இயற்கையுடன் சவால்...
அளவுக்கு மிஞ்சிய வெப்பம், வறட்சியால் விளைநிலங்களின் பாதிப்பு, உற்பத்திகளின் வீழ்ச்சி, பொருளாதார முடக்கம் என ஆரம்பிக்கும் இன்றைய உலக சூழல் பஞ்சம், நோய், சூழல்மாசு என்ற பல்வேறு கோணங்களில் மோசமான விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
காரணம் என்னவெனின் புவி அளவுக்கு மீறிய வகையில் தனது தன்மையில் இருந்து மாறிவருகின்றமையே இன்று பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. இன்று புவி வெப்பமாதல் தன்மை மிக அதிகமாகியுள்ளது. எனினும் நவீனத்துவமும், விஞ்ஞானமும் தனது ஆராய்ச்சிகளை நிறுத்திக்கொள்வதாகத் தெரியவில்லை.
புவி வெப்பமடைதல் என்ற காரணி தொடர்பில் பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கும்போதே பல காரணிகளை முன்வைக்க முடியும். குறிப்பாக புவி வெப்பமடைதலின் மூலமாக ஏற்படும் பசுங்குடில் வாயுவின் அதிகரிப்பிற்கு பிரதான காரணம் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட இன்றைய நவீன நாகரிக வளர்ச்சியும் அபிவிருத்தி மற்றும் பொருளாதார காரணிகளை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் காடழிப்பு மற்றும் நிலப்பயன்பாடுகளுமேயாகும்.
குறிப்பாக கூறுவதாயின் வளர்ச்சி மேம்பாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கையாளப்படும் பொருளாதார போக்கும் செயற்பாடுகளுமே முக்கிய காரணமாகும். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்நுட்ப புரட்சி ஆரம்பமாகியது. அதன் மாற்றம் உலகின் வல்லரசு போட்டிகள், தொழிற்துறை வளர்ச்சி கண்ட நாடுகள் நவீனத்துவ நாடுகளின் போட்டியில் உலகில் இயற்கை தன்மைகள் அழிக்கப்பட்டும், சூழலின் மீதான அக்கறை குறைந்ததுமே காரணமாகும்.
அதேபோல் கரியமிலவாயு மற்றும் ஏனைய பசுமையில்லா வாயுக்களின் பரவல் வளிமண்டலத்தில் அதிகரித்தமை புவி வெப்பநிலை அதிகரிக்க மிகமுக்கிய காரணமாகும். உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனற நோக்கம், இலாபத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்ட பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அரசியல் ஆதிக்கம் இன்று இயற்கையை மீட்டெடுக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள உலகமயமாதல் இன்று உலகத்தையே அழிக்கும் கட்டத்தில் வந்து நிற்கின்றது.
குறிப்பாக கடந்த நூறு ஆண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலையானது 0.0073 டிகிரி செல்சியஸ் அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2 தொடக்கம் 5 டிகிரி செல்சியஸ் வரையில் உலகின் சராசரி வெப்பநிலை உயரக்கூடிய வாய்ப்புகள் உள்ளதெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கடல் நீர் மட்டம் இன்று 1.9 மில்லிமீட்டர் சராசரி விகிதத்தில் உயர்ச்சியடைந்துள்ளது. உலகில் மத்தியகிழக்கு மற்றும் தெற்கு நாடுகள் அதிக வரட்சியை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இந்த பரவல் உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தும் காரணியாக மாறியுள்ளமை முக்கிய அம்சமாகும். விவசாய நிலங்கள், நீர் நிலங்கள் வறட்சி கண்டுள்ளன. சராசரி மழைவீழ்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், அதனுடன் கூடிய நோய்கள் என பரவ ஆரம்பித்துள்ளன. இன்று மக்கள் இயற்கையுடன் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் நவீன வளர்ச்சிபோக்கு தொடர்பில் இன்று மக்கள் மத்தியில் தோன்றியுள்ள அச்சமானது 1970களில் இருந்தே சர்வதேச அளவில் கேள்வியாகவே உள்ளது. உலகம் கையாளும் நவீன வளர்ச்சிப்போக்கானது நிலையான நீடிக்கக்கூடிய ஒன்று தானா அல்லது இந்த நவீன வளர்ச்சிப்போக்கு காரணமாக எதிர்கால சமூகம் பாதிக்கப்படுமா என்பது அப்போதிருந்தே கேள்வியாக இருந்தது. குறிப்பாக 70களில் நடைபெற்ற ஸ்டோக்ஹோம், ஜோகனஸ்பேர்க் மாநாடுகளில் இக் கேள்விகள் விவாதமாகவே முன்வைக்கப்பட்டன.
