பொருளாதார மையம் குறித்து இறுதி முடிவை முதலமைச்சரே எடுப்பார்!- இரா.சம்பந்தன்....
வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் எதுவும் இல்லை. இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் வடமாகாண முதலமைச்சர்தான்' என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார அமையம் ஒன்றை அமைப்பதற்கு 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கின்றது.
இருந்தபோதிலும், இதனை ஓமந்தையில், அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பதில் முரண்பாடுகள் மேலோங்கியுள்ளன.
இந்த நிலையில், இதனை வவுனியாவுக்கு அப்பால் மதவாச்சிக்குக் கொண்டு செல்வதற்கும் திரை மறைவில் சில முயற்சிகள் இடம்பெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இது தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
ஜனாதிபதியும், பிரதமரும் பேசி இது குறித்து முடிவெடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என கொழும்பில் இருந்து இயங்கும் தேசிய தமிழ் பத்திரிகை ஒன்று சம்பந்தனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதையிட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் முடிவெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அது தொடர்பான தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டும். அவ்வாறான தீர்மானத்தை அவர் விரைவில் எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்' எனத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவது தொடர்பில் அவரிடம் கேட்டபோது, 'அவ்வாறான முரண்பாடுகள் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் இவ்வாறான விடயங்களில் அந்த முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது எமது கடமை. ஆனால், இவ்விடயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டியவர் முதலமைச்சர்தான்' எனவும் சம்பந்தன் உறுதியாகத் தெரிவித்தார்.
பொருளாதார மையம் குறித்து இறுதி முடிவை முதலமைச்சரே எடுப்பார்!- இரா.சம்பந்தன்....
Reviewed by Author
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment