அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே வட-கிழக்கு மக்கள் உள்ளனர்: த.தே.ம.முன்னணி

வடக்கு, கிழக்கு மக்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தால் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நீண்டகாலமாக விடுதலையின்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் ''நல்லாட்சி'' அரசு என்று கூறும் அரசாங்கமும் தமது விடுதலைக்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காது தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில்,
தமது விடுதலைக்காக தாமே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டடு சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களது உடனடியான விடுதலையை வலியுறுத்தியும் தமிழத் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் ஏனைய தரப்புக்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று நடாத்திய முழுமையான கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மிகவும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியுள்ளது.
இப்போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் ஒன்றுமையாகவும் முழு அளவில் பங்கெடுத்துள்ளனர். ஒற்றுமையான இச் செயற்பாடானது,
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் ஒருமித்த நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்ற தெளிவான செய்தியை சிறீலங்கா அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது.
அரசியல் கைதிகள் அனைவரையும் தமது சொந்த உடன்பிறப்புக்களாக கருதி அவர்களது விடுதலைக்கான மேற்படி போராட்டம் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் நடந்தேறுவதற்கு உதவிய அனைத்து தரப்புக்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் நன்றி கூறுகின்றோம்.
அனைத்து வணிகர் கழகங்கள் உள்ளிட்ட வர்த்தகர்க நிலைய உரிமையாளர்கள், சந்தை வியாபாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பணியாளர்கள், அரசு போக்குவரத்து துறை தொழிற்சங்கத்தினர், நடத்துனர்கள், சாரதிகள், முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும்,
ஊழியர்கள், அரச, தனியார்துறை ஊழியர்கள், அனைத்து தொழிற்சங்கங்கத்தினர்கள், அரச நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தினர் பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும்,
உயர்கல்வி நிறுவன சமூகத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பாக இப்போராட்டத்திற்கு முழு அளவில் மனப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்கிய இஸ்லாமிய சகோதர்களும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள் கொள்கின்றோம்.
எமது மக்களினதும் அரசியல் கைதிகளதும் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து ஸ்ரீலங்கா அரசு அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.
அவர்களது விடுதலைக்காக நாம் மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடுவோம் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே வட-கிழக்கு மக்கள் உள்ளனர்: த.தே.ம.முன்னணி
Reviewed by Author
on
November 14, 2015
Rating:
Reviewed by Author
on
November 14, 2015
Rating:

No comments:
Post a Comment