அதேபோல் 1980 களில் இந்த நிலைமை தொடர்பில் உலக நாடுகள் கவனம் செலுத்த ஆரம்பித்தன. புவி வெப்பமாதல் மற்றும் பருவகாலநிலை மாற்றம் தொடர்பில் சிந்தனை ஓரளவேனும் கவனத்தில் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமையம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து முதல் காலநிலை மாநாடு 1992 ஆம் ஆண்டு பிரேசிலில் ரியோடி ஜெனிரோ புவி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் என்பன உறுதி செய்யப்பட்டன.
அன்றில் இருந்து சர்வதேச அமையங்கள் பல்வேறு காலநிலை மாநாடுகளை நடத்தித் தான் வருகின்றன. ரியோவில் இருந்து லிமா, இப்போது பாரிஸ் மாநாடு வரையில் காலநிலை தொடர்பிலான மாநாடுகள் நடந்துள்ளன. ஆனால் புவி வெப்பமாதலை தடுக்க எவ்வாறான காரணிகள் கைகொடுக்கும் என்ற தீர்மானம் ஒன்றை இன்றுவரையில் எட்டமுடியவில்லை.
ஏனெனில் இன்றைய பொருளாதார போக்குகளும், நாடுகளுக்கு இடையிலான சுயநல போக்கும், பொருளாதார வர்த்தக ரீதியிலான பன்னாட்டு நிறுவனங்களின் மறைமுகமான, அதேநேரத்தில் அழுத்தங்கள் மற்றும் அரசியல் சுயநல போக்குமே காலநிலை சீர்நிலையை பேணமுடியாத நிலைமை ஏற்பட காரணமாகும்.
அதேபோல் இன்று வல்லரசு நாடுகளும் வளர்ந்துவரும் நாடுகளும் முகம்கொடுக்கும் மிக முக்கிய பிரச்சினையாக சுற்றுச்சூழல் மாசு பிரதான காரணமாக மாறியுள்ளது. காபன் குறைப்பீடு கொண்ட சூழலை உருவாக்கும் முயற்சிகளை அனைவரும் எடுத்துவரும் நிலையில் காலநிலை மாநாடுகளை கூட நடத்தவேண்டிய நிலை உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச காலநிலை மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் பங்குபற்றி தத்தமது நாடுகளின் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை பற்றி ஆராய்ந்துள்ளன. சுமார் இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த மாநாட்டின் போது உலகின் காபன் மாசு வெளியீடுகளை குறைப்பது தொடர்பில் உலக வெப்பமாதலை 2பாகை செல்சியஸ் வரையில் வரையறை செய்வது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் காலநிலை மாற்றம் தொடர்பில் உதவக்கூடிய புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியும், புதுப்பித்தல் நடவடிக்கை என்றும் திட்டத்தின் கீழ் 5 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மாசு ஏற்படுத்தாத சக்தி வளங்கள் தொடர்பில் ஆராய்ச் சிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
அதேபோல் மாசற்ற சூழலை காப்பாற்றும் நோக்கத்தில் உலகின் வல்லரசு நாடுகள் மில்லியன் ரூபா தொகையை ஒதுக்கீடு செய்வதுடன் உலக வங்கியுடன் இணைந்த நிதி ஒதுக்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்படி மாநாட்டில் புதுப்பிக்க கூடிய சக்தி வளங்கள், போக்குவரத்து துறையிலான மாசு வெளியீடுகளை கட்டுப்படுத்தல், கழிவு முகாமைத்துவம் மற்றும் நகரங்களின் காபன் வெளியீடுகளை குறைத்தல் என்பன தொடர்பிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனிய சக்தி வளங்களை பயன்படுத்தும் நாடுகளுக்கு காபன் வெளியீடுகளை குறைக்க நிதி வழங்கவும் உலக வங்கி தயாராகியுள்ளது.
