அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள,தமிழ் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும்! வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தில் பரிந்துரை


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் சிங்கள மக்கள் வாழும் ஏனைய மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனம் செய்யப்படவேண்டும். முஸ்லிம் மக்களுக்கும், தெற்கில் மலையக மக்களுக்கும் தன்னாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவுகளுக்குரிய முன்னுரையின் போதே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண சபையின் 49 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைக் கட்டடத்தில் நேற்றைய தினம் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு முன்மொழிவுகளை சபையில் முன்வைத்து முதலமைச்சர் உரையாற்றினார்.

வடமாகாண சபையானது தயாரித்துள்ள அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைபு திட்டத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கொள்கை வரைவு முன்மொழிவுகளை நேற்று முதலமைச்சர் சபையில் முன்வைத்தார்.

அவர் தனது உரையின்போது மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்போ அல்லது அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகளோ பின்வரும் கொள்கை முன்மொழிவுகளை கருத்திற் கொள்ளல் வேண்டும் என முடிவு செய்கின்றோம்.

இந்தியாவில் மாநிலங்கள் மொழி ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதைப் போன்று இலங்கையானது அடிப்படையில் இரண்டு பரந்த மாநிலங்களாக, அதாவது பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் பிரதேசத்தைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும் மற்றும் பெரும்பான்மையாகச் சிங்களம் பேசும் மக்களைக் கொண்ட ஏனைய ஏழு மாகாணங்கள் இன்னொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்.

இவ்விரு பரந்த மொழி ரீதியான மாநிலங்களிலும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும் தமிழ் பேசும் மலையகத் தமிழர்கள் நாட்டின் ஏனைய பகுதியில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல்வேண்டும்.

சிங்களம் பேசுவேரைக் கொண்ட மாநிலமானது அதனுள்ளே பிரிக்கப்படல் வேண்டுமா என்ற கேள்வியானது சிங்கள மக்களால் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

பெரிய நகருக்குரிய கொழும்புப் பகுதியானது தனியானதோர் நிர்வாகத்தைக் கொண்டு நாட்டின் தலைநகர் அலகாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

தொடர்ச்சியாக இந்த ஆவணத்தில் ஒப்பிக்கப்பட்டிருக்கும் வரலாற்று ரீதியான பின்புலம் மற்றும் 1833ம் ஆண்டுக்கு முன்னரும் பின்னருந் தமிழ்ச் சமூகத்தால் நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டு வந்த தனித்துவத்தன்மையின் அடிப்படையில் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஏனைய சமூகங்களில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அவர்களில் தங்கியிருப்பவர்களாக இருக்கும் வகையில் அவர்களைச் சார்ந்திருக்கவோ வேண்டியதில்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்கும், ஒற்றையாட்சி முறைக்குரிய அரசாங்கத்துக்குப் பதிலாக கூட்டாட்சி சமஷ்டி முறைக்குரிய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டியது அத்தியாவசியமாகின்றது.

இலங்கைப் பிரஜை ஒவ்வொருவரும் சட்டரீதியாக இன்னொருவருக்குக் கீழானவர் என அவனோ அல்லது அவளோ உணர்வதற்குரிய வழிமுறையை இல்லாதொழிப்பது உறுதி செய்யப்பட வேண்டியது அத்தியாவசியமாகும்.

வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவிருக்கும் அவனுடைய அல்லது அவளுடைய சமூகங்கள் சட்டரீதியாக ஏனையோரிடமிருந்து தமக்கென்று அளவு மீறிய பயனைக் கோரக்கூடாது.

வட,கிழக்கு மாநில பாராளுமன்றம்

இலங்கையில் தமிழ் பேசுவோரைக் கொண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களினுள் தற்போதைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒன்றிணைத்தலின் போது முஸ்லிம் தன்னாட்சி பிராந்திய சபையானது உருவாகும்.

