வடக்கில் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டும்...
வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஆறுமாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை வரவேற்கின்றோம்.
அதேவேளை, தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் முக்கியமாக வலியுறுத்துகிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.
ஆறுமாத காலத்தில் ஒரு இலட்சம் பேருக்கு காணிகளை மீள் வழங்க நடவடிக்கை எடுப்பதானது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஏ.எப்.பி. செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
""இவ்வாறு கால அட்டவணையொன்றை வழங்குவது இதுவே முதல்தடவையாகும். இந்த ஆக்கப்பூர்வமானமுன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக வெளியேறவேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும் "" என்று எம். ஏ. சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருக்கின்றார்.
இது இவ்வாறிருக்க ஏ.எப். செய்தி சேவைக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுமாத காலத்தில் வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இது ஒரு இலட்சிய இலக்காகக் காணப்படுகின்றது. உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுக்கும் வீடுகளை அமைப்பதற்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயற்பாடுகளை ஆறுமாத காலத்தில் முடிவுறுத்துவதற்காக நான் ஒரு பொறிமுறையை உருவாக்கவுள்ளேன். இவ்வருடத்தின் நடுப்பகுதியில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான காணிகள் வழங்கப்படும்.
வடக்கின் இடம் பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினையை நான் முடிவுக்குக் கொண்டுவருவேன். அதிகமான மக்களுக்கு காணிகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. எனவே அந்த மக்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமன்றி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் வழங்கப்படும். அடுத் இரண்டு வாரங்களில் வடக்கு, கிழக்கில் இவ்வாறு காணிகள் விடுவிப்பதற்கு ஆரம்பிக்கப்படும். அதுமட்டுமன்றி இம்மாதம் நான் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதுடன் அங்கு 700 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கவுள்ளேன்.
இதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இதற்கு காலம் தேவையாகும். பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் அவசரப்பட முடியாது. சிலருக்கு இந்த பொறுப்புக்கூறல் செயற்பாடு நூடுல்ஸ் உணவுபோன்று அமையவேண்டுமென அவசியம் காணப்படுகிறது. ஆனால் அவ்வாறு அதனை செய்ய முடியாது.
எமக்கு பொறுப்பு என்று ஒன்று உள்ளது. அத்துடன் சட்டத்தின் ஆட்சிப்படுத்தலை மதிக்கவேண்டும். இலங்கை அரசாங்கம் தொடர்பில் சர்வதேச சமூகம் தனது அனுகுமுறையை மாற்றியுள்ளது. எமது அரசாங்கம் பொலிஸ், தேர்தல், நீதி சேவை, மற்றும் பொதுச்சேவை உள்ளிட்ட ஒன்பது ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இலங்கைப் பார்க்கும் நோக்கில் பாரிய மாற்றம் காணப்படுகிறது. எமக்கு மிக அதிகளவில் சர்வதேச ரீதியான உதவிகள் கிடைக்கின்றன. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிலைநாட்டுவதற்கு எம்மை அர்ப்பணித்திருக்கிறோம்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் நான் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவிருக்கின்றேன். எம்மால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும். அல்லது ஏற்கனவே உள்ள அரசியலமைப்பை திருத்தி அமைக்க முடியும்.
எனது நிலைப்பாடானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிக்கவேண்டும் என்பதாகும். அதற்கு பதிலாக எமது நாட்டில் 1978 ஆம் ஆண்டு வரை காணப்பட்ட பாராளுமன்ற ஆட்சி முறைமைக்கு செல்வதே எனது நிலைப்பாடாகும்.
வடக்கில் தனியார் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டும்...
Reviewed by Author
on
January 05, 2016
Rating:
Reviewed by Author
on
January 05, 2016
Rating:


No comments:
Post a Comment