அத்தோடு இந்த மாநாடு நடைபெற முன்னரே உலகமெங்கும் பல பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இடம்பெற்றதும் முக்கிய விடயமாகும். அதாவது மேற்படி காலநிலை மாநாட்டின் போது உலக தலைவர்கள் அனைவரும் ஒருமித்த வகையில் காலநிலையை பாதுகாக்கும் வகையில் உறுதியான உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆகவே மக்கள் இன்று தூய்மையான ஒரு சூழலை நோக்கிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை தெளிவாக வெளிப்படுகின்றது. எம்மால் நவீனத்துவ பாதையில் விஞ்ஞான பயணத்தை ஆரம்பித்தாலும் இயற்கையை எதிர்த்து பயணிக்க முடியவில்லை என்பது வெளிப்பட்டு நிற்கின்றது.
தொழில் அபிவிருத்தி நாகரிக மாற்றம் நவீன கண்டுபிடிப்பில் முன்னிலையில் வளர்ச்சி கண்டுவரும் நாடான சீனா இன்று காற்று மாசுபாட்டில் பாரிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபாடு அதிகரித்துள்ள காரணத்தினால் சீன மக்களுக்கு மூன்றாவது தடவையாகவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகன பயன்பாடு அதிகரித்துள்ளதோடு தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் பலமடைந்துள்ள நிலையில் பல நகரங்களில் தூய்மையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நகரங்களில் வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் தலைநகர் பீஜிங்கில் முதன்முறையாக பாடசாலைகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டதுடன் போக்குவரத்து கட்டுப்பாடும், கட்டுமான பணிகளின் தடையும் விதிக்கப்பட்டது. எனினும் இடர்பாடுகள் காரணமாக அந்தத் தடை நீக்கப்பட்டது. அவ்வாறு இருந்தும் மீண்டும் இரண்டாவது தடவையாகவும் அதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சீனாவில் மக்களினால் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாத காரணத்தினால் மீண்டும் மூன்றாவது தடவையாகவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மக்களை அவதானமாக இருக்கும்படியும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மக்களின் பிரச்சினையை சாதகமாக பயன்படுத்திய சீன நிறுவனம் ஒன்று லேக் லூயிஸ் மலைத்தொடரில் சுத்தமான காற்றை போத்தல்களில் அடைத்தது பொது மக்களுக்கு சுவாசிக்கக்கூடிய செயற்கை சாதனங்களை வழங்கி வருகின்றது. சீனாவில் மட்டுமில்லாது கனடாவில் இருந்தும் தூய்மையான காற்று கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகின்றது.
எனினும் சீனாவின் இந்த சூழல் மாசுபாட்டு நிலைமை வெறுமனே சீன எல்லையுடன் மட்டுப்படாது உலகின் தொழிற்துறை மற்றும் வளர்சிகண்டுவரும் அனைத்து நாடுகளுக்கும் முக்கிய எச்சரிக்கையாகும். வெறுமனே அபிவிருத்தி, பணம், நவீனத்துவம் என பயணிக்கும் நாடுகள் இன்று தமது சூழலை திரும்பிப்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் உலகில் பல்வேறு நாடுகள் தமது தொழில் வளர்ச்சியின் மூலமாக தமது இருப்புகளை தக்கவைத்து வரும் நிலையில் உடனடியாக தொழிற்சாலை தடைகளையோ அல்லது மாற்று நடவடிக்கைகளையோ மேற்கொள்ள முடியாது. ஒருவேளை இந்த முயற்சியின் மூலமாக நம்முடைய பூமி ஒட்டுமொத்த அழிவில் இருந்து தப்பினாலும்கூட எதிர்காலத்தில் தொடர்ந்தும் பல ஆண்டுகளுக்கு இதன் அழிவுகளை நாம் அனுபவித்து வரவேண்டும்.
ஏனெனில் நாம் ஏற்கனவே வெளியிட்டதும் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கும் காபன் டை ஒக்சைட்டு வாயுவின் ஆயுளானது இன்னும் பல ஆண்டு காலத்திற்கு இந்த பூமியில் நீடித்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் எமது மாற்று நடவடிக்கைகள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு எம்மை பாதுகாக்கும் வகையில் அமையாது.
