அண்மைய செய்திகள்

recent
-

ஒவ்வொரு அணியின் ப்ளஸ், மைனஸ் என்ன..? - டி20 உலகக் கோப்பை உணர்த்திய உண்மைகள்!






 முன்னணி அணிகளை துவம்சம் செய்து யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இங்கிலாந்து - வெஸ்ட் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெற, பைனலில்  கடைசி ஓவரில் நம்பமுடியாத ஷாக் தந்து,  கோப்பையை கைப்பற்றி 'சாம்பியன்' டான்ஸ் போட்டார்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். கோப்பையை  வெல்லும் அணிகள் என கருதப்பட்ட இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா சறுக்கியது எப்படி? அரையிறுதியில் நியூசிலாந்துக்கு ஏன் அதிர்ச்சி தோல்வி? இங்கிலாந்து எப்படி ஃபைனலுக்கு வந்தது? ஆப்கானிஸ்தான் விஸ்வரூபம் எடுத்தது எப்படி? ஒவ்வொரு அணியின் பிளஸ் -மைனஸ் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க....

1.  வங்கதேசம் 

பிளஸ் :   இந்த உலகக்கோப்பையில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை  குவித்தது வங்கதேசம் தொடக்க வீரர் தமீம் இக்பால். அதிக சிக்ஸர்களை  விளாசியதும் தமீம்தான். தமீம், மஹமதுல்லா, ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசூர் ரகுமான்  ஆகிய நால்வரும்தான் அணியின் தூண்களாக இருந்தனர். இந்திய அணிக்கு எதிராக முழு வீச்சுடன் பீல்டிங் செய்து இந்திய அணியின் ரன்களை கட்டுப்படுத்தினார்கள்.



மைனஸ்:  -  நிலையற்ற ஆட்டமே வங்கதேசத்தின் தோல்விக்கு காரணம். பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் ஒடுங்கியவர்கள், பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் அளித்தனர், அடுத்தாக இந்தியாவை மிரட்டினர்,  பின்னர் நியூசிலாந்திடம் படுத்தே விட்டார்கள். ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் கடைசி மூன்று ஓவரில் போட்டியை தாரை வார்த்தார்கள். இந்தியாவுடனான போட்டியில் கடைசி மூன்று பந்தில், இரண்டு ரன்னை கூட எடுக்காமல் சிக்ஸர் விளாச ஆசைப்பட்டு மண்ணை கவ்வினார்கள். ஒரு விஷயத்தில் முழு வெற்றி கிடைக்கும் வரை, பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும். ஆனால் வெற்றிக்கான அறிகுறி தெரியும்போதே உற்சாக மிகுதியால் கவனம் சிதறினால்,  எவ்வளவு பெரிய  உயரத்தில் இருந்தாலும் வெகு வேகமாக கீழே விழுந்துவிட நேரிடும் என அனுபவப் பாடம் படித்திருக்கிறார்கள் வங்கதேச வீரர்கள்.

2. ஆப்கானிஸ்தான்

பிளஸ்:   இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்கள்,  நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசை சுருட்டி எறிந்து வெற்றி பெற்றார்கள்.
அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சு, ஆப்கானிஸ்தானின் மிகப்பெரும் பலமாக உள்ளது. தென்னாப்பிரிக்காவை தவிர மற்ற  மூன்று அணிகளையும் பந்துவீச்சில் அச்சுறுத்தினார்கள். வலிமையான இங்கிலாந்தை 85-7 என தத்தளிக்கவிட்டார்கள். ஜிம்பாப்வே அணியை  தகுதி சுற்றிலேயே காலி செய்தார்கள். சேஷாத், நபி, ஷென்வாரி, ரஷித் ஆகியோர்  சிறப்பாக விளையாடினர். மும்பை, நாக்பூர், டெல்லி என வெவ்வேறு வகையான பிட்சில் விளையாடியபோதும், அந்தந்த பிட்சின் தன்மைக்கேற்ப உடனடியாக தங்களை மாற்றிக்கொண்டு விளையாடியது பெரிய பிளஸ்.



மைனஸ்:  வலுவான வேகப்பந்து வீச்சு. ஸ்லோ  பால் வீசக் கூடிய பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லை. பேட்டிங்கில் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தினார்கள். சேஷாத், நபி தவிர பேட்டிங்கில் மற்றவர்கள் சொதப்பினார்கள். ஃபூட் வொர்க் ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் இல்லை. எப்போதுமே பவுண்டரி, சிக்ஸர் மட்டுமே  விளாச ஆசைப்பட்டார்கள், களத்தில் வேகமாக ஓடி ரன்களை எடுப்பது, சமயோசிதமாக பேட்டிங் செய்வது, பந்தை சரியான இடத்தில் பிளேஸ்மென்ட்  செய்வது போன்றவற்றில் இன்னமும்  ஆப்கானிஸ்தானுக்கு பயிற்சி தேவை. 

