்த வேண்டும். மாகாண அரசாங்கத்திற்கு அவர்கள் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.
மக்கள் சேவையில் பாரபட்சம் காட்டாது நீதிவழி நின்று நடந்து கொள்ள அவர்கள் இனியாவது பழகிக் கொள்ள வேண்டும்.
முப்பது வருட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துறவாடிக் காரியமாற்றுங் கடமைகளை மறந்து வாழ்ந்து வந்துள்ளீர்கள். இயக்கங்கள், இராணுவம், அரசியல்வாதிகள் என்று பலரின் ஆணைகளுக்கு அடிபணிந்து வந்துள்ளீர்கள். சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றும் பக்குவத்தை மறந்திருந்தீர்கள். இனி அவ்வாறு நடக்க வேண்டிய அவசியமில்லை.
மக்கள் நலன் சார்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க முன் வாருங்கள். இந்த நடமாடுஞ் சேவையானது மக்களுக்கும் எமக்குமிடையிலான ஒரு உறவுப் பாலம். அவர்கள் குறைதீர்க்க, அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்க, எமது அமைச்சர்கள், பிரதிநிதிகள், அலுவலர்கள் யாவரும் முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
உழைக்காமல் பெறும் பணம் பின்வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தும் : வடக்கு முதல்வர்
Reviewed by NEWMANNAR
on
October 31, 2015
Rating:

No comments:
Post a Comment