அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி பேதமின்றி கோலாகல வரவேற்பு


வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வவுனியா வர்த்தகர் சம்கம் வரவேற்று மலர் மாலை சூட்டி, நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கெளரவித்துள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமாகிய ரிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன்

மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, மஸ்தான் ஆகியோருடன் வடமாகாண சபை உறுப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சருமாகிய டாக்டர் சத்தியலிங்கம்,

வடமாகாணசபை உறுப்பினர்களாகிய எம்.தியாகராஜா, எம்.பி.நடராஜ், தர்மபால, சிவநேசன், ஜி.ரி.லிங்கநாதன், ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரோகண கமகே,

மற்றும் இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராசா, முனனாள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலரும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மேளதாளம் மற்றும் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணி ஆகியவற்றுடன் விருந்தினர்கள் வெகு கோலாகலமாக ஊர்வலத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வவுனியா ஹொரவப்பத்தானை வீதியில் உள்ள மொத்த காய்கறி விற்பனைச் சந்தையில் இருந்து கடை வீதி வழியாக மணிக்கூண்டு கோபுரச் சந்தியின் ஊடாக ஏ9 வீதியைச் சென்றடைந்த ஊர்வலம் அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் சென்று முடிவடைந்தது.

கலாசார மண்பத்தில் நடைபெற்ற வரவேற்பு உபசார கூட்டத்தில் சர்வமதத் தலைவர்கள், நகர வர்த்தகர்கள், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் பட்டாணிச்சூர் முஸ்லிம் மாக வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவ மாணவிகள் நடன விருந்தளித்து விருந்தினர்களை வரவேற்றனர்.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் சிறிஸ்கந்தராஜா வரவேற்புரையாற்றினார். சர்வ மதத் தலைவர்கள் ஆசியுரை வழங்கினார். சங்கத் தலைவர் ரீ.கே.இராஜலிங்கம் தலைமையுரையாற்றினார்.

தலைவர் ரீ.கே.இராஜலிங்கம், வர்த்தகர் சங்கத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வவுனியா வர்த்தகர் சங்கத்திற்குத் தனியான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்காக காணித்துண்டு ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு, தாங்கள் நீண்டநாட்களாகவே முயற்சிகள் மேற்கொண்டு வந்த போதிலும்,

அது நிறைவேறவில்லை என்;றும் அதில் உள்ள தடைகளை நீக்கி சங்கத்திற்கென காணித்துண்டைப் பெற்றுக்கொடுத்து அலுவலகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

வவுனியா புறநகராகிய குருமண்காடு சந்தியில் இருந்து வவுனியா கடைவீதியில் பள்ளிவாசல் சந்தி வரையில் செல்லுகின்ற வீதி மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனைச் செப்பனிட்டு, திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நீண்ட காலமாக அதிரடிப்படையின் பாவனையில் இருந்து வருகின்ற கலாசார மண்டபத்தை மீட்டெடுத்து பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

வவுனியா வர்த்தகர்கள் காசோலை மோசடி காரணமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும், இந்தக் காசோலைகள் தொடர்பிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பொலிசாரிடம் செல்லும்போது, அவர்கள் அது சீட்டுக் கொடுப்பனவுடன் சம்பந்தப்பட்டதென கூறி,

அதில் கவனம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டி, வர்த்தகர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ள இந்த காசோலை மோசடி தொடர்பில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

வவுனியா வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையுடன் நில்லாமல், பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருவதையும் அவர் பட்டியலிட்டுக் காட்டினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலைகள் தாக்கியபோது உடனடியாகவே அப்போதைய அரச அதிபருடன் தொடர்பு கொண்டு, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உதவியதாகவும்,

இறுதி யுத்தத்தின்போது இடம்பெய்ர்ந்த மக்களுக்கு அவசர உதவிகளை அரச செயலகத்தின் ஊடாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும், மலையகத்தில் கடந்த வருடம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்தை மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று வழஙிகி, அத்தியாவசிய உதவிகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து விருந்தினர்கள் நிகழ்வில் உரையாற்றினர்.








வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி பேதமின்றி கோலாகல வரவேற்பு Reviewed by NEWMANNAR on November 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.