இத்தன்னாட்சிப் பிராந்தியத்தின் நிலை, பரிமாணம் மற்றும் நியாயாதிக்க எல்லைகள் ஆகியன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும்.

மொழி ரீதியிலான தமிழ் பேசும் வடகிழக்கு மாநிலமானது மாநிலப் பாராளுமன்றத்தைக் கொண்டிருக்கும்.

மலையக தன்னாட்சிப் பிராந்தியம்

மலையகத் தமிழர்களுக்காக அதேபோன்ற ஒழுங்குகள் சிங்கள மொழிரீதியான மாநிலத்தினுள் மேற்கொள்ளப்படல்வேண்டும். அதிகாரமானது ஒரு சமூகத்தில் குவிக்கப்படும் அபாயத்தைத் தவிர்த்து அதிகாரங்கள் சகல சமூகங்களுக்கிடையேயும் சமனாகப் பகிரப்படுவதை முழு நாட்டினதும் பாராளுமன்றப் பிரதிநிதிகள் உறுதி செய்தல் வேண்டும்.

எது எவ்வாறு இருப்பினும் வடகிழக்கு மாநிலம் மற்றும் முஸ்லிம் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் மலையகத் தமிழ் தன்னாட்சிப் பிராந்தியம் பாதிக்கத்தக்கவாறு மத்திய கூட்டாட்சி சமஷ்டிப் பராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் உரிய மாநிலத்தாலோ அல்லது தன்னாட்சிப் பிராந்தியங்களாலோ அங்கீகரிக்கப்படாத வரை நடைமுறைக்கு வரக்கூடாது.

வடகிழக்கு மாநிலப் பாராளுமன்றம், வடகிழக்கு முஸ்லிம் பிராந்திய சபை அதேபோல் மலையகத் தமிழ்ப் பிராந்திய சபை ஆகியவற்றுக்கு தமது சொந்த அலுவல்களை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முழுமையாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

இப்பாராளுமன்றத்துக்கும் பிராந்திய சபைகளுக்கும் போதி சுயாட்சியானது ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். இலங்கையை விடப் பரப்பளவிலும் குடித்தொகையிலும் சிறிய நாடாகிய சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கன்டோன் நாட்டுப் பிரிவு முறைமையானது அவசியமான மாற்றங்களுடன் இங்கு சுவீகாரஞ் செய்வதற்காகப் பரிசீலிக்கப்படமுடியும்.

தமிழ்ப்பேசும் மாநில அரசில் மத்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் நிறைவேற்று அதிகாரம் எவற்றையும் கொண்டிருக்கமாட்டார். அவை மாநிலத்தின் அமைச்சரவையினாலேயே முழுமையாக தன்னுடைமையாக்கப்படும்.

அரசகரும மொழி

இலங்கையின் அரசகரும மொழிகள் சிங்களமும் தமிழும் ஆவதுடன் ஆங்கிலமானது இணைப்பு மொழியாகவும் இருத்தல் வேண்டும். வடகிழக்கு மாநிலத்திலுள்ள சகல பதிவுகளும் நடவடிக்கைகளும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும். மலையகத் தமிழ்ப் பிராந்திய சபை தவிர்ந்த தீவின் மீதிப்பாகத்தில் பேணப்படும்

சகல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பேணப்பட்டு சிங்களத்தில் இருத்தல் வேண்டும். மலையகப் பிராந்தியத்திய சபைகளில் பேணப்படும் சகல பதிவுகளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் தமிழிலோ சிங்களத்திலோ நடைபெறலாம். அவற்றின் தமிழ் அல்லது சிங்கள மொழிபெயர்ப்பும் ஆங்கிலமொழி பெயர்ப்பும் பேணப்படவேண்டும்.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குகையில் தொடர்ச்சியாக வந்த மத்திய அரசாங்கங்களால் சுற்றயல் நிர்வாகங்களை வலிதற்றதாக்குவதன் பொருட்டு இதுவரை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்படல்வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கைகள் பின்வரும் சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளன.

