புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 80 கிலோகிராம் நகைகள் படையினர் வசம்!- மிகுதி நகைகளுக்கு நடந்தது என்ன?
வன்னியில் இறுதி போர் முடிவடைந்து 6 வருடங்கள் ஆகியும் தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழ் பொதுமக்களின் தங்க ஆபரணங்கள் இன்னும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என்று ஜே.வி.பி இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியது.
இந்தநிலையில் அந்த நகைகளுக்கு என்ன நேர்ந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் புதிதாக பிரதமரின் பதிலுக்காக ஒதுக்கப்பட்ட கேள்வி பதில் நேரத்திலேயே இந்தக்கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் வைப்பங்களில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட ஆபரணங்கள் எவ்வளவு, அதன் பெறுமதி என்ன? அது அரசாங்கத்திற்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்ற கேள்விகளை அவர் எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
இறுதி போரின் போது தமிழீழ வைப்பகங்களில் இருந்து படையினரால் பெருந்தொகை தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டன.
இதில் பொதுமக்களால் அடகு வைப்பப்பட்ட தங்க ஆபரணங்களும் தமிழீழ விடுதலை புலிகளுடைய தங்க ஆபரணங்களும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
150 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் தம்மால் மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்துள்ளனர். இதில் தோடுகள், மோதிரங்கள், மாலைகள், வளையல்கள், மற்றும் பதக்கங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இவ்வாறு மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களில் 32 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள், மாணிக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்பட்டு மத்திய வங்கியிடம்
கையளிக்கப்பட்டன.
இதன்படி, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி வரையில் 28 தடவைகளில் இந்த 32 கிலோ தங்க ஆபரணங்கள் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டன.
இதன் பெறுமதி 131 மில்லியன் 84 ஆயிரத்து 751 ரூபா என மதிப்பிடப்பட்டது. இராணுவத்தினரின் தகவலின்படி, 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி 25 பேருக்கு அவர்களின்
தங்க நகைகள் திருப்பி அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2377 தங்க நகை பொதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருந்ததுடன், 2014ஆம் ஆண்டு டிசம்பர் 7அம் திகதி கொழும்பில் வைத்து 2294 பேருக்கு அவர்களின் ஆபரணங்கள் திருப்பி அளிக்கப்பட்டதாக இராணுவத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
எனினும் ஊடகங்களில் 1960 பேருக்கே இந்த ஆபரணங்கள் மட்டுமே மீள கையளிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. இதனை அன்றைய பாதுகாப்பு அமைச்சும் உறுதிப்படுத்தியிருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், 1960 பேர் முன்னிலையில் 2182 நகை பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். எனவே இங்கு முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உரிய வகையில் தீர்த்துக் கொள்வதற்காக நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவொன்றை அமைத்து அதனூடாக செயற்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
தற்போதைய நாடாளுமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் இருப்பதால் இந்த விடயத்தை உரியமுறையில் கையாளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்னும் 80 கிலோ கிராம் தங்க நகைகள் இலங்கை இராணுவத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இவற்றை உறுதிப்படுத்தி மத்திய வங்கியிடம் கையளிக்கவுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த பதிலை அடுத்து தொடர்ந்தும் கேள்வி எழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,
முரண்பாடான பிரச்சினைகள் வரும் போது நாடாளுமன்றத்தில் உள்ள கண்காணிப்பு குழுவை சுட்டிக்காட்டுவது பிரதமரின் வழமையான விடயம் என குற்றம் சுமத்தினார்.
இராணுவத்தினரிடம் 80 கிலோ தங்கம் இருக்குமாயின் அவையும் வடக்கில் உள்ள மக்களின் நகைகளாகவே இருக்க முடியும். எனவே அதனையும் மீண்டும் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்திடம் இருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பினார்.
அனுரகுமார திஸாநாயக்கவின் கேள்விக்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவின் மூலம் விடயங்களை ஆராயும் போது விரைவான தீர்வொன்றை அடைய முடியும் என்ற ரீதியிலேயே இந்த யோசனையை முன்வைத்தாக கூறினார். அத்துடன் குறித்த 89 கிலோகிராம் நகைகளையும் மத்திய வங்கியிடம் கையளிக்க காலநிர்ணயம் குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதனை தவிர்த்து மக்கள் கருத்தை அறிய வேண்டுமாயின் ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டும். அது பிரச்சினைக்கு உடனடி தீர்வை தராது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த பதிலளை அடுத்து மீண்டும் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
32 கிலோ கிராம் தங்க நகைகள் மக்களிடம் பகிர்ந்தளிக்கப்ட்டதாகவும், இராணுவத்திடம் இன்னும் 80 கிலோ கிராம் தங்கம் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். அப்படியானால், 110
கிலோ தங்க நகைகளே மொத்த நகைகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும் 150 கிலோ கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக இராணுவம் கூறியுள்ளதால் மிகுதி 40 கிலோ கிராம் தங்கத்திற்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
இது தொடர்பாக அறிக்கை இன்று காலையே தமக்கு கிடைத்தது என்றும், முரண்பாடுகளுடைய இந்த அறிக்கை தொடர்பில் தாம் உரிய தரப்புகளிடம் விசாரித்தறிந்து நாடாளுமன்றத்தில் அறிய தரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமரிடம் மற்றுமொரு கேள்வியை எழுப்பிய அனுரகுமார திஸாநாயக்க, தமிழீழ விடுதலை புலிகளின் வைப்பகங்ளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைளுக்கு பற்றுச்சீட்டுகள்
வழங்கப்பட்டுள்ளன. எனவே அதனை கொண்டு உரியவர்களிடம் நகைகளை திரும்ப ஒப்படைக்கலாம் என குறிப்பிட்டார்.
இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதி குழுக்களின் தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட்ட உறுப்பினர்களிடம் ரணில் விக்ரமசிங்க, விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட அடகு நகைகளுக்கான பற்றுச்சீட்டுகள் குறித்து வினவினார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தன்னுடைய குடும்பம் அடகு வைத்த நகைகளுக்குக்கூட, தமிழீழ வைப்பகங்களால் பற்றுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டார்.
இதனை அடுத்து தீர்வு யோசனை என்ற வகையில் பிரதமர் யோசனை ஒன்றை முன்வைத்தார். நீதியமைச்சர், பாதுகாப்பு பிரதியமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரை வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரத்திலோ, அடுத்த வாரத்திலோ சந்தித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும் என குறிப்பிட்டார்.
இதன்போது மற்றுமொரு கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்வைத்தார்.
இந்த கோரிக்கைக்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மக்கள் மீண்டும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் முழுமையான கடப்பாட்டை
கொண்டுள்ளது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்வைத்த சொத்து அழிவுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டார்.
இதேவேளை தள்ளாடி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தை விடுவிப்பது தொடர்பில் உரிய அமைச்சருடன் பேசித்தீர்வுக்காணப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 80 கிலோகிராம் நகைகள் படையினர் வசம்!- மிகுதி நகைகளுக்கு நடந்தது என்ன?
Reviewed by Author
on
March 10, 2016
Rating:

No comments:
Post a Comment