இந்தியா தாமதித்தால் ஏனைய நாடுகள் தலையிடும்....
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழின அழிப்பு தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் இன்னமும் முற்றுப்பெறவில்லை.
இதற்கான காரணம் இலங்கை அரசின் அசமந்தம் என்பதற்கு அப்பால், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் இறுக்கமான போக்கு என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
மகிந்தவின் காலத்தில் வன்னிப் பெருநிலப் பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்கா, ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சி வந்த போது தனது இறுக்கத்தை தளர்த்திக் கொண்டது.
ஆக, போரில் பாதிக்கப்பட்ட- இழப்புகளைச் சந்தித்த தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதை விட மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பினால் அது போதும் என்ற நிலைப்பாடே அமெரிக்காவிடம் இருந்தது.
இதனால் மைத்திரியின் ஆட்சியில் அமெரிக்கா தமிழர்களை மறந்து விட்டது என்றே கூற வேண்டும்.
இதற்கு மேலாக இந்தியாவை பொறுத்தவரை வன்னிப்போர் தொடர்பில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை இடம்பெறுவது அறவே விருப்பமில்லாத விடயமாகும்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது எடுக்கப்பட்ட இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் தொடர்கிறது.
இந்தியாவுக்கு விருப்பமில்லாததை செய்வதற்கு அமெரிக்கா முன்வராது என்பதால் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு விருப்பமில்லாததாலேயே சர்வதேச போர்க்குற்ற விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்ற உண்மை தமிழ் மக்களுக்கு நன்கு தெரியுமாயினும் இனப்பிரச்சினைகான தீர்வைக் காண்பதில் இந்தியா தாமதிப்பது ஏன் என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
இந்தியாவை மீறி அமெரிக்கா எதிலும் தலையிடாது என்பது இந்தியாவுக்குத் தெரியும். அப்படியானால், இந்தியா எந்த வித காலதாமதமுமின்றி இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும் அல்லவா?
இப்போது கூட, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இந்திய மத்திய அரசு டெல்லிக்கு அழைத்துள்ளதாக கேள்வி.
ஆனால், அந்த அழைப்பு சீனாவுடன் இலங்கை கொண்ட உறவை, சம்பூரில் அமுலாகும் அனல் மின் நிலையம் தொடர்பில் பேசுவதாக இருக்குமேயன்றி,தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்காதது ஏன்? என்று கேட்பதற்காகவல்ல என்பது நிச்சயமான உண்மை.
எதுவாயினும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா கடைப்பிடித்து வரும் காலதாமதம் இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்குமான உறவை நிச்சயம் பாதிக்கும்.
இந்தியா உதவவில்லை என்ற நிலைமை நீடிக்குமாயின் வல்லமை பொருந்திய நாடுகளிடம் தமிழ் மக்கள் உதவி கேட்பது தவிர்க்க முடியாததே.
தான் செய்யாதவிடத்து தமிழ் மக்கள் வேறு நாடுகளிடம் உதவி கேட்பது நியாயமற்றது என்று இந்தியா கருதுமாயின் அதுதான் தர்மம் அற்றதாகும் என்பதே உண்மை.
இந்தியா தாமதித்தால் ஏனைய நாடுகள் தலையிடும்....
Reviewed by Author
on
May 01, 2016
Rating:

No comments:
Post a Comment