1979ம் ஆண்டு நிறுவப்பட்ட மகாவலி அதிகாரசபை போன்ற அரசியல் மற்றும் நிர்வாக அதிகார சபைகளின் தொடர்ச்சியானது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உள்நாட்டு மாகாண சபையினால் அங்கீகரிக்கப்படாத, மாகாண எல்லைகளை மீறிய புகலிட நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அனுமதித்துள்ளது.

1992ம் ஆண்டின் 58ம் இலக்க அதிகாரங்களை மாற்றியமைக்கும் (பிரதேச செயலர்கள்) சட்டமானது அரச அதிபர்களையும் பிரதேச செயலர்களையும் மாகாண நிர்வாகத்தின் நோக்கெல்லைக்கு அப்பாற்படுத்தி அதன் மூலமாக ஓர் இரட்டை நிர்வாக ஒழுங்கமைப்பினைத் தோற்றுவித்துள்ளது.

மத்திக்கும் அயலுக்குமிடையே ஒருங்கியல்பான நியாயாதிக்கத்தை ஒழுங்கு செய்வதன் மூலமாக மாகாண நிர்வாகத்தை வலிதற்றதாக்கி மத்தியானது அதிகாரம் செலுத்தியது. இதன் பின்னர் ஒருங்கியல்பான நியாயாதிக்கமானது தோற்றுவிக்கப்படக்கூடாது.

மாநில மற்றும் சமஷ்டி கூட்டாட்சிக்குரியதாக மாத்திரம் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். ஒவ்வொரு மாநில அரசாங்கத்தினதும் தன்னாட்சிப் பிராந்திய அரசாங்கத்தினதும் சுயாட்சியானது கூட்டாட்சி சமஷ்டி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படல்வேண்டும்.

சகல பிரஜைகளுக்கிடையிலும் அவர்களுடைய மொழி, மதம், சாதி, கோட்பாடு அல்லது பிரதேசம் எவ்வறிருப்பினும் சமத்துவக் கொள்கையானது வலியுறுத்தப்படுவதுடன் அரசியல், நிர்வாக, கல்வி, பொருளாதார மற்றும் தொழில் அடங்கலாக ஏனைய சகல துறைகளிலும் சகல சமூகங்களுக்கும் மதிப்பளிப்பு ஏற்பாடு செய்யப்படல்வேண்டும்.

அரச சேவையிலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுத்தாபனங்களிலும் சகல பிரஜைகளுக்கும் தொழில் வாய்ப்புக்கு சம வாய்ப்புக்கள் உறுதி செய்யப்படல்வேண்டும்.

இருமொழியில் தேசிய கீதம்

ஒவ்வொரு மாணவரும் தேசிய மொழிகளிலும் இணைப்பு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பதைக் கட்டாயமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அனுமதிக்கப்படவேண்டும்.

குடியரசின் கொடியானது மக்கள் பிரிவுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் இருப்பதை இல்லாதொழிக்க வேண்டும். தேசிய கீதமானது சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் சிங்களத்திலோ அல்லது தமிழிலோ அல்லது இரு மொழிகளிலுமோ பாடப்படல்வேண்டும்.

தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைப் புத்தகங்களினூடான நிலைப்பேறான நிகழ்ச்சிநிரலானது இல்லாதொழிக்கப்படல்வேண்டும்.. இலங்கையின் வரலாறானது பிரிவுசார் அல்லது வட்டாரம்சார் கோரிக்கைகளுக்குப் பணிந்திராது, சர்வதேசத் தராதரங்களுக்கு அமைவாக சரியாக வரையப்படல்வேண்டும்.