3. இலங்கை

பிளஸ்: இலங்கை அணி,  தற்போது  அணியை மீண்டும் கட்டமைக்க  வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. முன்னணி வீரர்கள் சொதப்பினாலும் வான்டர்சே, ஷனகா , சமீரா போன்றோர் நம்பிக்கை தரும் விதத்தில் விளையாடினார்கள்.



மைனஸ்:  இந்த உலகக்கோப்பையில் மிக மோசமாக விளையாடிய அணி இலங்கைதான். ஆப்கனை தத்தி தத்தி வென்றாலும், மற்ற அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவியது முன்னாள்  சாம்பியன் இலங்கை.  நடுவரிசை ஆட்டக்காரர்கள் மிகவும் சொதப்பினார்கள். திரிமன்னே, ஒரு போட்டியில் கூட பத்து ரன்களை தாண்டவில்லை. பார்ட்னர்ஷிப் போடுவதில் சொதப்பி தள்ளியது இலங்கை அணி.  மன ரீதியாக மிகவும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி விளையாடியதே தோல்விக்கு முக்கிய காரணம். இலங்கை அணிக்கு முதலில் புத்துணர்ச்சி முகாம் நடத்த வேண்டியது அவசியம்.

4. பாகிஸ்தான்

பிளஸ்:  ஷர்ஜீல்கான், இமாத் வாசிம், அஃப்ரிடி, முகமது ஆமீர்  ஓரளவு  சிறப்பாக விளையாடினார்கள். அதை தவிர பிளஸ் என சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.



மைனஸ்:  அணியில் இருக்கும் அனைவரும் ஒழுங்காக பேசிக் கொள்ளவே இல்லை. உமர் அக்மல் நான்காவது நிலையில் கூட ஒழுங்காக விளையாடாத நிலையில். மூன்றாம் நிலையில் தன்னை இறக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஹபீஸ் - அப்ரிடிக்கு இடையே ஒற்றுமையில்லை. இப்படி அணியிலேயே பல பிளவுகள் இருந்தன. முகமது அமீர் தவிர மீதி யாரும் முழு உழைப்பை கொட்டவே இல்லை. நன்றாக  பேட்டிங் செய்யக்கூடிய  சர்ப்ராஸ் அகமதுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. வெற்றி பெற வேண்டும் என்றே  வெறியே இல்லாமல் விளையாடியதுதான்  மைனஸ்.

5. ஆஸ்திரேலியா

பிளஸ்: சிறந்த பேட்ஸ்மேன்கள்தான், சிறப்பான அணிதான், ஓரளவு நல்ல பந்துவீச்சும் இருக்கிறது. நல்ல ஆல் ரவுண்டர்களும் இருக்கிறார்கள். இதெல்லாமே பிளஸ்தான். உஸ்மான் கவாஜா சீராக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். எந்தவொரு போட்டியையும் பாசிட்டிவாக ஆரம்பித்தது  நல்ல விஷயம். கவாஜா, ஜாம்பா அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே அசத்தினார்கள்.



மைனஸ்: குபீரென விக்கெட்டுகள் சரிவதுதான் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைனஸ். இந்தியாவுடன் ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய நிலையில் இருந்து, தொடக்க வீரர்கள்  ஆட்டமிழந்ததும் அப்படியே முடங்கிபோனது. ஜாம்பா நன்றாக வீசினார். மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக பயன்படுத்தினாலும், அணியில் இரண்டு தரமான பந்துவீச்சாளர்களை எடுக்காதது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியாவுடன் நன்றாக வீசிக்கொண்டிருந்த  ஜாம்பாவை,  கேப்டன் ஸ்மித்  சரியாக பயன்படுத்தவில்லை. அடிக்கடி பேட்டிங் வரிசையை மாற்றியது ஆஸிக்கு பின்னடைவாக போனது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஸ்மித், தனது கேப்டன்சியை ஒழுங்காக செய்யவில்லை என்பதே நிதர்சனம். அதற்கான பரிசுதான் அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் போனது.

6. தென்னாபிரிக்கா

பிளஸ்:  வலுவான பேட்டிங் வரிசை, இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் தொடர்ந்து ரன்களை குவித்தது, டிவில்லியர்ஸ் போன்ற தனிப்பட்ட எந்தவொரு வீரரையும் நம்பி இல்லாமல் ஓரளவு எல்லா பேட்ஸ்மேன்களுமே சிறப்பாகவே விளையாடியது, வெற்றிக்காக கடைசி வரை உறுதியாக போராடியது  போன்றவை பாசிடிவ் அம்சங்கள்..



