முதன்முறையாக ரோம் நகரில் பெண் மேயர் தெரிவு
இத்தாலி தலைநகர் ரோம் நகர வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்நகரின் 3,000 ஆண்டு வரலாற்றில் ஒரு பெண் மேயராகத் தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறை என இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
நகைச்சுவை நடிகர் பெப் கிரில்லோவால் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட “ஐந்து நட்சத்திர இயக்கம்” என்ற அமைப்பு சார்பில் போட்டியிட்ட 37 வயதான விர்ஜினியா ரேகியின் வெற்றி, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.
வழக்குரைஞர் பட்டம் பெற்ற விர்ஜினியா ரேகி, உள்ளுர் கவுன்சிலராகப் பதவி வகித்தவர் ஆவார்.
சில மாதங்கள் வரை பெரும்பாலானவர்களால் அறியப்படாத விர்ஜினியா, அரசுக்கு எதிரான கடுமையான பிரசாரத்தின் மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற்று, மேயர் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு பிரபலமடைந்தார் என்று கூறப்படுகிறது.
ரோம் மாநகராட்சியின் மெத்தனப்போக்கால், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் மோசமடைந்துவிட்டது என நகர மக்கள் கோபத்தில் இருக்கும் நிலையில், விர்ஜினியா ரேகியின் சூடான பிரசாரம் அவர்களைக் கவர்ந்தது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, ரோம் நகருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன் சுமார் ரூ.2,368 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாகவும், அதனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விர்ஜினியா ரேகி கூறினார்.
வாடிகனிடமிருந்து வரி வசூல் செய்வதற்கு ரோமின் தற்போதைய மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
முதன்முறையாக ரோம் நகரில் பெண் மேயர் தெரிவு
Reviewed by Author
on
June 21, 2016
Rating:

No comments:
Post a Comment