மாநில எல்லைக்குட்பட்ட அரச நிலங்கள் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கும் நோக்கெல்லைக்குங் கீழாக வருதல்வேண்டும். அந்நிலம் அப்பிரிவிலுள்ள மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படவுள்ள போது சமஷ்டி கூட்டரசாங்கமானது மாநில அரசாங்கத்தின் அல்லது பிராந்திய அரசாங்கத்தின் சம்மதம் அல்லது இசைவு இன்றி அந்நிலத்தின் மீது எந்த அதிகாரங்களையும் பிரயோகிக்க முடியாது.

பொலிஸ் அதிகாரம்

மாநில அரசாங்கத்துக்கு முழுமையான பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். சமஷ்டி கூட்டரசுக்குரிய பொலிஸானது மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் ஒழுங்கமைப்படுவதில் எவ்வித ஆட்சேபனையுமில்லை.

தீவிரவாதத் தடுப்பு (தற்காலிக) ஏற்பாடுகள் சட்டம் நீக்கப்பட்டு நாட்டின் பொதுவான குடியியல் சட்டமானது மீண்டும் கொண்டுவரப்படல்வேண்டும்.

புதிய அரசியலமைப்பு ஒழுங்குகள் இனம், மதம், மொழி, கோட்பாடு, சாதி மற்றும் பண்பாட்டைச் சார்ந்திராது சகல சமூகங்களுக்கிடையிலும் சமூக அக்கறையை உறுதிசெய்து தனிப்பட்ட பிரஜைகள் சட்டவிதிகளுக்கும் உரிமைகளுக்கும் சுயஉரிமைகளுக்கும் மதிப்பளித்தலை மேம்படுத்தி பாராளுமன்ற ஜனநாயகத்தின் நேரான இலட்சியங்களைத் தொடர வழி அமைக்கப்படவேண்டும்.

நவீன கண்காணிப்பு முறைகளின் காரணமாக போர் முடிவுற்றமையைத் தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் இராணுவப்படைகளைக் கண்காணிப்புப் பணிகளுக்காக நிலைநிறுத்த வேண்டிய அவசியப்பாடானது தேவைக்கு மிகையானது.

முன்னாள் போராளிகளை பொது வாழ்க்கையினுள் மீளக் கொண்டு வருவதன் பொருட்டு படைக்குறைப்பு, படைக்கலைப்பு மற்றும் மீளவொருங்கமைத்தல் செயன்முறையானது மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காகப் பணிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை சமூகத்தினரை அதிக எண்ணிகையில் கொண்டுள்ள அரசியலமைப்புச் சபை, அதன் பக்கச்சார்பான பிரதிநிதிகளின் தொகையை மனதில் வைத்து தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலைத்திருக்கத் தக்கதுமானதோர் தீர்வை உறுதி செய்வதன் பொருட்டு தமிழ் பேசும் மக்களின் தொடர்ச்சியான வரலாற்று ரீதியான வாழிடமாகவுள்ள பிரதேசங்களில் அவர்களின் தனித்துவத் தன்மைக்கு ஏற்ற வகையில் அவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தலைமைத்துவங்களுக்கும் இடையில் ஓர் ஆரம்ப இணக்கப்பாடானது எய்தப்படல் வேண்டும்.

இந்த இணக்கப்பாட்டில் தமிழ்த் தலைவர்கள் தமது மக்கள் சார்பாகக் கூறும் விடயங்கள் ஒரு தனிப்பட்சமாக பெரும்பான்மை சிங்களம் பேசும் உறுப்பினர்களால் புறக்கணிக்கப்பட்டால் தமிழ்பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் மக்கள் தீர்ப்பைப் பெற்று தமது அரசியல் நிலையை உறுதி செய்வதற்கு குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.

அவ்வாறானதோர் இணக்கப்பாடானது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அல்லது ஏனைய நட்பு நாடுகளால் காப்பீடு செய்யப்படல் வேண்டும் எனத் தெரிவித்தார்.
சிங்கள,தமிழ் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும்! வடமாகாண சபையின் தீர்வுத்திட்டத்தில் பரிந்துரை Reviewed by NEWMANNAR on April 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.