துப்பாக்கி ரவை துளைக்காத பாதுகாப்பு மேலாடையை அணிய மறுத்துள்ள பாப்பரசர்...
பாப்பரசர் பிரான்சிஸ் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஒரு தாக்குதல் இலக்காகவுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ள நிலையிலும் அவர் தனது நத்தார் தின உரையின் போது துப்பாக்கி ரவை துளைக்காத மேலாடையை அணிவதற்கு மறுத்துள்ளார்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் அண்மையில் 130 பேர் பலியாவதற்கு காரணமாக அமைந்த தாக்குதல்களையொத்த தாக்குதல்களை இத்தாலிய ரோம் நகரில் தாம் நடத்தவுள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்மையில் தம்மால் வெளியிடப்பட்டிருந்த காணொளிக் காட்சிகளில் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் பாப்பரசரின் பேச்சாளர் தெரிவிக்கையில், பாப்பரசர் அந்த அச்சுறுத்தல் தொடர்பில் அறிந்துள்ளார் எனவும் ஆனால் அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அஞ்சவில்லை எனவும் கூறினார்.
இந்த வருடத்துக்கான நத்தார் தின உரையின் போது தான் பயணிக்கும் வாகனத்தில் குண்டு துளைக்காமல் இருப்பதற்கான மேலதிக பாதுகாப்பை மேற்கொள்வதற்கும் பாப்பரசர் மறுப்புத் தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரோம் மீதான தாக்குதல் திட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் என்ற வகையில் பாப்பரசர் பிரதான தாக்குதல் இலக்காக விளங்குவதாக கருதப்படுகிறது. எனினும் பாப்பரசரின் நத்தார் தின உரையின் போது அவருக்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் பெருமளவு பொலிஸாரும் படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
“பாப்பரசர் (ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்தான) அனைத்து அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் அறிந்துள்ளார். ஆனால் அவர் மக்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவில்லை" என வத்திக்கானிலுள்ள அருட்தந்தைகளில் ஒருவரான சிரோ பெனடிட்ரினி தெரிவித்தார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்டுள்ள அச்சுறுத்தல் காணொளிக் காட்சியில் தீவிரவாதிகளின் கறுப்புக் கொடி சின்னத்துடன் ரோமிலுள்ள சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
துப்பாக்கி ரவை துளைக்காத பாதுகாப்பு மேலாடையை அணிய மறுத்துள்ள பாப்பரசர்...
Reviewed by Author
on
December 19, 2015
Rating:

No comments:
Post a Comment