சம்பந்தனின் கருத்து நாட்டின் நல்லிணக்கத்தை பாரதூரமாக பாதிக்கும்!
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சமஸ்டி ஆட்சி முறைமை குறித்து வெளியிட்ட கருத்து நாட்டின் நல்லிணக்கத்தை பாரதூரமாக பாதிக்கும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் ஜாதிக ஹெல உறுமய கட்சி இது பற்றி அறிவித்துள்ளது.
சமஸ்டி ஆட்சியை பெற்றுக்கொள்ள முடியும் அதுவரையில் பொறுமையாக இருக்க வேண்டுமென அண்மையில் சம்பந்தன் கூறியிருந்தார் எனவும், இந்தக் கருத்து நல்லிணக்கத்தை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் சமூகத்தை சமஸ்டி ஆட்சி குறித்த எதிர்பார்ப்பிற்குள் தள்ளும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த 16ம் திகதி வட மாகாணசபையின் உறுப்பினர்களை சந்தித்த சம்பந்தன், சமஸ்டி ஆட்சியை பெற்றுக்கொள்ள முடியும், குட்டையை குழப்பி விடாதீர்கள் என கோரியிருந்தார் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட மாநிலம் பற்றியும் இந்த சந்திப்பின் போது சம்பந்தன் தலைமையிலான தரப்பினர் பேசியுள்ளனர்.
சம்பந்தனின் இந்தக் கருத்துக்களின் மூலம், தமிழ் மொழியை மையமாகக் கொண்ட சமஸ்டி ஆட்சி என்ற கனவிலிருந்து இன்னமும் மீளவில்லை என்பது தெளிவாகின்றது.
சம்பந்தன் தங்களது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய உரிமை உண்டு என்ற போதிலும், இணக்கப்பாட்டுடைய அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சில இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல்களின் போது மக்கள் சமஸ்டி முறைமை ஆட்சிக்கு ஆதரவளிக்கவில்லை.
சமஸ்டி ஆட்சி குறித்த கருத்து நாட்டின் அரசியல் அமைப்பினை மீறும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டை பிளவுபடுத்த நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே பங்களிப்பது நாட்டின் அரசியல் அமைப்பிற்கு சவால் விடுக்கும் வகையிலான நடவடிக்கையேயாகும்.
புத்தாண்டு காலத்தில் வடக்கு தமிழ் அரசியல் சமூகம் தெற்கிற்கு சொல்லும் செய்தி சுபமானதல்ல என ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பந்தனின் கருத்து நாட்டின் நல்லிணக்கத்தை பாரதூரமாக பாதிக்கும்!
Reviewed by Author
on
April 19, 2016
Rating:
Reviewed by Author
on
April 19, 2016
Rating:


No comments:
Post a Comment