அண்மைய செய்திகள்

recent
-

வழக்கை முடித்து வைத்த இளஞ்செழியன்: நிலத்தில் விழுந்து நன்றி தெரிவித்த இராணுவச் சிப்பாய் மனைவி...


யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்னணி இராணுவ காவலரண் உள்ளே இடம்பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பாக இரண்டு இராணுவ கனிஸ்ட அதிகாரிகளுக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் கொலைக் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 22 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் எதிரிகள் இருவரையும் நேற்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி விடுதலைப்புலிகளுடனான முன்னணி காவலரண் பகுதியில் இருந்த இராணுவ காலவரண் ஒன்றில் குசும்சிறி என்ற இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்த மரணம் தொடர்பில் அவருடைய நேரடி உயரதிகாரிகளான சுமதிபால மற்றும் ஜயசுந்தர ஆகிய இரண்டு இராணுவ கனிஸ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கொலைக்குற்றம் சுமத்தி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 22 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று மற்றும் யாழ் மேல் நீதிமன்று ஆகியவற்றில் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று  இந்த வழக்கு நீதிபதி இளஞ்செழியானல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, எதிரிகள் இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட தினத்தன்று எதிரிகள் தரப்பு சட்டத்தரணி இந்த வழக்கின் தொகுப்புரையை அரை மணிநேரம் நிகழ்த்தினார்.

அந்தத் தொகுப்புரையில், ஆரம்பத்தில் இந்த வழக்கு இறந்தவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று முடிவுக்கு வந்தது என சட்டத்தரணி குறிப்பிட்டார்.

ஆயினும், 2, 3 மாதங்களின் பின்னர் அந்த மரணம் சம்பந்தமாக சந்தேகம் இருப்பதாக முறைப்பாடுகளும் தகவல்களும் கசிந்ததையடுத்தே, குற்றச்செயல் இடம்பெற்றதா என்று விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையின் பின்னர், தனது கட்சிக்காரர்களான 2 கனிஸ்ட அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்டது என்று இந்த வழக்கின் ஆரம்ப நிலைப்பாட்டை எதிரிகள் தரப்பு
சட்டத்தரணி எடுத்துரைத்தார்.

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, இறந்தவர், இராணுவ காவலரணுக்குள் நின்ற போது நடுநிசி நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகள் இருவரும் காவலரணுக்கு வெளியில் இன்னுமொரு இராணுவ சிப்பாயுடன் தமது துப்பாக்கிகள் சகிதம் நின்றிருந்தனர்.

வழக்குத் தொடுநர் தரப்பு இராணுவ சிப்பாய் ஒருவரின் சாட்சியத்தின்படி, இது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

சூடு நடத்தப்பட்ட துப்பாக்கி இறந்துபோன இராணுவ சிப்பாய்க்கு அலுவலக ரீதியாக வழங்கப்பட்ட துப்பாக்கி என்பதும் அவர் இராணுவ காவலரணுக்குள் சென்றபோது அந்தத் துப்பாக்கியைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார் என்பதும் சாட்சியங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதேநேரம் குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகளின் வசமிருந்த துப்பாக்கிகள், எதுவும் துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் விசாரணையின்போது நிரூபணமாகியிருந்தது.

இறந்தவரின் மரணத்திற்குக் காரணமாகிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கியைப் பகுப்பாய்வு செய்த அரச இரசாயன பகுப்பாய்வாளர் அது இறந்தவரின் துப்பாக்கி என்பதையும், அந்தத் துப்பாக்கியில் இருந்தே மரணத்தை ஏற்படுத்திய துப்பாக்கிக் குண்டு புறப்பட்டிருந்தது என்பதையும் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்து சாட்சியமளித்திருந்தார்.

எனவே, இறந்தவருடைய துப்பாக்கியே மரணத்தை ஏற்படுத்துவதற்கு சூடு நடத்திய துப்பாக்கி என்பது இரசாயன பகுப்பாய்வாளரினால் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியபோது, நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது, கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகள்தான் நேரடியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு இந்த வழக்கில் கண்கண்ட சாட்சியில்லை.

அத்துடன் சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமும் இல்லை. எதிரிகளின் துப்பாக்கிகள் எதுவும் கொலைக்குப் பயன்படுத்தப்படவில்லை. எதிரிகளுக்கு எதிராக சாதாரண சந்தேகமும் கூட வழக்குத் தொடுநரினால் காண்பிக்கப்படவில்லை.

எனவே இரண்டு எதிரிகளையும் இந்த நீதிமன்றம் விடுதலை செய்கின்றது என்றார்.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முதலாவது எதிரி சுமதிபாலவின் மனைவி நீதிபதியின் விடுதலைத் தீர்ப்பைக் கேட்டவுடன், புத்தம் சரணம் கச்சாமி என கத்திக் குளறி திறந்த நீதிமன்றில் நிலத்தில் விழுந்து தனது நன்றி வணக்கத்தைத் தெரிவித்தார்.

கடந்த 22 ஆண்டுகள் எனது கணவன் வேலையில்லாமல் ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்கினார். இறுதியில் இப்போதுதான் உண்மை வென்றது என அவர் அழுகைக்கிடையே கூறினார்.

நீதிமன்றில் கடமையில் இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிசார் அவரை ஆசுவாசப்படுத்தி, வெளியில் அழைத்துச் சென்றனர். இந்தத் தீர்ப்பையடுத்து, விடுதலை பெற்ற இரண்டு எதிரிகளும் நீதின்றத்தில் தலை வணங்கி மரியாதை செலுத்திவிட்டு வெளியேறினர்.

இவ்வாறு விடுதலை பெற்ற தினத்தன்று முதலாவது எதிரிக்கு 64 வயது என்பதும் இரண்டாம் எதிரிக்கு 48 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கை முடித்து வைத்த இளஞ்செழியன்: நிலத்தில் விழுந்து நன்றி தெரிவித்த இராணுவச் சிப்பாய் மனைவி... Reviewed by Author on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.