மைனஸ்:  'CHOKERS' டேக் இன்னமும் தென்னாப்பிரிக்காவை விட்டுப் போகவில்லை. டூ பிளசிஸ் கேப்டன்சி மிக மோசமாக  இருந்தது. டி20 போட்டிகளில் சூழ்நிலைக்கேற்ப பந்துவீச்சாளர்களை மாற்ற வேண்டும். ஆனால் டெம்ப்ளேட்டாக பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். நன்றாக பந்து வீசி வந்த அபாட்டை,  திடீரென  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு எடுக்கவில்லை. டி20 ஸ்பெஷலிஸ்ட்டான  ஆல்ரவுண்டர் டுமினிக்கு ஏற்பட்ட காயம், அணிக்கு பெரும் பின்னடைவு,  பகுதி நேர பந்துவீச்சாளராக யாரையுமே பயன்படுத்தவில்லை. அவுட் ஆப் தி பாக்ஸ் யோசிக்காமல் நேர்கோட்டிலேயே பயணித்ததே தென்னாப்ரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணம். அதிர்ஷ்டம் சுத்தமாக டு பிளசிசுக்கு இல்லை; இலங்கையை தவிர மற்ற அனைத்து போட்டியிலும் டாஸ் தோற்றார். பேட்டிங்கை மட்டுமே நம்பி வந்த அணிக்கு, சேஸிங் வாய்ப்பு ஒரு முறை மட்டுமே கிடைத்தது. வலுவான பேட்டிங் மட்டும் போதாது.  அணியில் திறமையான ஆல்ரவுண்டர்கள், விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் அவசியம்  என்பதை உணர்ந்திருப்பார்  டு-பிளசிஸ்.

7. நியூசிலாந்து

பிளஸ்: உலககக்கோப்பையில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு நன்றாகவே  அதிர்ஷ்டம்  இருந்தது. ஐந்து போட்டியிலுமே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் , வங்கதேசம் என அத்தனை அணியையும் நேர்த்தியாக  விளையாடி வென்றது. வெட்டோரி ஓய்வுக்கு பிறகு தகுதியான, திறமையான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது நியூசிலாந்து. வில்லியம்சன் கேப்டன்சி அற்புதமாக இருந்தது. நியூசிலாந்து  இனி,  கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடும் என தெரிகிறது.



மைனஸ்:  பயங்கரமான ஹிட்டர்களை கொண்ட அணி என வர்ணிக்கபட்டு வந்த நிலையில்,  சுமாராகவே பேட்ஸ்மேன்கள் விளையாடினார்கள். கேப்டன் வில்லியம்சன்  பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், குப்டில் நிலையற்ற தன்மையுடன் விளையாடினார்.  நடுவரிசை பலமற்றதாகவே இருக்கிறது. 180 ரன்கள் எடுக்க கூடிய பிட்சில் வெறும் 153  ரன்களை மட்டுமே குவித்தது நியூஸி. பந்துவீச்சில் ஸ்ட்ராங் என்பதால் பேட்டிங்கை அசட்டையாக எடுத்துக் கொண்டதே அரையிறுதியில் திடீர் தோல்விக்கு காரணம்.

8. இந்தியா

பிளஸ்:  விராட் கோலி  தனது கேரியரின் உச்சக்கட்ட பெர்பார்மென்ஸில் இருக்கிறார். விராட் கோலி களத்தில் நின்றால், இந்தியா எவ்வளவு பெரிய இலக்கையும் சேஸ் செய்துவிட முடியும் நம்பிக்கை பிறந்திருக்கிறது.  ஆறாவது நிலையில் இறங்கி விளையாடிய தோனிதான் இம்முறை விராட் கோலிக்கு அடுத்ததாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இருக்கிறார். கேப்டன்சி, விக்கெட் கீப்பிங்கிலும் மெர்சலாக்கினார் தோனி.  நெஹ்ரா ஒரு போட்டியில் கூட நான்கு ஓவர் வீசி முப்பது ரன்களை கூட  விட்டுத்தரவே இல்லை. பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் கூட மிகசிறப்பாக வீசினார். ஓவருக்கு சராசரியாக வெறும் 5.95 ரன்களையே விட்டுதந்தார். இந்திய  டி20 அணியில் நெஹ்ரா நிரந்தர இடம் பிடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.



