உலகிலே மக்கள் அதிகமாய் ஒன்றுகூடும் "கும்பமேளா" திருவிழா: நாகா சாதுக்களின் வினோதம்...
உலகின் திருவிழாக்களிலே அதிக மக்கள் திரளும் ஒரு திருவிழா என்றால் அது மகா கும்பமேளாதான்.
ஒரே நாளில் 3 கோடி பேரும், மொத்த திருவிழா நாட்களிலும் சேர்த்து 33 கோடி பேரும் என தீர்த்த நீராடிய பெருஞ்சாதனை நிகழ்வுக்கான பெருமையையும் பெற்றுள்ளது.
கும்பமேளா 2016:
கும்பமேளாவை அங்குள்ள மொழி வழக்கில் ’சிம்ஹஸ்த கும்ப பர்வா’ என்று அழைக்கின்றனர்.
இந்த ஆண்டில் கும்பமேளா ஏப்ரல் 22 முதல் மே 21 வரை நடக்கிறது.
உஜ்ஜயினி புனித நதியான சிப்ரா நதியில் ’ஷகி ஸ்நான்’ என்ற புனித நீராட பக்தர்கள் பூரண நிலவு (பவுர்ணமி) நாளான ஏப்ரல் 22 லிருந்து குவியத் தொடங்குகின்றனர்.
கும்பமேளா நடக்கும் இடங்கள்:இந்தியாவில் நாசிக், உஜ்ஜைன், ஹரிதுவார், அலகாபாத். ஆகிய நான்கு பகுதிகள் மட்டுமே கும்பமேளா நடக்க தகுதி இடங்களாகும்.
அந்த ஊர்களில் உள்ள புனித நதிகள்தான் திருவிழா மையம்.
திரிவேணி சங்கமம்:
இந்துக்களின் புனிதநதியாக விளங்கும் கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்கு புலப்படாத அல்லது தற்போது இல்லாது போன சரஸ்வதி நதியும் சங்கமிப்பது திரிவேணி சங்கமம் ஆகும். இந்த மூன்று ஆறுகளும் அலகாபாத்தில் சங்கமிக்கிறது.
மகா கும்பமேளா:
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதே முழு கும்பமேளா எனப்படுகிறது.
பன்னிரண்டாவது முழு கும்பமேளா மிகச்சிறப்புடையது.
அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது அதுவே மகா கும்பமேளா என அழைக்கப்படுகிறது.
மகா குமபமேளாவே உலகில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடும் திருவிழாவாகும்.
கும்பமேளாவுக்கான கதை:
சாகாவரம் தரும் தேவலோக பானம் அமிர்தம். திருமாலின் வாகனமான கருடன் அந்த அமிர்த பானையை (கும்பத்தை) சுமந்து சென்றபோது அதிலிருந்து அமிர்தம் சிந்தி, பூமியில் நான்கு இடங்களில் விழுந்ததாகவும் அந்த இடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவதால், தங்களுடைய உடல் மற்றும் உள்ளத்தின் அழுக்குகளை நீக்கும் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.
உஜ்ஜயினி மேளாவில் வானியல்:
உஜ்ஜயினி பகுதியில் இவ்விழா வைகாசி (மே) மாதத்தில் வருகிறது. சூரியனும் சந்திரனும் மேச ராசியிலும் வியாழன் சிம்ம ராசியிலும் மற்ற கோள்கள் எல்லாம் துலா ராசியிலும் உள்ள போது கும்பமேளா காலம் குறிக்கப்படுகிறது.
அரை கும்பமேளா:
ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளாவும் கொண்டாடப்படுகிறது.
இது அலகாபாத்திலும் ஹரிதுவாரிலும் மட்டும் நடக்கிறது.
நாகா சாதுக்கள் வினோதம்:
நாகா சாதுக்கள் உடல் முழுதும் திருநீறு பூசியபடி, வேறு ஏதும் உடைகளின்றி மலர்மாலை மட்டுமே அணிந்திருப்பர்.
இந்த நிர்வாண சாதுக்கள் ஹர ஹர மகாதேவா என்று கூறியபடி மேலும் சில மந்திர உச்சாடனைகள் செய்தவாறே ஊர்வலமாக வந்து கடும் குளிரிலும் புனித நீராடுவர்.
இந்த சாதுக்கள் குளிப்பதற்கு ஆற்றில் ராம்குட் என்ற பகுதியை ஒதுக்கியுள்ளனர். குளிக்கும்போது அங்கிருந்தே பித்தளை காசுகளை ஆற்றில் வீசுவர். அதை மக்கள் தேடி எடுப்பர். அது கிடைத்தால் பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.
நெரிசலும் விபத்தும்:
2013 ம் ஆண்டில் நடைபெற்ற கும்பமேளாவில் பிப்ரவரி 10 ம் தேதி தை அமாவாசை அன்று மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடினர்.
அன்று அலகாபாத் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 36 பேர் இறந்தனர். 1954 ல் நடந்த கும்பமேளாவிலும் கட்டுக்கடங்காத மக்கள் குவிந்ததால் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
கும்பமேளா மிகப்பெரிய இந்து மதத்தினர் ஒருங்கிணைப்பு திருவிழா. இதில் புனித நீராடும் நம்பிக்கையே கருப்பொருள்.
உலகிலே மக்கள் அதிகமாய் ஒன்றுகூடும் "கும்பமேளா" திருவிழா: நாகா சாதுக்களின் வினோதம்...
Reviewed by Author
on
April 22, 2016
Rating:

No comments:
Post a Comment