இன்றைய சூழலில் நாம் தற்காலிக தீர்வை நோக்கிய பயணத்தை பழகிக்கொண்டுள்ளோம். உணவுப் பழக்கவழக்கம் முதற்கொண்டு மருத்துவம், வாழ்க்கை முறை வரையில் நாம் தற்காலிக பாதுகாப்பை மட்டுமே மேற்கொண்டு வருகின்றோம். அந்த தற்காலிகம் இன்று இயற்கையுடனான போராட்டத்திலும் பழகிவிட்டது.
அந்தப் பழக்கமே இன்று எம்மை அழிவின் விளிம்பில் வைத்துள்ளது என்று கூறுவது நியாயமான கூற்றாகும். நகர அபிவிருத்தி என்ற பெயரில் வடிகாலமைப்பு முறைமையில் விடும் தவறுகள் இறுதியில் வெள்ளப்பெருக்கு நிலைமைகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியமை அண்மையில் இந்தியாவில் தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நல்ல உதாரணமாகும்.
அதேபோல் அணு ஆயுத பரிசோதனைகள், நவீன ஆயுத பரிசோதனைகள் என்பன காரணமாக சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம், மற்றும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பன இன்று உலகளாவிய ரீதியில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவுகளையும் இன்று மக்களால் அனுபவிக்க முடிகின்றது.
அதேபோல் பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலமாகவும் வெடிகுண்டு தாக்குதல்கள் மூலமாக ஏற்படும் மாசுபாடும், சிறிய வகையில் நிலம், நீர் மாசுபாடுகள், இரசாயன கலப்புகள், காலநிலைக்கு முரணான விவசாய செயற்பாடுகளும் முழுமையாக மக்களை பாதிக்கும் வகையில் தான் அமைந்துள்ளன. ஆகவே எந்தப்பக்கம் நோக்கினாலும் இறுதியில் பாதிப்புகள் எம்மையே வந்து சேர்கின்றன.
ஆகவே மக்கள் இப்போதாவது தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் இயற்கையுடன் முரண்பட்டு அல்லது போட்டிபோட்டு வெற்றிகொள்ள முடியாது. இயற்கையை, எமது நிலங்களையும் நீர் நிலங்களையும் பாதுகாப்பதன் மூலமாகவே எமது சூழலை பாதுகாக்க முடியும். அதை மக்கள் தெளிவாக விளங்கிக்கொண்டு இப்போதில் இருந்தாவது சூழலை பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும்.
சாதாரணமாக ஒரு மரத்தை வெட்டுவதில் இருந்து ஆரம்பிக்கும் சூழல் மாசுபாடு இறுதியில் மிகப்பெரிய விளைவுகளில் வந்து முடிகின்றது. புவி வெப்பமாதல் அதிகரித்து வரும் நிலையில் இயற்கை வாயுவின் அதிகரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எமது சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். இன்று சீனாவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை போன்றே அந்த மக்கள் போத்தல் காற்றை சுவாசிக்கும் நிலைமை எதிர்காலத்தில் உலகில் வாழும் அனைத்து மக்களும் செயற்கை காற்றை சுவாசித்து வாழக்கூடிய நிலைமை ஏற்படும்.
ஆகவே இன்று நாம் சூழலை பாதுகாப்பதே எதிர்காலத்தில் தூய்மையான சூழலை பராமரிக்க அடிப்படையாக அமையும். ஒவ்வொரு மனிதனும் இயற்கையை நேசித்து பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலம் பசுமையானதாக அமையும். அதை விடுத்து விஞ்ஞான போக்கில் இயற்கையுடன் மோதிக்கொண்டால் இறுதியில் வெல்லப்போவது என்னவோ இயற்கையே. ஆகவே தொடர்ந்தும் இயற்கையுடன் மனிதன் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
இயற்கையுடன் சவால்...
Reviewed by Author
on
January 04, 2016
Rating:
Reviewed by Author
on
January 04, 2016
Rating:


No comments:
Post a Comment