மைனஸ்: தனிப்பட்ட மேட்ச் வின்னர்களை நம்பியே இருந்ததுதான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம். அரையிறுதி போட்டி தவிர,  மீதி போட்டிகளில் எப்போதுமே தொடக்க வீரர்கள் சொதப்பினர். நடுவரிசையில் ரெய்னா பலம் சேர்க்கவில்லை. யுவராஜுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மற்ற அணிகளில் எல்லாம் எட்டு, ஒன்பதாம் நிலையில் கூட வீரர்கள் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசுகிறார்கள். ஆனால் இந்திய அணியில் ஆறு விக்கெட் விழுந்துவிட்டால் அவ்வளவுதான். எந்த காலகட்டத்திலும் ஆல்ரவுண்டர் என ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்கு மோசமாக பேட்டிங் செய்கிறார் ஜடேஜா. இதனால் கோலி, தோனிக்கு அதிக பளு ஏற்படுகிறது. பந்துவீச்சில் அஷ்வின் இந்த தொடர் முழுவதும் மிக சுமாராகவே பந்து வீசினார். கட்டுக்கோப்பாக பந்துவீசக் கூடிய, அதே சமயம் சிக்ஸர்களை விளாசும் திறன் படைத்த ஹர்பஜனுக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவே இல்லை. அணியில் ஒரு வீரர் தொடர்ந்து நன்றாக விளையாடாவிட்டாலும்,  அணியை மாற்றமாட்டேன் என தோனி அடம்பிடித்தது ஒரு வகையில் அவருக்கும் மற்ற வீரர்களுக்குமே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

9. இங்கிலாந்து

பிளஸ்: அதிரடியான பேட்ஸ்மேன்கள், நேர்த்தியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள், நல்ல ஆல்ரவுண்டர்கள் பாசிட்டிவான விஷயங்கள். மொயின் அலி, ஸ்டோக்ஸ், வில்லி என மூன்று தரமான ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் இங்கிலாந்து பயப்படாமல் விளையாடியது. கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணியாகவே விளங்கியது இங்கிலாந்து.



மைனஸ்:  கேப்டன் மோர்கன் மிக மோசமான பார்மில் இருக்கிறார், அலெக்ஸ் ஹெல்ஸ் சொதப்பல் ஆட்டம் ஆடுகிறார். பெரிதும் எதிர்பார்பார்க்கப்பட்ட அடில் ரஷித், விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. கேப்டன் மோர்கனின் கேப்டன்ஷிப் யாருமே கணிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. எதன் அடிப்படையில் ஒரு பவுலரை பந்துவீச அழைக்கிறார் அல்லது ஒரு பவுலரை புறக்கணிக்கிறார் என்பதே புரியாத புதிராக உள்ளது. இங்கிலாந்து இறுதி போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் மோர்கனின் பங்கு மிக சொற்பமே. பீல்டிங்கிலும்  இங்கிலாந்து சுமாராகவே செயல்பட்டதை மறுக்க மடியாது.

10. வெஸ்ட் இண்டீஸ்

பிளஸ்:  எந்த தனிப்பட்ட வீரரையும் நம்பி அணி இல்லை என்பதே மிகப்பெரிய பிளஸ்தான். அணியில் 9 பெரிய ஹிட்டர்கள் இருக்கிறார்கள். நீளமான பேட்டிங் வரிசையும், திறமையான ஆல்ரவுண்டர்களாலும் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் வசமானது. ஸ்லோ பால் வீசுவதில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். இதனால் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்கள்  சிக்ஸர்கள் விளாச மிகவும் கஷ்டப்பட்டார்கள். சாம்வேல் பத்ரியின் அபாரமான பந்துவீச்சும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் துடிப்பான பீல்டிங்கும் கோப்பையை சாத்தியமாக்க முக்கிய காரணம். கேப்டன் சமிக்கு செம அதிர்ஷ்டம் இருந்தது. தொடர்ந்து 10 போட்டியில் டாஸ் ஜெயித்திருக்கிறார். இந்த உலகக்கோப்பையில்,  நியூசிலாந்து அணிக்கு அப்படியே நேர்மாறாக டாஸ் வென்று ஆறு முறையும் சேஸிங் எடுத்தார் சமி.




மைனஸ்:  சாமுவேல்ஸ்  தவிர ஃபூட் வொர்க் மற்ற வீரர்களிடம்  சுத்தமாக இல்லை. சுழற்பந்துக்கு சாதகமான நாக்பூர்  மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறியதை பார்க்க முடிந்தது. ஆப்கானிஸ்தானின் பகுதி நேர பந்துவீச்சாளர்களிடம் பம்மினர் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள். கெயில், ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் இருபது ரன்களை கூட அடிக்கவில்லை. நேர்த்தியான பேட்டிங்  இல்லாமல் போனது ஒரு சிறிய மைனஸ். 
ஒவ்வொரு அணியின் ப்ளஸ், மைனஸ் என்ன..? - டி20 உலகக் கோப்பை உணர்த்திய உண்மைகள்! Reviewed by Author on April 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.